வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 70
இவர்களுடைய இதயத்திலே அதற்குரிய மரியாதையைக் காணோம்! இதனாலே எத்தனை புதிய புதிய வியாதிகள் வருகின்றன? இவர்கள் மீது அந்தத் தெய்வங்கள் கோபத்தைச் செலுத்துவதில் பிசகொன்றும் இல்லையே.”
“தாத்தா! இந்தத் தாமிரக் கோடரி, ஈட்டி, கத்தி முதலிய ஆயுதங்களை எப்படி நாம் ஒழிக்க முடியும்? இவைகளை நாம் ஒழித்துவிட்டால், நம்முடைய எதிரிகள் நம்மை ஒரே நாளில் ஒழித்துவிடுவார்களே!”
“நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இரண்டு மாதங்களுக்கு உணவாகவோ அல்லது வாழ்நாள் பூராவும் வாகனமாகவோ உபயோகப் படக்கூடிய குதிரையை மகிழ்ச்சியோடு கொடுத்துவிட்டு இந்தத் தாமிர ஆயுதங்களை வாங்கும் முட்டாள்தனத்தை மட்டுமா செய்கிறார்கள்? இந்தக் கீழ் மத்ரர்களும், பர்ஷுக்களும், பூமி மாதாவினுடைய வயிற்றையும் அல்லவா கிழிக்கிறார்கள். *இந்த வட்சு நதி எதுவரை போகிறதென்பது எனக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாது. ஆனால் இதைப் பற்றிப் பொய்யர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? பூமியின் கடைசியில் எங்கேயோ ஏராளமான தண்ணீர் இருக்கிறதாம்; இந்நதி அதிலே சென்று கலக்கிறதாம்! எவ்வளவு பெரிய பொய்! கீழ்மத்ரர்கள்-பர்ஷுக்கள் இவர்களுடைய பூமிக்கு அந்தப் பக்கம் வட்சுநதி சமதளத்தில் ஓடுகிறது. அங்கே பொய்யர்களான தேவ சத்துருக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் சொல்லும் பொய்யை இன்னும் கேள். அங்கே முரட்டுக் கால்களையுடைய குன்றுகள் மாதிரி பெரிய பெரிய பிராணிகள் இருக்கிறதாம். இன்னும் என்னென்னமோ சொன்னார்கள்; நான் மறந்துவிட்டேன்.
எனக்கு ஞாபக சக்தியும் வரவரக் குறைந்து கொண்டே வருகிறது.”
“தெரியும் தாத்தா! ஒட்டகம். ஆனால் இது குன்று மாதிரி அவ்வளவு பெரியதாயில்லை. ஒரு நாள் கீழ் மத்ரர் ஒருவர், ஒட்டகக் குட்டி ஒன்று கொண்டு வந்திருந்தார். ஆறு மாதக் குட்டி என்றும் சொன்னார். அது நம்முடைய குதிரை அவ்வளவு பெரியதாக இருந்தது.”
“பார்த்தாயா? வெளி தேசங்களில் சுற்றி வருகிறவர்கள், பொய் சொல்லவும் நிறையக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். அந்த....என்ன சொன்னாய்?”
“ஒட்டகம்.”
___________________________________________________
*நிலத்தை உழுதலை கிழவர் குறிப்பிடுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 70, புத்தகங்கள், பக்கம், பெரிய, வால்காவிலிருந்து, கொண்டு, கங்கை, பொய், என்ன, இருக்கிறதாம், இன்னும், குட்டி, அவ்வளவு, மாதிரி, தெரியாது, அங்கே, ஆயுதங்களை, மாதங்களுக்கு, கிராமம், அந்தக், சிறந்த, எப்படி, இவர்களுடைய, நம்முடைய, நாம், இந்தத், கீழ்