பாடல் 1049 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது துரிய மீது சாராது ...... எவராலுந் தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத சுகம கோத தீயாகி ...... யொழியாது பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது ...... சலியாது பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடேது ...... புகல்வாயே நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள நிபிட தாரு காபூமி ...... குடியேற நிகர பார நீகார சிகர மீது வேலேவு நிருப வேத ஆசாரி ...... யனுமாலும் கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி ககன சாரி பூசாரி ...... வெகுசாரி கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
வேத மொழிக்குள் கேட்கப்படாததும், சரியை* மார்க்கத்தில் உள்ளவர்களால் காணப்படாததும், யோகியர் தன்மயமாய் நிற்கும் யோக* நிலையிலும் கூட அருகே நெருங்க முடியாததும், யாராலும் தொடர்ந்து அணுக முடியாததும், பெரிய மாயைகள் கூட தன்னுள்ளே புக முடியாததும், அழிவில்லாத ஆனந்தப் பெருங் கடலாய் என்றும் அழியாதிருப்பதும், சூரியன் காய்ந்து எரித்தாலும் அழியாததும், வடவா முகாக்கினி (ஊழித் தீ) மூண்டாலும் வெந்து போகாததும், காற்று வேகமாக வீசினாலும் அதனால் தள்ளுண்டு வீழாததும், சோர்ந்து அசைவற்றுப் போகாததும், கடல் நீர் சூழினும் அமிழ்ந்து போகாததும், எவ்விதமான படைகள் வந்து மோதினாலும் அழிவு படாததும் - இத்தனை தன்மைகளும் உள்ள மேலான ஞான வீடு எது என்று சொல்லியருள்க. அசுரர்களின் இருப்பிடங்கள் பாழாகவும், மகரம் முதலிய மீன்கள் வாழும் கடல் தீப்பற்றவும், நெருக்கமான கற்பகச் சோலைகள் உள்ள பொன்னுலகத்தில் தேவர்கள் குடி புகவும், குவிந்து கிடப்பதும், மிக்க கனமுள்ளதும், பனி மூடியதுமான கிரெளஞ்ச மலையின்மீது வேலைச் செலுத்திய அரசே, வேத ஆசாரியனான பிரமனும், வேத முதல்வனான திருமாலும் தியானிக்கின்ற சிவாகமங்களைத் தந்த குரு மூர்த்தி, பொன் மலையான மேருவாகிய வில்லை ஏந்திய பெருமான், ஞானாகாசத்தில் உலவுகின்றவர், பூதலங்கள்தோறும் வீற்றிருப்பவர், பல விதமான நடையை உடையவர், கயிலையில் பல நடனங்களை ஆடவல்ல தலைவர், எல்லாவற்றிலும் வசிப்பவர் ஆகிய சிவபெருமானது செல்வமான கருணைப் பெரு மலையே, தேவர்கள் பெருமாளே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1049 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போகாததும், மார்க்கம், தானான, முடியாததும், இடுதல், தேவர்கள், சரியை, ஞானம், தொழில், உள்ள, கடல், சாரி, காசாரி, பெருமாளே, படைகள், மீது, பூமி