வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 49
“மதுரா! இப்போது உனக்கு எவ்வித ஆபத்தும் கிடையாது. நீ எங்கே போக விரும்புகிறாய்?”
இந்த வார்த்தைகளைக் கேட்ட மதுராவினுடைய முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. ஆனால், அதை அவள் மறைக்க முயன்றாள். இதை அறிந்து கொண்ட அமிர்தாஸ்வனும், தன்னுடைய பேச்சை வேறு பக்கம் திருப்பி,
“எங்களுடைய கிராமத்துக்கும், உங்களுடைய பக்த குலத்துப் பெண்கள் வந்திருக்கிறார்கள்” என்றான்.
“யாவரும் திருடப்பட்டா?”
“இல்லை, அவர்களில் மாமன் மகள் அதிகம்.”
“இருக்கலாம். ஆனால் பெண்களைத் திருடிக் கொண்டு போகும் இந்தச் செய்கை எனக்கு ரொம்ப வெறுப்பாயிருக்கிறது.”
“எனக்கும் அப்படித்தான் மதுரா! இதனால், நாயக நாயகிகளாகும் அவர்களுக்கிடையில், ஒருவரையொருவர் காதலிக்கிறார்களா என்பதுங்கூட உணர முடியாமல் போகிறது.”
“இதைப் பார்க்கிலும், மாமன் மக்களுக்கிடையே விவாகம் நடை பெறுவது ரொம்பவும் நல்லது. ஏனென்றால் ஏற்கனவே இருவருக் கிடையிலும் பரிச்சயம் உண்டாவதற்கு ஏதுவிருக்கிறதல்லவா?”
“மதுரா! உனக்கு யாராவது இப்படிப்பட்ட காதலர்கள் இருக்கிறார்களா?”
“இல்லை. எனக்கு மாமாவோ மாமியோ கிடையாது.”
“வேறு யாராவது காதலர்கள்?”
“அந்த எல்லையை அடைந்தவர் யாருமில்லை.”
“அப்படியானால் எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமா?”
இப்பொழுது மதுராவினுடைய கண்கள் வெட்கத்தால் பூமியை நோக்கின. உடனே அமிர்தாஸ்வன், பேச்சை வேறு திசையில் திருப்பினான்.
“மதுரா! பெண்கள் பிறருக்குச் சொந்தம் ஆகாமல் சுதந்திரமாக வாழும் சமூகம் இருப்பது உனக்குத் தெரியுமா?”
“எனக்கு விளங்கவில்லையே?”
“அந்தப் பெண்களை யாரும் திருடிக்கொண்டு போவதில்லை. ஒரு
வாலிபன் ஒரு பெண்ணைத் தன்னுடைய சொந்த மனைவியாக வைத்துக் கொள்ள முடியாது. அங்கே பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே மாதிரியான சுதந்திரம்.”
“அப்படியானால், ஆண்களைப் போலவே பெண்களும் ஆயுதம் ஏந்துவார்களா?”
“ஆம்; அங்கே பெண்களுக்குப் பூரண சுதந்திரம் உண்டு.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 49, புத்தகங்கள், பக்கம், “மதுரா, கங்கை, வால்காவிலிருந்து, எனக்கு, மாமன், யாராவது, அங்கே, சுதந்திரம், “இல்லை, “அப்படியானால், காதலர்கள், பேச்சை, உனக்கு, சிறந்த, கிடையாது, மதுராவினுடைய, வேறு, தன்னுடைய, பெண்கள்