வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 317
“அறிவின் ஆழத்திலிருந்து தோன்றிய முக்கியமான தூண்டுதல் எதுவுமில்லை. காசியிலும்கூட ஆங்கிலப் பாதிரிகளும் பாதிரிப் பெண்களும் கிருஸ்துவ மதப் பிரசாரம் செய்கிறார்கள், ஆனால் காசி, ஹிந்துக்களின் ரோமா புரியாகையால் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஒரு பாதிரி டாக்டர், ஒருமுறை என் தாயாருக்கு வைத்தியம் செய்தார். அதைத் தொடர்ந்து அவருடைய மனைவி எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து போவாள். அவளுக்கும் என் தாயாருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அப்பொழுது நான் சின்னப் பையன். ஆகையால் அந்தப் பாதிரியின் மனைவி என்னைத் தூக்கி வைத்துக் கொண்டே இருப்பாள்.”
“நீ குழந்தைப் பருவத்திலே அதிக அழகாய் இருந்திருப்பாய் மங்கி! உன்னைப் பார்த்தவர்கள் யார்தான் தூக்காமலிருக்க முடியும்?”
“அந்தப் பாதிரிப்பெண்ணின் தூண்டுதலால் ஐந்தாறு வயதிலிருந்தே நான் பாதிரியாரிடம் ஆங்கிலம் படிக்கத் தொடங்கினேன். என் தாயார் குடும்பத்தின் இழந்து போன கௌரவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். தன்மகன் ஆங்கிலம் படிப்பதன் மூலம் முன்னோர்கள் இழந்து விட்ட ராஜ்ய லெட்சுமியைத் திருப்பிக் கொண்டு வரக்கூடும் என்று நம்பினாள். நான் மூன்று வயதுக் குழந்தையாய் இருக்கும்பொழுதே என் தந்தையார் இறந்துவிட்டார். ஆகையால் எல்லாக் காரியங்களையும் தாயாரே கவனிக்க வேண்டி இருந்தது. ராஜ்யத்தோடு கூடவே எங்கள் சொத்துக்களும் போய்விட்டன. ஆயினும் என் தாயாரிடம் அவள் மாமியார் கொடுத்த நகைகள் ஏராளமாயிருந்தன. மேலும் என் மாமாவும் தன் தங்கை விஷயத்திலே அதிகக் கவனம் செலுத்தினார். நான் எட்டு வயதை அடைந்த பொழுது, அதிக நேரத்தை பாதிரியாரின் வீட்டிலேயே கழித்தேன். நான் ஹிந்து நாமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டது மிகவும் குறைவு. கொஞ்ச நஞ்சம் கேள்விப்பட்டது. அந்தப் பாதிரி மனைவியின் வாயினாலே தான், “மகனே உன்னுடைய அதிர்ஷ்டத்தினால்தான் உன் தாயார் தப்பித்து விட்டாள். இல்லாவிட்டால் உன் தந்தையார் இறந்த பிறகு சதியென்று சொல்லி உன் தாயாரையும் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்” என்று அவள் சொல்லுவாள் என் தாயாரை உயிரோடு கொளுத்துவது, சாதி, ஹிந்து மதம் இவைகளையெல்லாம் ஒன்றாக நினைத்துப் பார்த்தால், என் மனத்தில் எவ்வித உணர்ச்சி எழும்? அந்த மதத்தைப் பற்றி என் மனத்திலே வெறுப்பைத் தவிர வேறு என்ன ஏற்பட முடியும்? ‘சதி’ முறை தடுக்கப்படுவதற்கு (1829) இரண்டு வருஷங்கள் முந்திய காலம் அது. எனது
நன்மையைக் கருதி, என் தாயார் என்னைப் படிப்பதற்காகக் கல்கத்தாவிற்கு அனுப்பி வைத்தாள். நான் கல்கத்தாவில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னைக் கிருஸ்துவனாக ஆக்குவதற்காகவே இந்தப் பாதிரியார் மனைவி இவ்வளவும் செய்தாளோ என்ற சந்தேகம் என் தாயாருக்கு ஏற்பட்டது. நல்ல வேளையாக இந்தச் சந்தேகம் முதலில் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால், எனது அறிவுக்கண் திறக்கச் சந்தர்ப்பம் இல்லாமற் போயிருக்கும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 317, நான், புத்தகங்கள், மனைவி, தாயார், வால்காவிலிருந்து, கங்கை, பக்கம், அவள், பற்றி, பொழுது, தந்தையார், கேள்விப்பட்டது, சந்தேகம், எனது, உயிரோடு, இழந்து, ஹிந்து, அதிக, தாயாருக்கு, பாதிரி, சிறந்த, எங்கள், ஏற்பட்டது, முடியும், அந்தப், ஆகையால், ஆங்கிலம்