திருவாரூர் - தமிழக மாவட்டங்கள்
திருவாரூர்
தியாகராசர் கோயிற் சிறப்புகள்:
இவ்வூர்த் தியாகராசர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.
கோயில் ஐந்து வேலி
குளம் ஐந்து வேலி
ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி - 1000 அடி நீளம் 700 அடி அகலம்) இத்தலத்தின் கோயில், கமலாலயக் குளம், இறைவனுக்குச் சார்த்தப்பெறும் செங்கழுநீர் மலரோடை இவை ஒவ்வொன்றும் ஐந்துவேலி பரப்புடையது.
தியாகராசர் கோயில் |
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.
அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார், மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.
63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும். இவ்வாலயம் கோயில்களின் கூடாரம். 9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோயில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.
அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கருப்பக் கிருகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன்வேய்ந்தான் என்பதும், திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும், திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.
இக்கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர். இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார். கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோயிலின் பிற சிறப்புகளாகும். இக்கோயிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது. மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது. சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே. பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோயில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது. தண்டபாணிக் கோயில், இராஜதுர்கை கோயில், மாணிக்க நாச்சியார் கோயில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.
இக்கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்.
64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர். இக்கோயிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.
இக்கோயிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார். அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம். இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோயிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது. அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோயில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.
'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - Thiruvarur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோயில், திருவாரூர், ஐந்து, தியாகராசர், tamilnadu, வேலி, தமிழக, மாவட்டங்கள், நூற்றாண்டில், இக்கோயிலின், இக்கோயிலிலுள்ள, என்பதும், கல்வெட்டு, பெரிய, மன்னர், தமிழ்நாட்டுத், தகவல்கள், திருவாரூர்ப், உள்ளது, பாடியுள்ளார், மீது, இக்கோயிலில், | , பற்றி, ஆரூர், இவர், thiruvarur, இரண்டாம், information, இவ்வூர்த், குளம், சுந்தரர், சகாஜி, முதலாம், இராஜேந்திரன், சிறப்பாக, districts