டெல்லி சுல்தானியம்
இல்பாரி குலத்தைச் சேர்த்தவர் இல்துத்மிஷ். எனவே அவரது அரசு குலம் இல்பாரி குலம் எனப்பட்டது. அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களால் ஐபக்கிடம் அடிமையாக விற்கப்பட்டவர் இல்துத்மிஷ். ஐபக் தமது மகளை அவருக்கு திருமணம் செய்துவைத்து மருமகனாக்கிக் கொண்டார். பின்னர், அவரை குவாலியரின் இக்தாதார் பதவியிலும் அமர்த்தினார். 1211ல் இல்துத்மிஷ் ஆரம் பக்ஷை விரட்டிவிட்டு சுல்தானாக பதவியேற்றார். லாகூரிலிருந்த தலைநகரை அவர் டெல்லிக்கு மாற்றினார். அவரது ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகள் தமது அரியணையை போட்டியாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதிலேயே கழிந்தது, இதற்கிடையில் மங்கோலியர்களின் தலைவனான செங்கிஸ்கான் என்று அனைவராலும் அழைக்கப்படும் தெமுஜின் மத்திய ஆசியாமீது படையெடுப்பைத் தொடங்கியிருந்தார். அங்கு குவாரிசம் ஆட்சியாளரான ஜலாலுதீன் மங்கபர்னி என்பவரை முறியடித்தார். சிந்து நதியைக் கடந்து இந்தியாவிற்குள் ஓடிவந்த மங்கபர்னி இல்துத்மிஷிடம் புகலிடம் கேட்டார். மங்கோலியரிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக மங்கபர்னிக்கு புகலிடம் கொடுக்க இல்துத்மிஷ் மறுத்தார் . நல்ல வேளையாக செங்கிஸ்கான் இந்தியாவிற்குள் படையெடுத்து வராமல் திரும்பிச் சென்றார். இல்துத்மிஷ் பின்பற்றிய திறமையான மங்கோலியக் கொள்கையால், இந்தியா செங்கிஸ்கானின் சூறைக்குத் தப்பியது.
இல்துத்மிஷ் கல்லறை |
இல்துத்மிஷ் சிறந்த ஆட்சியாளர். 1229 ஆம் ஆண்டு காலிப்பிடம் இருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற்று அவர் இந்தியாவின் சட்ட முறையான ஆட்சியாளரானார். பின்னர் தமது வாரிசாக ரசியா என்ற தனது மகளை அவர் நியமித்தார். டெல்லி சுல்தானியத்திற்கு பரம்பரை வாரிசு முறையை இவ்வாறு இல்துத்மிஷ் தொடங்கி வைத்தார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த அறிஞர்களையும் சூஃபி துறவிகளையும் இல்துத்மிஷ் ஆதரித்தார். மின்ஹஜ்-உஸ்-சிராஜ், தாஜூதின், நிசாம் உல் முல்க் முகமது ஜெய்னதி, மாலிக் குத்புதீன் ஹசன், பக்ருல் முல்க் ஈசாமி போன்றோர் அவரது காலத்தில் வாழ்ந்து அவரது அவையை அலங்கரித்த அறிஞர்கள். இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடமான (238 அடி) குதுப்மினாரை கட்டிமுடித்த அவர் ஆஜ்மீரில் அழகிய மசூதி ஒன்றையும் கட்டினார். இந்தியாவில் அராபிய நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் இல்துத்மிஷ். 175 கிராம் எடைகொண்ட வெள்ளி தாங்கா என்ற அவரது நாணயம் இடைக்கால இந்தியா முழுவதும் ஏற்கப்பட்டது. தற்காலத்திய ரூபாய்க்கு அவரது வெள்ளி நாணயமே அடிப்படை என்று கூறலாம். வலிமை வாய்ந்த நாற்பது படைத் தலைவர்கள் கொண்ட நாற்பதின்மர்குழு ஒன்றையும் இல்துத்மிஷ் உருவாக்கினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , இல்துத்மிஷ், அவரது, அவர், வரலாறு, டெல்லி, இந்திய, தமது, இந்தியா, சுல்தானியம், இந்தியாவின், முறையை, இந்தியாவிற்குள், புகலிடம், ஒன்றையும், வெள்ளி, சிந்து, முல்க், காலத்தில், கொண்டார், குலம், இல்பாரி, மகளை, பின்னர், அங்கு, செங்கிஸ்கான், மங்கபர்னி