வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 168
“அப்ஷா” என்றான்.
நோயாளியின் கண்கள் சிறிது திறந்து மறுபடியும் மூடிக் கொண்டன.
“மயக்கம், லேசான மயக்கம்” என்று கூறிய வைத்தியன், அரசியின் கைகளையெடுத்து நாடியைப் பரிசோதித்தான். மிகமிக மெதுவாக, நாடி அடித்துக் கொண்டிருந்தது. சரீரம் ஏறக்குறையக் குளிர்ந்து விட்டது. அரசன் வைத்தியனுடைய முகமாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். வைத்தியன் சிறிது நேரம் யோசித்து விட்டு,
“கொஞ்சம் திராட்சை ரசம் வேண்டும்; அதுவும் ரொம்பப் புளித்ததாயிருந்தால் நல்லது.”
இந்தப் பிரயாண காலத்திலுங்கூட, அரசனிடம் இந்தப் பொருளுக்குக் குறைவில்லை. ரத்தத்தைப் போன்ற திராட்சை ரசம் நிறைந்த ஒரு தங்கக்
கிண்ணம், வைத்தியனுக்கு முன்னே வைக்கப்பட்டது. ஒரு பொட்டலத்தைத் திறந்து, அதிலுள்ள மருந்தைத் தன்னுடைய நகத்தால் சிறிதளவே எடுத்துக் கொண்ட வைத்தியன், அரசியின் வாயைத் திறக்கும்படி அரசனிடம் கூறினான். உடனே அந்த மருந்தை அரசியின் வாயில் போட்டுக் கொஞ்சம் திராட்சை ரசத்தையும் ஊற்றினான். நோயாளியின் தொண்டையிலே மருந்தும் திராட்சை ரசமும் இறங்குவதைப் பார்த்த வைத்தியன் சந்தோஷம் அடைந்தான். அவன் அரசனிடம்,
“அரசே! இனி நான் தங்கள் வைத்தியர்களுடன் பேச விரும்புகிறேன். இன்னும் சிறிது நேரத்தில் மகாராணி கண் விழித்துக் கொள்வார். அப்பொழுது திரும்பவும் இங்கு வரவேண்டியிருக்கும்” என்று சொல்லி விட்டு, அடுத்த அறையில் இருந்த பாரசீக வைத்தியர்களோடு கலந்துபேசினான். நகரிலிருந்து புறப்படும்போது ஆரம்பித்திருந்த சாதாரணக் காய்ச்சலிலிருந்து இன்றைய நிலைமை வரை எல்லா விஷயங்களையும் அவர்கள் இவனுக்குச் சொன்னார்கள். இந்தச் சமயத்தில், மகாராணி அரசனை அழைப்பதாக வேலைக்காரி வந்து கூறியவுடன், அரசனுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை. வைத்தியனும் அரசனும் அரசிக்குச் சமீபமாகச் சென்றனர். ராணியின் கண்கள் பூரணமாகத் திறந்திருந்தன. முகத்திலும் ஜீவகளை அரும்பித் தெரிந்தது. அரசி மெதுவாக, ஒடுங்கிய குரலில் அரசனிடம் பேச ஆரம்பித்தாள்.
“நீங்கள் கவலைப்படுவது எனக்குத் தெரிகிறது. நான் இனிமேல் பிழைத்துக் கொள்வேன். எனது சரீரத்திலே சக்தி பெருகுவதாக உணருகிறேன்.”
“அப்ஷா! இதே விஷயத்தைத்தான் இந்த ஹிந்து வைத்தியரும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 168, புத்தகங்கள், திராட்சை, வைத்தியன், அரசனிடம், பக்கம், சிறிது, அரசியின், கண்கள், கங்கை, வால்காவிலிருந்து, விட்டு, மகாராணி, நான், ரசம், மெதுவாக, இந்தப், நோயாளியின், அந்த, சிறந்த, கொஞ்சம், விழுந்து, அரசன், மூடிக், திறந்து