வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 71
“ஆம், தாத்தா! நான் அந்தக் குட்டியைப் பார்த்தேன். நம்முடைய குதிரையைப் பார்க்கிலும் அதன் கழுத்து நீளமாய்த்தானிருந்தது. ஆனாலும் இக்கரையிலிருந்து அக்கரையிலிருக்கும் புல்லை மேய்வது என்பது சுத்தப் பொய்.”
“இந்தப் பொய்யர்களான கீழ் மத்ரர்களும் பர்ஷுக்களும்தான் தாமிர ஆயுதப் பயித்தியத்தைப் பரப்பினார்கள். என்னுடைய தகப்பனார் காலத்தில்
இதே ஆயுதங்களைக் கொண்டுதான் பர்ஷுக்கள் எங்கள் மீது யுத்தம் தொடுத்தார்களாம். அதனால் நம்முடைய கிராமத்தார் இரண்டு குதிரைகளுக்கு ஒரு தாமிரக் கோடாரி வீதம் அப்பொழுது கீழ் மத்ரர்களிடமிருந்து வாங்க நேர்ந்தது.”
“தாத்தா! உலோக ஆயுதங்களுக்கு எதிராக, கல் ஆயுதங்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாதல்லவா?”
“ஆம். கல் ஆயுதங்கள் உபயோகப்படவில்லை. இதனாலேயே நாங்களும் உலோகத்தால் செய்த ஆயுதங்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உங்கள் புருகுலத்தார் மீது, கீழ் மத்ரர்கள் யுத்தம் தொடுத்தபோது உங்கள் குலத்தார் எங்கள் மேல்-மத்ர குலத்தாரிடமிருந்து உலோக ஆயுதங்களைப் பொருள் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். மேல் மத்ரர்களுக்கும், புருக்களுக்கும் எப்பொழுதும் யுத்தமே ஏற்பட்டதில்லை. ஆனால் குழந்தாய்! அந்தப் பர்ஷுகுலத்தோரும் கீழ் மத்ர குலத்தோரும் இருக்கிறார்களே அவர்கள் எப்பொழுதும் திருட்டுத் தொழிலே செய்து வருகிறார்கள். புராதனமானதும் புனிதமானதுமான காரியங்களை விட்டுவிட்டு, எப்பொழுதும் புதிய புதிய காரியங்களைச் செய்துகொண்டு வருகின்றனர். அவர்களாலேயே, அவர்களுடைய செய்கைகளாலேயே நாங்களும் எங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக-நாங்கள் வாழ்வதற்காக, அவர்களைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. கீழ் மத்ரர்களும், பர்ஷுக்களும் உலோக ஆயுதங்களைக் கைவிடும் வரை நாமும் விட முடியாது. அவ்விதம்
வை விடுவதானது நமக்குத் தற்கொலைக்கு ஒப்பாகும். ஆனாலும் இந்த உலோக ஆயுதங்களைப் பற்றிச் செய்யப்படும் பிரச்சாரம் இருக்கிறதே அது மிகைப்படுத்திச் செய்யப்படுகிறது; கெட்ட விதமாகச் செய்யப்படுகிறது. இந்தப் பாவப் பிரச்சாரத்தைச் செய்பவர்கள் அந்த இரண்டு குலத்தோருந்தான். அவர்களுக்கு ஒரு போதும் தேவதைகளின் ஆசீர்வாதம் கிடைக்காது. இருள் நிறைந்த பாதாளத்தில் தள்ளப்படுவார்கள். இவர்களைப் பார்த்துப் பார்த்தும் இவர்களால் ஏற்பட்ட பயத்தினால் தான், கல்லாலும், மண்ணாலுமான நம்முடைய கிராமங்கள் உற்பத்தியாயிற்று; நினைத்தபோது நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய இந்தக் கூடார வாழ்க்கை போய், அசைக்க முடியாத கிராம வாழ்க்கை வந்து விட்டது. கீழ் மத்ரர்களும் பர்ஷுக்களும் எங்கு போய்ப் பார்த்து வந்தார்களோ தெரியாது. உலோக ஆயுதங்களைக் கொண்டு பூமாதேவியின் நெஞ்சைக் கிழிக்கிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 71, கீழ், புத்தகங்கள், உலோக, நம்முடைய, பக்கம், ஆயுதங்களைக், எப்பொழுதும், கொண்டு, மத்ரர்களும், வால்காவிலிருந்து, கங்கை, “ஆம், மேல், உங்கள், நாங்களும், ஆயுதங்களை, மத்ர, வாழ்க்கை, செய்யப்படுகிறது, பர்ஷுக்களும், ஆயுதங்களைப், வாங்க, இரண்டு, இந்தக், கழுத்து, புல்லை, அந்தக், ஆனாலும், ஒட்டகம், யுத்தம், மீது, எங்கள், சிறந்த, கரையிலே