பாடல் 1046 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச ரமுத ளாவு மாவேச ...... மதுபோல அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி னளவு மோடி நீடோதி ...... நிழலாறித் துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத துறவ ரான பேர்யாரு ...... மடலேறத் துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய் பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான பவதி யாம ளாவாமை ...... அபிராமி பரிபு ரார பாதார சரணி சாம ளாகார பரம யோகி னீமோகி ...... மகமாயி கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி கனத னாச லாபார ...... அமுதூறல் கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
(முதல் ஏழு வரிகள் வேசையரின் கண்களை விவரிக்கின்றன). அம்பின் கூர்மை, வேலின் நுனி இவைகளின் அளவு போலக் கூர்மை கொண்டதாய், சிவபெருமான் அமுதாக உண்ட விஷத்தின் தன்மையைக் கொண்டுள்ளதாய், பொங்கி எழச்செய்யும் கள்ளைப் போன்றதாய், மிகவும் நீண்டதாய், பின்னும் அகன்றதாய், நெடிய காது இருக்கும் இடம் வரை ஓடி, கூந்தலின் நிழலில் இளைப்பாறி, தூக்கம் இல்லாத தேவர்களும், காம இச்சை கொள்ளாத வேடம் பூண்ட துறவிகள் யாவரும் மடல்* ஏறும் வகைக்கு, துணிச்சலுடன் உலவுகின்ற, நீலோற்பலம் போன்ற கண்களை உடைய விலைமாதர்களோடு இணக்கம் வைத்து வாடுகின்ற என்னை ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக. நெருங்கி எழும் மேகங்களின் கூட்டம் படிகின்ற இமயமலை அரசனான இமவானுடைய செல்வப் புதல்வியான பார்வதி தேவி, ஒரு வகைப் பச்சை நிறம் உடையவள், ஈசனின் இடது பக்கத்தில் உள்ளவள், பேரழகி, சிலம்பும், மலர் மாலைகளும் உள்ள பாதத் தாமரையாகிய திருவடிகள் உடையவள், மரகதப் பச்சை வண்ணத்தாள், பரதேவதை, அனைவருக்கும் அன்பு ஊட்டுபவள், பெரிய அம்பிகை, கயிலாசநாதரின் ஒரு பாகத்தில் உள்ளவள், எல்லாத் தேவர்களையும் ஆள்பவள், உலகம்மை ஆனவள், (அத்தகைய பார்வதி தேவியின்) பருத்த மார்பகங்களில் இருந்து ஊறின பாலமுதின் நறுமணம் வீசும் (வாயால்) வேதப் பாக்களாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராகத் தோன்றிப்) பாடிய கவிவாணனே, வேல் வீரனே, கருணை உருவான மேருமலையே, தேவர்கள் பெருமாளே.
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1046 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, பச்சை, உடையவள், உள்ளவள், உள்ள, பார்வதி, கூர்மை, அளவு, கருணை, பெருமாளே, கண்களை