பாடல் 1047 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ் சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான சமுக மோத ராபூத ...... முதலான சகள மோச டாதார முகுள மோநி ராதார தரணி யோநி ராகார ...... வடிவேயோ பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மாதேசி ...... மிகுஞான பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத பதும சேக ராவேலை ...... மறவாத கரத லாவி சாகாச கலக லாத ராபோத கமுக மூஷி காரூட ...... மததாரைக் கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
சுவை மிகுந்த வாய் இதழ் ஊறலைப் பருகி காம தாகம் நீங்கி, இனிமை தரும் சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி, மனம் வேறிடத்திற் போகாமல் (காமத்திலேயே) மனம் உருகி, ஒன்றிய மனத்துடன் நாள் தோறும் இன்பம் தரும் விலைமாதர்களின் தோள்களைச் சேர்ந்து விளையாடுகின்ற லீலை ஆசையானது (பின்வருவனவற்றில் ஒன்றாகுமோ?) சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட ஸாரியையோ, கிரியையோ, யோகமோ, ஞான மார்க்கமோ*, அல்லது இந்த மார்க்கங்களின் கூட்டமோ, மண் முதலான ஐந்து பூதங்களின் உருவத் திருமேனி விளக்கமோ, மூலாதாரம்** முதலான ஆறு ஆதாரங்களும் அரும்பு விட்ட தோற்றமோ, சார்பு வேண்டியில்லாத சூரிய ஒளியோ, உருவின்மையான ஒரு அழகு தானோ? (இவை ஒன்றுக்கும் ஈடாகாது என்ப). பரத நாட்டியம் ஆடவல்ல நீல மயில் வாகனனே, வரத மூர்த்தியே, பாம்பைத் தோளணி வகையாக அணிந்தவரும், பரம யோகியும், சிறந்த ஒளி வீசும் அழகு வாய்ந்தவரும், மிக்க ஞானம் நிறைந்த பரம மூர்த்தியுமான சிவபெருமானது குரு மூர்த்தியே, வேடர் குலத்தில் வளர்ந்த, கற்பு நிறைந்த, தூயவள் வள்ளியின் திருவடித் தாமரையை முடியில் சூடுபவனே, வேலாயுதத்தை மறவாத திருக்கரத்தை உடையவனே, விசாகனே, எல்லா கலைகளிலும் வல்லவனே, யானை முகத்தை உடையவரும், மூஞ்சூறின் மேல் ஏறி வருபவரும், நீரொழுக்குப் போல் மதநீர் ஒழுகுதல் உள்ளவரும் ஆகிய கணபதியின் தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்த நேரத்துக்குள் ஏழுலகையும் சுற்றி வந்த, மலர் போன்ற திருவடியை உடைய, கருணைப் பெரு மலையே, தேவர்களின் பெருமாளே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். ** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1047 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், மார்க்கம், தானான, ஞானம், முதலான, இடுதல், மலர், வந்த, உரிய, பெயர்களும், தொழில், ஆதாரங்களின், மூர்த்தியே, மறவாத, சரியை, பருகி, பெருமாளே, தரும், அழகு, சிறந்த, மனம், நிறைந்த