சங்க காலம்
தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது, சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன். அவனது இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள், பாண்டியர்கள் பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தான். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தான். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவன் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கரிகாலன் அமைத்தான். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான்.
பாண்டியர்கள்
தற்காலத்திய தெற்குத் தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. நெடியோன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னர்களாவர். ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், கோவலன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திளிருந்த தலையாலங்கானம் என்ற விடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்த்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும், பாண்டிய நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகள் குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி விழ்ச்சியடைந்தது.
குறுநில மன்னர்கள்
சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் முக்கிய பங்காற்றினர். பாரி, காரி, ஓரி, நல்லி, பேகன், ஆய், அதியமான் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்க காலம் , சங்க, வரலாறு, குறுநில, பாண்டிய, இந்திய, நெடுஞ்செழியன், மன்னர்கள், கரிகாலன், போர், பாண்டியர்கள், காலம், காலத்தில், பெருவழுதி, ஆட்சி, நாட்டின், இந்தியா, மருதனார், மாங்குடி, கட்டுப்பாட்டில், அவன், தலைநகரம், வெற்றிகள், சிறப்பு, சோழர்களின், தற்காலத்திய, அவனது, போரில், மற்றொரு