பாடல் 1041 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான |
மாதா வோடே மாமா னானோர் மாதோ டேமைத் ...... துனமாரும் மாறா னார்போ னீள்தீ யூடே மாயா மோகக் ...... குடில்போடாப் போதா நீரூ டேபோய் மூழ்கா வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன் போதா காரா பாராய் சீரார் போதார் பாதத் ...... தருள்தாராய் வேதா வோடே மாலா னார்மேல் வானோர் மேனிப் ...... பயமீள வேதா னோர்மே லாகா தேயோர் வேலால் வேதித் ...... திடும்வீரா தீதார் தீயார் தீயு டேமூள் சேரா சேதித் ...... திடுவோர்தஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. |
தாயுடன் அம்மான்மாரும், மனைவியுடன் மைத்துனன்மாரும், என்னுடன் பகைமை பூண்டவர்கள் போல, பெரு நெருப்பின் இடையில், மாயைக்கும் ஆசைக்கும் இடம் தந்த இந்த உடலை இட்டு, நீரின் இடையே போய் முழுகி, பின்பு (மயானத்தை விட்டு) நீங்குதல் என்கிற துன்பத்துக்கு இடம் தந்து, உயிர் போவதற்கு முன்பாக, ஞான உருவத்தனே, கண் பார்த்து அருள்வாயாக. சிறப்பு நிறைந்த தாமரை மலர்போன்ற திருவடியின் அருளைத் தருவாயாக. பிரமனுடன் திருமால், மற்றும் விண்ணில் உள்ள தேவர்கள் இவர்களின் உடலில் கண்ட பயம் நீங்குவதற்கு, தானவர்களாகிய அசுரர்கள் மேம்படாதவாறு ஒப்பற்ற வேலாயுதத்தால் அவர்களை வதைத்திட்ட வீரனே, கொடியவர்களாகிய திரிபுராதி அசுரர்கள் தீயின் இடையே சேரும்படி அழித்தவராகிய சிவபெருமானின் குழந்தையே, செவ்வேள் முருகனே, அழகனே, தலைவனே, தேவனே, தேவர்களுக்கெல்லாம் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1041 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, இடையே, அசுரர்கள், இடம், வேதா, வோடே, போதா, பெருமாளே