வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 197
“ஆம்; அவர் உலகத்தின் பல பகுதிகளையும் பார்த்திருக்கிறார். அவர் எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரியா நகரில் பிறந்தவர்.”
“நானும் கேள்விப்பட்டேன். ஆனால் கிரேக்கர்கள் எல்லோரும் பௌத்த மதத்தையே அனுசரிக்கிறார்களே, ஏன்?”
“ஏனெனில் அவர்களுடைய மனப் போக்கிற்கும், சுதந்திர விருப்பத்திற்கும், பௌத்த மதம் மிகவும் அனுகூலமாயிருக்கிறது.”
“ஆனால், புத்தர் எல்லோரையும் துறவறத்தையும், தபசையும் மேற்கொண்டு வைராக்கிய வாழ்க்கை நடத்தும்படியல்லவா உபதேசித்திருக்கிறார்.”
புத்த மதத்தைத் தழுவியவர்களில், பிக்ஷுக்களை விட குடும்பஸ்தர்களே அதிகம். பௌத்தர்கள், குடும்ப வாழ்க்கையின் சுவையை அனுபவிப்பதில் யாருக்கும் குறைந்தவர்களல்ல.”
“இந்த நாட்டிலே எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த கிரேக்கர்கள் புத்த மதத்திலே அதிக அபிமானம் காட்டுவதின் காரணம் என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”
“இங்குள்ள மதங்களிலே தாராளத் தன்மை வாய்ந்தது புத்த மதம்தான். எங்கள் முன்னோர்கள் முதன்முதலாகப் பாரத தேசத்திற்கு வந்த பொழுது, அவர்களை மிலேச்சர்கள் என்று சொல்லி இந்நாட்டு மக்கள் வெறுப்போடு நோக்கினார்கள். இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்து கிரேக்கர்களைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால், இந்த நாட்டுக்கு வியாபார நோக்கத்தோடும், நட்புரிமையோடும் வந்த கிரேக்கர்களையும், இந்த நாட்டிலே தங்கி, இங்கேயே வசிக்கத் தொடங்கிய கிரேக்கர்களையும் கூட வெறுப்புடனேயே நடத்தினார்கள். ஆனால் பௌத்தர்களில் யாரும் அவர்களை வெறுக்கவில்லை. மேலும், கிரேக்கர்கள் தங்கள் நாட்டிலேயே பௌத்த மதத்தைப்பற்றி நன்கு
தெரிந்துகொண்டிருந்தார்கள்.”
“கிரேக்க நாட்டில் கூடவா?”
“ஆம்; சந்திரகுப்த மௌரியனின் பேரன் அசோகன் காலத்தில், எத்தனையோ பௌத்த பிக்ஷுக்கள் இங்கிருந்து கிரேக்க நாட்டிற்குச் சென்றார்கள். எங்கள் தர்ம ரட்சிதரும்கூட இந்த தேசத்தில் வந்து பிக்ஷு வானவர் அல்ல. அவர் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா நகர மடத்திலே பிக்ஷுவானவர்.”
“நான் அவரை மறுபடியும் சந்திக்க விரும்புகிறேன், பிரபா!”
“அவசியம் சந்திக்க வேண்டும். அவர் உன்னோடு அனேக உயர்ந்த விஷயங்களைப் பற்றித் தர்க்கிக்கக் கூடும். பௌத்த தர்ம விஷயங்களைப்பற்றி மட்டுமல்ல; கிரேக்க தத்துவார்த்திகளைப் பற்றியும் விவாதிக்கக்கூடும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 197, புத்தகங்கள், அவர், பௌத்த, பக்கம், கிரேக்கர்கள், புத்த, வால்காவிலிருந்து, “ஆம், சிறந்த, கங்கை, சந்திக்க, வந்து, கிரேக்கர்களையும், கிரேக்க, தர்ம, நாட்டின், எங்கள், அலெக்ஸாண்டிரியா, எகிப்து, நாட்டிலே, எத்தனையோ, வந்த, அவர்களை