வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 65
“ஆம், ரோசனா! ரொம்பக் கிராக்கி, ஒரு குதிரையும் இந்தச் செம்புப் பாத்திரமும் சரிக்குச் சரி. இருந்தாலும் வழிப் பயணத்திற்குச் சௌகரியமாயிருக்கிறது.”
“அப்படியானால், உன்னிடம் கால்நடைகள் அதிகமாயிருக்கும்.”
“ஆம் ரோசனா! தானியமும் ஏராளமாயிருக்கிறது. ஆகையால்தான் ஒரு குதிரையை விலையாகக் கொடுத்து விட்டு இந்தச் செம்புப் பாத்திரத்தை வாங்கினேன். சரி, இருக்கட்டும், மாமிசத்தைத் துண்டு துண்டாக
நறுக்கிவிட்டேன். நீ தண்ணீரை விட்டு, உப்பும் போட்டு நெருப்பிலே வை. நான் அந்தப் பக்கம் நெருப்பு தயார் செய்கிறேன். அப்பால் கொஞ்சம் புல் அறுத்துக்கொண்டு வந்துபோட்டு, ஆடுகளையும் கழுதைகளையும் மத்தியில் இந்த இடத்தில் கட்ட வேண்டும். நமக்குக் கன்றின் மாமிசம் எவ்வளவு பிரியமோ அதே மாதிரி புலிக்குக் கழுதை மாமிசம் பிரியம் என்பது உனக்குத் தெரியுமே! ஜப்ரா, அதுவரை நீயும் இதை ருசி பார்த்துக் கொண்டிரு” என்று சொல்லிக் கொண்டே கொஞ்சம் மாமிசம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு எலும்புத் துண்டை அதன் முன்னே போட்டான். உடனே அந்த நாய் வாலை ஆட்டிவிட்டு, எலும்பைத் தன் கால்களுக்கிடையே போட்டு அழுத்திக்கொண்டு பற்களால் அதைக் கடிக்கத் தொடங்கியது.
புருகூதன், தன் மேல் அங்கியையும் இடுப்பிலே கட்டியிருந்த நீண்ட இடைக் கச்சையையும் கழற்றினான். உடையிலிருந்து வெளிவந்த அவனுடைய சதை திரண்ட புஜங்களும் முன்னே நிமிர்ந்து அகன்ற மார்பும் அந்த இருபது வயது வாலிபனின் எல்லையற்ற பலத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. அவன் வேலை செய்யும் போது ஏற்படும் ஒவ்வொரு அங்கங்களின் அசைவும் அவனுடைய திறமையை எடுத்துக்காட்டின. கூடையிலிருந்து சிறு அரிவாளையெடுத்துக் கொஞ்ச நேரத்திற்குள் ஒரு சிறு குன்று மாதிரி புற்களை அறுத்துக் குவித்துவிட்டு கழுதைகளைக் காதைப் பிடித்து இழுத்து வந்து புற்குவியலுக்கு முன்னால் கட்டினான். அப்படியே ஆடுகளையும் கொண்டு வந்து சேர்த்தான்.
வேலைகளெல்லாம் முடிந்ததும் புருகூதன் நெருப்புக்குச் சமீபமாகப் போய் உட்கார்ந்தான். ரோசனா ஒரு சிறிய தட்டினால் கொதிக்கும்போது மேலே வரும் மாமிசத் துண்டுகளை எடுத்து எடுத்து ஒரு தோலின்மீது வைத்துக் கொண்டே இருந்தாள். புருகூதன் தன்னுடைய கூடையிலிருந்த ஒரு தோலை எடுத்துப் பூமியின் மீது விரித்தான். தண்ணீர் வைத்துக்கொள்ளவும், குடிக்கவும், மரத்தினால் செய்யப்பட்ட இரண்டு சிறிய பாத்திரங்களையும் எடுத்து வெளியில் வைத்தான். அவைகளோடு கூட அவனுடைய புல்லாங்குழலும் வெளியில் வந்து விழுந்தது! பச்சிளங் குழந்தை தவறி விழ, பதறி எடுக்கும் தாயைப்போல, அந்தக் குழலை எடுத்து துடைத்து முத்தமிட்டு, திரும்பவும் கூடையிலே வைத்தான்; இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரோசனா வியப்புற்று,
“புருகூத! உனக்குக் குழல் ஊதத் தெரியுமா?”
“ரோசனா! இந்த வாத்தியம் எனக்கு மிகவும் பிரியமானது. இதோடு என்னுடைய ஜீவனும் ஒட்டியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 65, புத்தகங்கள், பக்கம், ரோசனா, எடுத்து, புருகூதன், அவனுடைய, வந்து, மாமிசம், வால்காவிலிருந்து, கங்கை, சிறு, சிறந்த, “ஆம், சிறிய, வைத்தான், வெளியில், அந்த, முன்னே, கொஞ்சம், போட்டு, விட்டு, ஆடுகளையும், இந்தச், கொண்டே, பார்த்துக், மாதிரி, செம்புப்