திருவாரூர் - தமிழக மாவட்டங்கள்
திருவாரூர்த் தேர்:
'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். 'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம். மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.
தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர். 'ஆழி' என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவாரூர்த் தேர் |
1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.
தேரின் அமைப்பு:
அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.
இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை.
26.4.98 அன்று தமிழக அறநிலையத்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மு.தமிழ்குடிமகன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
வேளாண்மை:
திருவாரூர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலே வேளாண்மைதான். கீழத்தஞ்சை மாவட்டமாக உள்ள இப்பகுதிகள் பொன் விளையும் பூமி. மேட்டூர் அணை கட்டிய பிறகு வடவாற்றுக் கால்வாயால் மன்னார்குடி வட்டம் பெரும்பயன் அடைந்திருக்கிறது. நன்னிலம் வட்டத்தையொட்டிய பகுதிகள் மிகுந்த வளம் அடைந்திருக்கின்றன. நன்னிலம் வட்டம் நல்ல மழையும், நிலவளமும், ஆற்றுவளமும் ஒருங்கே பெற்றுள்ளது. நன்னிலம் வட்டம் தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக நிலவரி செய்யும் மாவட்டம் ஆகும்.
வெண்ணாற்றுக் கால்வாய் திருத்துறைப்பூண்டி வட்டம் வழியே கடலில் கலக்கிறது. ஆனால் இவ்வட்டத்துக்கு வரும் முன்னரே தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. எனவே இவ்வட்டம் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. இருந்தாலும் திருத்துறைப்பூண்டி வட்டாரங்களில் நன்செய் நிலங்களும், நாச்சிக்குளம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் தென்னந்தோப்புக்களும் உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - Thiruvarur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவாரூர், ஆண்டு, தமிழக, சுமார், திருவாரூர்த், தேர், வட்டம், மாவட்டங்கள், tamilnadu, நன்னிலம், சக்கரங்கள், எடையுள்ள, தேரின், தமிழ்நாட்டுத், தகவல்கள், நான்கு, பிரேக், பயன்படுத்தப்பட்டு, டன்களாகும், வடம், ஹைட்ராலிக், பேர், வட்டாரங்களில், | , திருத்துறைப்பூண்டி, thiruvarur, districts, சேர்ந்து, information, ஆழித்தேர், பின்னர், திருவிழா, என்பது, தேரே, தேராகும், மீண்டும், அறியலாம், இரும்பு, அச்சுக்கள், விமானம், அடியாகும், அலங்கரிக்கப்படாத, உயரம், உள்ள