வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 26
முழுகுவதும் மேல் வருவதுமாய் வெள்ளத்தில் போய்க் கொண்டிருக்கிறான். உடனே லேக்கா, நதியில் குதித்து வேகமாக நீந்திப் போய்த் தன் மகனை எடுத்தாள். தண்ணீரை நிறையக் குடித்து விட்டதால் குழந்தை அசைவற்றிருந்தது. லேக்கா குழந்தையுடன் திரும்ப நீந்திக் கரையேற வேண்டும். பெருகி வரும் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரையேறுவது கஷ்டம் தான். மற்றும் ஒரு கையிலே குழந்தை! ஒரு கையாலும் கால்களாலும் அவள் நீந்திக் கொண்டிருக்கிறாள். பனியுறைந்த அந்தத் தண்ணீர் வேறு, அவளுடைய சரீரத்தில் முள் மாதிரிக் குத்துகிறது. இந்தச் சமயத்தில் பலமான கைகள் தன்னுடைய கழுத்தைப் பிடித்து நெருக்குவது தெரிந்து இது யார் என்பதை லேக்கா உடனே தெரிந்து கொண்டாள். ஏனென்றால் சிலநாட்களாக நிஷாவினுடைய மாறி வரும் மனோநிலையை லேக்கா அறிந்தே இருந்தாள். தன் வழியில் உள்ள இந்த முள்ளை-லேக்காவை ஒழிப்பதற்கு நிஷா தீர்மானித்துவிட்டாள். இப்பொழுதுங்கூட லேக்கா தன் பராக்கிரமத்தை நிஷாவிடம் காட்ட முடியும். ஆனால் ஒரு கையில் குழந்தை இருக்கிறது. இருந்தாலும் கழுத்துப் பிடிப்பையும் பொருட் படுத்தாமல் நீந்துவதில் வேகத்தைச் செலுத்தும் லேக்காவினுடைய துணிவையும் தைரியத்தையும் நோக்கிய நிஷா தன்னுடைய மார்பகத்தை அவளுடைய சிரசின் மீது வைத்து அழுத்த ஆரம்பித்தாள். இதனால் ஒரு முறை லேக்கா தண்ணீருக்குள்ளும் அமிழ்ந்து விட்டாள். இப்படியும் அப்படியுமாக லேக்கா அடித்துக் கொண்டதால் குழந்தை அவளுடைய கையிலிருந்து நழுவி விட்டது. திரும்பவும்
குழந்தையைப் பற்றுவதற்கு அவளால் இயலவில்லை. எப்படியோ அவளுடைய கைகள் நிஷாவினுடைய கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன. லேக்கா இப்போது மூர்ச்சையாகி விட்டாள். அந்தச் சரீரம் நிஷாவுக்கு ஒரு சுமையாகி விட்டது. இந்தச் சுமையோடு நீந்திக் கரையேறுவது நிஷாவினால் முடியாத காரியம். முயற்சித்தாள்; இருந்தும் பயனென்ன? முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் தங்களைக் கூட்டாக வால்கா நதிக்குச் சமர்ப்பித்துக் கொண்டார்கள்.
பரிவாரத்தின் அடுத்த வீரப்பெண் ரோசனா, நிஷா குடும்பத்தின் தலைவியாகி விட்டாள்.
____________________________________________________
* இது இன்றைக்கு 361 தலைமுறைக்கு முந்திய கதை. அந்தக்காலத்தில் ஹிந்து, ஈரான், ஐரோப்பாவினுடைய சகல ஜாதிகளும் ஒரே குடும்பமாயிருந்தன. மனித வாழ்க்கையின் ஆரம்ப காலம் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 26, லேக்கா, நிஷா, புத்தகங்கள், குழந்தை, அவளுடைய, வால்கா, நீந்திக், தன்னுடைய, பக்கம், வேகமாக, விட்டாள், கங்கை, வால்காவிலிருந்து, நிஷாவினுடைய, வரும், கரையேறுவது, விட்டது, இந்தச், தெரிந்து, கைகள், வெள்ளத்தில், பையன், எறிந்தாள், சிறந்த, தின்றான், அடுத்து, நோக்கிய, அந்தத், உடனே