வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 350
1920ம் வருடம் டிசம்பர் மாதம் முதலாவது வாரத்தில் நமது நாட்டின் எத்தனையோ தேச சேவகர்களைப் போலவே, சங்கரும், சபதரும் ஒவ்வொரு வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பைஜாபாத் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் சிறை சென்ற பிறகும் சம்பாவும் சகீனாவும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்களென்றாலும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
ஜெயிலிலே சபதர், நாள்தோறும் ஒழுங்காக ஒரு மணி நேரம் நூல் நூற்று வந்தார். காந்தீயத்திற்கு எதிரான அவருடைய அரசியல் கொள்கைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்கள், அவர் சர்க்கா சுழற்றுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுக்குச் சபதர், “அந்நியத் துணிப் பகிஷ்காரத்தை, நான் ஓர் அரசியல் ஆயுதம் என்றே கருதுகிறேன். மேலும் நமது நாட்டிலே போதுமான துணிகள் உற்பத்தியாகவில்லை. ஆகவே, நாம் சர்க்கா மூலமாவது துணிகளை உற்பத்தி செய்யத்தான் வேண்டும். ஆனால் தேசத்தில் போதுமான அளவு மில் துணிகள் தயாரிக்கப்படும் பொழுதும், சர்க்காவைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் அல்ல நான்” என்று கூறினார்.
ஜெயிலிலே உட்கார்ந்து கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்களின் கூட்டம் அதிகமாயிருந்தது. இவர்கள் காந்திஜியின் ‘ஒரு வருடத்தில் சுயராஜ்யம்’ என்ற வார்த்தையில் நம்பிக்கை வைத்து கையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஜெயிலுக்கு வந்ததோடு, தங்கள் வேலை முடிந்து விட்டதாகவும் கருதினார்கள். காந்திஜியும் இது வரை சூழ்ச்சி, ஏமாற்றம், போலி வேஷம் எதையும் ஏற்றுக் கொள்ளாததால், அந்த ஒத்துழையாமை இயக்கக் கைதிகளில் பெரும்பாலோர் நேர்மையான தேச சேவகர்கள் என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவர்களில் ஒருவராவது தங்கள் அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படாததைக் கண்டு சபதரும் சங்கரும் வருத்தப்பட்டார்கள். அவர்களில் பலர் ராமாயணத்தையும் குரானையும் படித்து உருப்போடுவதில் நேரத்தைச் செலவிட்டனர். சிலர், சீட்டாடுவதில் காலத்தை வீணாக்கினர்.
ஒருநாள், காந்தீயக் கொள்கையின் சிறந்த வித்வானான விநாயக பிரஸாதிற்கும், சபதருக்கும் தர்க்கம் தொடங்கியது. அப்போது சங்கரும் கூடவே இருந்தார்.
“அஹிம்ஸையை அரசியலிலே உபயோகித்தது, காந்திஜியின் அற்புதமான சிருஷ்டி. அது ஒரு தோல்வியறியாத ஆயுதம்” என்றார் விநாயக பிரசாத்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 350, புத்தகங்கள், பக்கம், வேண்டும், அரசியல், சங்கரும், கங்கை, வால்காவிலிருந்து, சிறந்த, காந்திஜியின், தங்கள், துணிகள், அவர்களில், விநாயக, ஜெயிலிலே, சபதரும், நமது, வேலை, சபதர், சர்க்கா, போதுமான