வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 316
“நாங்கள் கங்கையைத் தாய் என்று அழைக்கிறோம்.”
“உங்கள் கற்பனை மிக இனிமையானது மங்கி! நல்லது, உன்னைப் பற்றிய விஷயங்களைச் சொல்.”
“காசியும் ராம்நகரும், கங்கைக்கு இக்கரையிலும் அக்கரையிலும் அமைந்துள்ள நகரங்கள். நான் பதினாறு வயதுவரை கங்கைக் கரையிலே வளர்ந்தவன். காசியில் என்னுடைய மாளிகை, கங்கையின் கரை ஓரத்திலேயே
அமைந்திருக்கிறது. அதன் அறுபது படிகள் கொண்ட படிக்கட்டு கங்கையின் நீர்ப்பரப்புவரை செல்கிறது. நான் இந்தப் பூமியில் வந்து முதன்முதல் கண்ணைத் திறந்த பொழுது கங்கையைத்தான் பார்த்தேன் என்று நினைக்கிறேன். என்னுடைய ரத்தத்திலே, கங்கையும் கலந்திருப்பதாக ஏனோ எனக்குத் தோன்றுகிறது. ராம்நகரில் என் பாட்டனாரின் கோட்டை இருக்கிறது. ஆனால் இரண்டொருமுறை கங்கையிலே படகில் செல்லும்பொழுது, தூர இருந்து மட்டும் பார்த்திருக்கிறேன். உள்ளே சென்று பார்க்கவோ அல்லது அதை அடிக்கடி பார்க்கவோ எனக்கு ஆசை ஏற்பட்டதில்லை. தாயார் அந்தப் பக்கம் போகவே விரும்பமாட்டாள். அந்தக் கோட்டையின் யுவராணியாய் இருக்க வேண்டியவள், ஆங்கிலேயருக்குப் பயந்து காசியிலே ஒரு வீட்டில் தன் பெயரையும் மாற்றிக் கொண்டு வாழ்ந்துவரும் பொழுது, அந்தக் கோட்டையைத் தலைநிமிர்ந்து பார்க்கத் தைரியம் எப்படி வரும்? என்னுடைய தாத்தா மகாராஜா சேத்சிங்கை, கொள்ளைக்கார வாரன் ஹேஸ்டிங்ஸ் காரணமின்றிப் பதவியிலிருந்து தள்ளினான். இங்கிலாந்தில் ஹேஸ்டிங் தன் செயலிற்குரிய பலனை அடைந்தான். ஆயினும், என் தாத்தாவிற்கு நியாயம் கிடைக்கவில்லை. பறித்துக் கொண்ட ராஜ்யத்தைத் திரும்பக் கொடுப்பது சுலபமான நியாயமல்ல.”
“உன்னுடைய தாயார் இன்னும் உயிரோடிருக்கிறாளா?”
“எங்கள் பாதிரியார் காசியிலிருந்து அடிக்கடி கடிதம் எழுதுகிறார். அவர் கடிதப்படி ஐந்து மாதத்திற்கு முன்வரை என் தாயார் உயிரோடு தான் இருக்கிறாள்.”
“நீ ஆரம்பத்திலே கிருஸ்தவன் இல்லையா?”
“இல்லை. என் தாயார் இப்பொழுதுங்கூட ஹிந்துவாகவே இருக்கிறாள். முதலிலே அவளையும் சேர்த்துவிட வேண்டுமென்று நான் விரும்பியதுண்டு. ஆனால் இப்பொழுது...”
“இப்பொழுது நீயும் உன் தாயாரைப்போல் கங்கை மாதாவுக்கு மலர் தூவி வணங்குவாய்.”
“பாதிரி சாஹிப் நான் கிருஸ்து மதத்தை விட்டுப் போய் விட்டதாகச் சொல்லுவார்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 316, புத்தகங்கள், பக்கம், தாயார், நான், கங்கை, என்னுடைய, வால்காவிலிருந்து, பார்க்கவோ, அடிக்கடி, இருக்கிறாள், அந்தக், பொழுது, கங்கையின், உணர்ச்சியை, தேம்ஸ், அழைக்கிறோம், சிறந்த, கொண்ட