சங்க காலம்
சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப்பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும் திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஓவ்வொரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர்.
அரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின்மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயாகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்ளை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன.
சங்க கால சமூகம்
ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த பகுதி
முல்லை - மேய்ச்சல் காடுகள்
மருதம் - வேளாண் நிலங்கள்
நெய்தல் - கடற்கரைப் பகுதி
பாலை - வறண்ட பூமி
இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.
1. குறிஞ்சி - முதன்மைக் கடவுள் முருகன். தொழில் - வேட்டையாடுதல், தேன் எடுத்தல்
2. முல்லை - முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு). தொழில் - ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி
3. மருதம் - முதன்மைக் கடவுள் இந்திரன். தொழில் - வேளாண்மை
4. நெய்தல் - முதன்மைக் கடவுள் வருணன். தொழில் - மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி
5 பாலை - முதன்மைக் கடவுள் கொற்றவை. தொழில் - கொள்ளையடித்தல்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்க காலம் , சங்க, வரலாறு, முதன்மைக், தொழில், கடவுள், இந்திய, காலம், முல்லை, மருதம், பகுதி, நெய்தல், குறிஞ்சி, பாலை, உற்பத்தி, பற்றி, பெற்றிருந்தனர், பெயர்களாகும், காலத்தில், இந்தியா, மீன், அதிகாரிகள், குறிப்பிடுகிறது, முக்கிய, ஐந்து, பொருட்கள்