வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 25
பல சுக்கிலங்கள் ஒரு சுரோணிதத்தில் கலக்க வசதியிருப்பதைப் போல், பல சுரோணிதங்கள் ஒரு சுக்கிலத்தில் கலக்க முடிந்தால்தான் குடும்ப அபிவிருத்தி தடைப்படும்.
குடும்பத் தலைவி நிஷா, பலமுறை வேட்டைகளில் தன் மகள் லேக்காவினுடைய சாதுர்யத்தையும், பலத்தையும் பார்த்திருக்கிறாள். மலைகளின்மீது மான்களைப் போன்று அவளால் ஏறமுடியும்! ஒரு சமயம் தேன் குடிக்கும் கரடிகள் கூட ஏற முடியாத அவ்வளவு உசரமான ஒரு மலை உச்சியில் ஒரு பெரிய தேனிறாட்டு (தேன்கூடு) தென்பட்டது. இதைப் பார்த்த லேக்கா மரங்களோடு மரங்களைச் சேர்த்துக் கட்டி ஓர் இரவில் அவற்றின்மீது பல்லியைப் போன்று ஊர்ந்து ஊர்ந்து உச்சியை அடைந்து, நெருப்பினால் அந்தத் தேனீக்களைத் துரத்திவிட்டுத் தேன் கூட்டில் பெரிய துவாரத்தையும் போட்டுவிட்டாள். கீழே சொட்டிய தேனை ஒரு தோல் பாத்திரத்தில் பிடிக்க,
அது உத்தேசம் இருபது படிக்குக் குறைச்சல் இல்லை. லேக்காவினுடைய தைரியமான இச்செய்கையானது, நிஷா குடும்பம் மட்டுமல்லாமல், அடுத்த பரிவாரங்களும் அவளைப் புகழும்படிச் செய்து விட்டது. ஆனால் நிஷாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நிஷாவின் யௌவனப் புத்திரர்கள் லேக்காவினுடைய ஆணையைச் சிரமேற் கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பதையும், நிஷாவின் வேண்டுகோள்களைக்கூட உதாசீனம் செய்வதையும், நாளடைவில் நிஷா கவனித்து வந்தாள். தன்னை வெளிப்படையாக எதிர்ப்பதற்குத் தன் மகளுக்குத் தைரியம் ஏற்படாதிருப்பதையும் நிஷா தெரிந்திருக்கிறாள். தன்னுடைய வழியில் பெரிய முட்டுக்கட்டையாய் இருக்கும் லேக்காவை ஒழித்து விடுவதற்கு நிஷா பல வழிகளைப் பற்றி யோசித்தாள். ‘நித்திரையில் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றுவிட்டால் என்ன?’ என்று கூட அவளுக்கு ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், தன்னைப் பார்க்கிலும் லேக்கா பலசாலியென்பதும் நிஷாவுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு வேறொருவருடைய உதவியைப் பெறுவதென்றாலோ யாரும் இவளுக்குச் சகாயம் செய்ய மாட்டார்கள் என்பதும் நிஷாவுக்குத் தெரியும். நிஷாவினுடைய புத்திரர் யாவரும் லேக்காவினுடைய காதலுக்கும் தயவுக்கும் காத்திருப்பவர்கள்; பெண் மக்களோ லேக்காவுக்குப் பயப்படுகிறவர்கள். இதில் வெற்றி பெறாவிட்டால் தன்னுடைய பிராணனை லேக்கா வதைத்து விடுவாள் என்பதும் அவளுக்குத் தெரியும்.
ஒரு சமயம் நிஷா தனிமையாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. லேக்காவை ஒழித்துவிடுவதற்கு அவள் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டாள்.
சூரியன் உதயமாகிக் கொஞ்ச நேரமேயானாலும், வெயில் அதனுடைய சக்தியைத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டது. தங்களுடைய தோல் குடிசைக்குப் பின்னே நிஷாவின் குடும்பத்தாரில் சிலர் நிர்வாணமாகப்படுத்திருக்கின்றனர். சிலர் வெயில் காய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நிஷா மாத்திரம் தனியாகக் குடிசைக்கு முன்னே உட்கார்ந்திருந்தாள். அவளுக்குச் சமீபம் லேக்காவினுடைய மூன்று வயதுப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். நிஷாவினுடைய இரண்டு கைகளிலும் சிவந்த பழங்கள் நிறைய இருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 25, நிஷா, லேக்காவினுடைய, புத்தகங்கள், பெரிய, பக்கம், தெரியும், நிஷாவின், சமயம், லேக்கா, வால்காவிலிருந்து, கங்கை, என்பதும், தேன், நிஷாவினுடைய, அவள், சிலர், வெயில், லேக்காவை, தன்னுடைய, ஊர்ந்து, சிறந்த, தோல், விட்டது, போன்று, நிஷாவுக்கு, கலக்க