வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 240
3
என்னை ஜனங்கள் துர்முகன் என்று சொல்லுகிறார்கள். ஏனெனில், கசப்பான உண்மையைப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் பழக்கமுடையவன் நான். என் காலத்தில் கசப்பான உண்மைகளை வெளியிடுபவர்கள் இன்னும் பலர் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பயித்தியம் என்ற போர்வைக்குப் பின்னாலோ, அல்லது ஸ்ரீ பர்வதத்திலிருந்து வந்துள்ள சித்தன் என்ற பெயரிலோ அதை வெளியிட்டார்கள். இந்த ஸ்ரீ பர்வத யுகத்திலே, நானும் ஒரு சிறந்த சித்தனாக ஆகியிருக்க முடியும். அப்பொழுது என் பெயர் துர்முகன் என்றும் ஏற்பட்டிருக்காது. ஆனால் ஜனங்களை ஏமாற்றுவது எனக்குப் பிடிக்காத வேலை. மக்களை ஏமாற்றக் கூடாது என்ற எண்ணத்தினாலேயே, நான்
நாளந்தாவை விட்டு வந்தேன். இல்லாவிடில் இன்று நான் நாளந்தாவின் மகாபண்டிதர்களுள் ஒருவனாக இருப்பேன். அங்கே இருட் குவியலின் மத்தியிலே நெருப்புக் கங்கை வீசியெறிந்த ஒருவரை நான் பார்த்தேன். அதே சமயத்தில் இந்த சுய அடிமைகள் அவரை எப்படிச் சூழ்ந்து கொண்டார்கள் என்பதையும் பார்த்தேன். அவர் யாரெனத் தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படலாம். அவர் ஆயிரக்கணக்கான செம்மறியாடுகளின் மத்தியிலே ஒரு ஆண் சிங்கமாக விளங்கிய தர்க்கப் பேரறிஞர் தர்மகீர்த்தி. அவர் நாளந்தாவில் இருந்து கொண்டே, “அறிவை விட ஏட்டுச் சுவடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, உலகத்தைத் தோற்றுவித்தவர் கடவுள் என்று ஒப்புக்கொள்வது, தீர்த்தமாடுவதை மதச் சடங்காக ஆக்குவது, பிறப்பிலே ஜாதி வேற்றுமை காண்பது, வாதத்தைப் போக்குவதற்காக சரீரத்தை வாட்டுவது - இவை ஐந்தும், மனிதர்கள் அறிவற்ற ஜடப் பொருளாகி விட்டார்கள் என்பதற்கு லட்சணங்கள்”* என்று அறை கூவிச் சொன்னார்கள்.
ஒருநாள், நான், “ஆச்சாரியாரே! உங்களுடைய ஆயுதங்கள் மிகக் கூர்மையானவை; ஆனால் மக்களின் கண்களிலே படமுடியாதபடி, அத்தனை மெல்லியதாய் இருக்கிறதே” என்று கேட்டேன்.
____________________________________________________
* “வேதப்ராமண்யம் கஸ்மசித் காத்ருதஹ
ஸ்நானே தர்மேச்சா ஜாதி வாதலேபஹ
சந்தா பாரம்பஹ பார்ஹநாய சேதி
த்வஸ்த பரகஞானம் பஞ்சலிங்கானி ஜாடயே.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 240, நான், புத்தகங்கள், கங்கை, வால்காவிலிருந்து, பக்கம், சிறந்த, அவர், மத்தியிலே, பார்த்தேன், ஜாதி, ஸ்ரீ, பொக்கிஷத்தை, செல்வப், மீதும், இல்லை, துர்முகன், கசப்பான