வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 162
“நம்முடைய ஜனசபை, தனி மனிதர்களுக்கெல்லாம் மேலாக இருப்பதைப் போல காந்தாரம், மத்ரம், மல்லவம், ஸிவி முதலிய தனித்தனி ஜன ஆட்சிகளுக்கும் மேலானது அந்தச் சங்கம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.”
“எப்படி ஒப்புக்கொள்ளச் செய்வது? மற்றும் வெளிச் சத்துருக்களிடமிருந்து இந்த ஜன ஆட்சிகளைக் காப்பாற்றுவதற்கு, அந்தச் சங்கம் இராணுவம் வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? இந்த இராணுவச் செலவிற்காக வரி வசூலிக்கவும் வேண்டுமே!”
“இப்பொழுது எப்படி ஜனசபை மக்களிடமிருந்து அவைகளைப் பெறுகிறதோ அதேபோல், அந்த சங்கம் அதிலுள்ள அரசுகளிடமிருந்து அவற்றைப் பெற வேண்டும்.”
“இந்த ஜன ஆட்சி வெகுகாலமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. அதிலுள்ள ஒவ்வொருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள். சமூகத்திலுள்ள
ஒவ்வொரு நபரும் புராதன காலத்திலிருந்து ஜன ஆட்சியின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து வருகிறார்கள். ஆனால் இப்போது நீ கூறும் சங்கம் புதியது. அதில் ஒரே ரத்தக் கலப்புடையவர்கள் இருக்க மாட்டார்கள்; நீண்ட காலமாகத் தங்களுக்குள் சண்டையிட்டு வந்திருக்கும் பல குலத்தவர்களும் இருப்பார்கள். அவர்கள் எல்லோரையும் சங்கத்தின் விதிகளுக்குக் கட்டுப்படச் செய்வதெப்படி? நண்ப! நீ காரிய சாத்தியமான வழியிலே யோசித்தால், இந்த மாதிரி திட்டத்தைப் புகுத்த மாட்டாய். எல்லா ஜன ஆட்சிகளையும் நிர்ப்பந்தப்படுத்தினாலொழிய சங்கத்தின் விதிகளை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்ய முடியாது; அப்படி நிர்ப்பந்தப்படுத்தும் சக்தி எங்கிருந்து வரும்?”
“அவைகளிடமிருந்தே அந்தச் சக்தியை நாம் உற்பத்தி செய்ய வேண்டும்.”
“அவைகளிடமிருந்தே அந்தச் சக்தி தோன்றினால் நல்லதுதான். ஆனால், பாரசீகர்களின் தாக்குதலைப் பலமுறை சகித்துக் கொண்ட நாம், அந்தச் சக்தி நம்முள்ளிருந்தே தோன்றாது என்பதைப் பார்த்தோம். ஆகவே, அது எங்கிருந்து உற்பத்தியாக முடியுமோ, அங்கிருந்துதான் உற்பத்தி செய்ய வேண்டும்.”
“அதற்காக ஒரு அரசனுடைய ஆட்சியை ஒப்புக் கொண்டாவதா?”
”தட்சசீலத்திற்காக மட்டுமல்ல; நம்மைப்போல பல ஜன ஆட்சிகளுக்கும் சேர்த்து ஒரு அரசனை-சக்ரவர்த்தியைக் கூட ஒப்புக் கொள்வது குற்றமாகாது.”
“அப்படியானால், பாரசீக தாரயோஷையே நாம் ஏன் ராஜாவாக
ஒப்புக் கொள்ளக்கூடாது?”
“தாரயோஷ் நம்முடையவனல்ல. நாம் பாரததேச வாசிகள் என்பது உனக்குத் தெரியும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 162, அந்தச், புத்தகங்கள், ஒப்புக், வேண்டும், நாம், சங்கம், செய்ய, சக்தி, வால்காவிலிருந்து, சங்கத்தின், கங்கை, பக்கம், எங்கிருந்து, “அவைகளிடமிருந்தே, ஜனசபை, ஆட்சிகளுக்கும், உற்பத்தி, இருக்குமா, கொள்ள, அதிலுள்ள, விதிகளுக்குக், சிறந்த