சங்க காலம்
சமயம்
சங்க காலத்தின் முதன்மைக்கடவுள் முருகன் அல்லது சேயோன். தமிழ்க்கடவுள் என அவர் போற்றப்பட்டார். முருக வழிபாடு தொன்மை வாய்ந்தது. முருகன் தொடர்பான விழாக்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுபடை வீடுகள் அவனுக்கே உரித்தானவை. மாயோன் (விஷ்ணு), வேந்தன் (இந்திரன்), வருணன், கொற்றவை போன்ற கடவுள்களையும் சங்க காலத்தில் வழிபட்டனர். வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது, போர்க்களத்தில் வீரனது ஆற்றலையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அவனது நினைவாக வீரக்கல் நடப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மறைந்த வீரர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வீரக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீத்தோர் வழிபாடு மிகவும் தொன்மையானதாகும்.
மகளிர் நிலை
சங்க காலத்தில் மகளிர் நிலை குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவ்வையார், நச்செள்ளையார், காக்கைபாடினியார் போன்ற பெண் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகளிரின் வீரம் குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு பெண்களின் தலையாய விழுமியமாகப் போற்றப்பட்டது. காதல் திருமணம் சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். இருப்பினும் கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் 'சதி' என்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும் உயர்குடியினரும் நாட்டிய மகளிரை ஆதரித்துப் போற்றினர்.
நுண்கலைகள்
கவிதை, இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கின. அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் போன்றோர் புலவர்களுக்கு தாராளமாக பரிசுப் பொருட்களை வழங்கி ஆதரித்தனர். பாணர், விறலியர் போன்ற நாடோடிப் பாடகர்கள் அரசவைகளை மொய்த்த வண்ணம் இருந்தனர். நாட்டுப்புற பாடல்களிலும் நாட்டுப்புற நடனங்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தனர். இசையும் நடனமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. சங்க இலக்கியங்களில் பல்வேறு வகையிலான யாழ்களும், முரசுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிகையர் நடனத்தில் சிறந்து விளங்கினர். 'கூத்து' மக்களின் சிறந்த பொழுதுபோக்காக திகழ்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்க காலம் , சங்க, வரலாறு, இந்திய, காலத்தில், நிலை, வழிபாடு, குறிப்பிடப்பட்டுள்ளன, குறித்து, காலம், வீரக்கல், நாட்டுப்புற, நுண்கலைகள், மிகவும், பல்வேறு, மகளிர், இலக்கியங்களில், முருகன், அந்தணர், அரசர், இந்தியா, பாணர், போன்றோரும், வாழ்ந்தனர், இக்காலத்தில், அல்லது