வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 348
“சங்கருமா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள், சகீனா.
“சங்கர் ஒரு ரத்தினம் சகீனா; ரத்தினம்! அவன் என்னோடு கூட உலகத்தின் கோடிக்கும் வருவான். ஆக்ஸ்போர்டிலே அவனில்லாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன்.”
“ஆனால் சபதர்! சங்கர் செய்யும் தியாகம் உங்களை விட அதிகமாகும்.”
“அவன் தியாக வாழ்க்கையை வேண்டுமென்றே வலிய ஏற்றுக்கொண்டான் சகீனா! புரிந்துகொண்டே, செல்வப் பாதையைத் திரும்பிப் பார்க்க மறுத்தான். அவன் விரும்பியிருந்தால், பிரபல வக்கீலாகியிருக்கலாம்; அல்லது, அரசாங்கத்தில் பெரிய வேலையைப் பெற்றிருக்கலாம்.”
“அவருடைய இரண்டு குழந்தைகளும் இறந்தபொழுது நான்மிகவும் கவலைப்பட்டு அழுதேன். ஆனால் இப்பொழுது அவை இரண்டும் போனது அவருக்குப் பாரக் குறைவென்றே கருதுகிறேன்.”
“சங்கரின் இந்த முடிவைக் கேட்டு சம்பா என்ன சொல்லுவாள் சகீனா?” “அவள் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றுவாள். அவள்தான், எனக்கு உங்களைக் காதலிப்பதற்கும் கற்றுக்கொடுத்தவள் சபதர்!”
“இப்பொழுது நாம் நமது எதிர்கால வாழ்க்கை முறையைப் பற்றியும் நிச்சயிக்க வேண்டும்.”
“இப்பொழுதுதானே என்னிடம் விஷயத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள். அவைகளைப் பற்றி யோசிக்க எனக்கு எங்கே நேரமிருக்கிறது? அதை நீங்களே சொல்லுங்கள்.”
“நமது கிராமத்திலிருந்து வந்துள்ள சரீபன், மங்கர் இருவரையும்
வைத்துக்கொண்டு, மற்ற எல்லா வேலைக்காரர்களையும் இரண்டு இரண்டு மாதச் சம்பளத்தை இனாமாகக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும்.”
“சரி.”
“இரண்டு மோட்டார்களையும் விற்றுவிட வேண்டும்.”
“ரொம்ப சரி.”
“ஒன்றிரண்டு கட்டில்களையும், சில குறிச்சிகளையும் தவிர மற்ற சாமான்கள் யாவற்றையும் ஏலக்கடைக்கு அனுப்பிவிட வேண்டும்.”
“அதுவும் சரி.”
“இந்தப் பங்களாவை வாடகைக்கு விட்டுவிட்டு, லாடஸ் ரோட்டிலுள்ள சின்னம்மாவின் வீட்டில் போய் நாம் வசிக்க வேண்டும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 348, வேண்டும், புத்தகங்கள், சகீனா, பக்கம், வால்காவிலிருந்து, இரண்டு, கங்கை, நாம், மற்ற, எனக்கு, அனுப்பிவிட, ரத்தினம், சிறந்த, என்னோடு, அவன், சபதர்