வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 172
“இல்லை சோபியா! அரசியிடத்தில் நீ இருந்திருந்தால் உனக்கு இன்னும் அதிகமான சௌகரியங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், சோபியா என்னை நீ எஜமானன் என்று சொல்லாதே; இந்த அடிமைப் பழக்கத்தைப் பற்றி
நினைத்தாலே என் உடம்பு பற்றி எரிகிறது.”
“ஆயினும், நான் உங்கள் அடிமை.”
“இல்லை; நீ அடிமை இல்லை. அடிமைத்தனத்திலிருந்து உன்னை விடுதலை செய்துவிட்டதாக நான் அரச தம்பதிகளிடம் சொல்லி விட்டேன்.”
“அப்படியானால் இப்போது நான் அடிமை இல்லையா?”
“இல்லை. நீ என்னைப் போலவே சுதந்திரம் உடையவள். நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கு கொண்டு போய்ச் சேர்க்க முயற்சிப்பேன்.”
“நான் உங்களுடனேயே இருப்பதற்கு விரும்பினாலும் வெளியே அனுப்பி விடுவீர்களா?”
“அது முற்றிலும் உன்னுடைய விருப்பத்தைப் பொறுத்தது.”
“அடிமைத்தனம் மனிதத்தன்மையை எந்த மாதிரி நசுக்கி விடுகிறது! என் தந்தையின் வீட்டிலும் நான் அடிமைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களும் சிரித்தார்கள். பேசினார்கள்; ஆனந்தம் கொண்டாடினார்கள். ஆனால், அந்தச் சிரிப்பிற்கும் ஆனந்தத்திற்கும் பின்னே துன்பமும் துயரமும் மறைந்து கிடக்கின்றன என்று நான் உணரவில்லை. நானே அடிமையாக ஆனபொழுதுதான், அடிமைத்தனம் எப்படிப்பட்ட நரகம் என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளமுடிந்தது.”
“நீ எப்படி அடிமையானாய்? சோபி! உனக்கு ஆட்சேபணை இல்லையானால் அந்த விஷயத்தைச் சொல்லு.”
“என்னுடைய தகப்பனார் ஏதென்ஸ் நகரத்தில் ஒரு பெரிய மனிதராக
இருந்தார். மெக்டோனியா அரசன் பிலிப், எங்களுடைய ஏதென்ஸ் நகரத்தை வெற்றி கொண்டபோது, என் தந்தை குடும்பத்தோடு கப்பல் மூலமாக ஆசியாவுக்குத் தப்பி ஓடினார். அந்த நகரத்திலே எங்களுக்கு அடைக்கலம் கிடைக்குமென நம்பினோம். ஆனால் சில மாதங்களிலேயே பாரசீகர்கள் அந்த நகரத்தின் மீது படையெடுத்து விட்டனர். நகரம் அழிந்தது. யுத்தத்தின் போது ஒருவரையொருவர் பிரிந்து, அங்கும் இங்குமாக உயிர்பிழைத்து ஓடினர். அநேக ஜனங்களைப் பாரசீகர்கள் கைது செய்தனர். அவ்விதம் கைது செய்யப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. ஆனால் என்னுடைய அழகையும் இளமையையும் பார்த்த அவர்கள், என்னைச் சேனாதிபதியிடம் அனுப்பி வைத்தார்கள். சேனாதிபதியிடமிருந்து சக்கரவர்த்தியிடம் அனுப்பப்பட்டேன். சக்கரவர்த்தி, தன் தங்கை அதாவது இந்த அரசியிடம் என்னை அனுப்பி வைத்தார்.
“நான் ஓர் அடிமையாய் இருந்தாலும்கூட, என்னுடைய அழகின் காரணமாக நல்ல முறையிலேயே நடத்தப்பட்டேன். ஆகையால், மற்ற சாதாரண அடிமைகளுடைய அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. இருந்தாலும், அடிமைத்தனத்திலுள்ள, வேதனையை நன்றாக உணருகிறேன். நான் அடிமை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 172, நான், புத்தகங்கள், அடிமை, வால்காவிலிருந்து, அனுப்பி, “இல்லை, அந்த, பக்கம், கங்கை, கைது, என்னுடைய, பாரசீகர்கள், ஏதென்ஸ், பற்றி, சிறந்த, சோபியா, உனக்கு, என்னை, “நான்