வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 156
6
பனிக்காலம் கபிலவஸ்து* நகரத்திற்குப் பக்கத்தில் உள்ள வயல்களில் கோதுமைப் பயிர்கள், மஞ்சள் நிறக் கதிர்களை ஆட்டிக் கொண்டிருந்தன. நகரம் இன்று மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, அங்கங்கே தோரணங்கள் கட்டியிருந்தார்கள். அந்த நகரத்தின் ஜன சபை மாளிகை வெகு ஆடம்பரமாக - கண்ணைக் கவரும் முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூன்று நாள் இரவு பகலாக இவ்வேலைகளிலே ஈடுபட்டிருந்த அடிமைகளுக்கு இன்றுதான் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. அவர்களிற் சிலர், ஒரு வீட்டின் கோடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“அடிமைகளாகிய நம் பிழைப்பும் ஒரு பிழைப்பா? மனிதனாகப் பிறக்காமல் ஒரு மாடாய்ப் பிறந்திருந்தாலும் நல்லது; மனிதன் என்ற
உணர்ச்சியாவது இல்லாமல் இருக்கும்.”
“ஆம், காகா! நீ சொல்வது உண்மையான பேச்சு. என்னுடைய எஜமான் தண்டபாணி நேற்று இரும்பைப் பழுக்கக் காய வைத்து என் மனைவிக்குச் சூடு போட்டு விட்டார்.”
“ஏன்?”
“ஏன் என்று அவரிடத்தில் யார் கேட்பது? - அவர்கள் அடிமைகளாகிய நம்மிடையே புருஷன் - மனைவி என்ற உரிமையைக்கூட ஒப்புக் கொள்வதில்லையே. இந்த லட்சணத்தில் அவர் தன்னை ஒரு ஜைனர் என்று சொல்லிக் கொள்கிறார். கீழே கிடக்கும் ஒரு புழுவையுங்கூட மிதித்து விடாமல் ஒதுக்குவதற்காக, நீளமான மயில் இறகுகளைத் தூக்கிக் கொண்டு அலைகிறார். என் மனைவி செய்த குற்றத்தைக் கேளேன். பல நாளாக எங்களுடைய இரண்டு வயதுப் பெண் குழந்தைக்குச் சீக்காயிருந்தது. திடீரென்று மூர்ச்சை போட்டு விட்டதாம். பாவம், இந்தத் தகவலை எனக்குச் சொல்லுவதற்கு வந்திருந்தாள். இதுதான் குற்றம். அந்தக் குழந்தையுங்கூட மண்டையைப் போட்டு விட்டது. செத்ததும் ஒரு வகைக்கு நல்லதாகத்தான் போச்சு. இருந்தால் இந்த உலகத்திலே நம்மைப் போலத் தான் அதுவும் மானம் கெட்ட வாழ்வு வாழவேண்டிருக்கும். உண்மையிலேயே அடிமைகளுடைய வாழ்க்கை ஒரு வாழ்க்கையேயில்லை. இது மட்டுமா? அந்தக் கொலைக்காரப் பாவி, இந்தக் கொண்டாட்டம் முடிந்ததுமே என் மனைவியையும் விற்றுவிடப் போகிறாராம்.”
“காய்ந்த இரும்பினால் சூடு போட்டதுகூட அந்தப் பாவிக்குத்
திருப்தியைக் கொடுக்கவில்லையா?”
____________________________________________________
*கபிலவஸ்து - கௌதம புத்தர் பிறந்த இடம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 156, புத்தகங்கள், பக்கம், போட்டு, கங்கை, வால்காவிலிருந்து, மனைவி, அந்தக், “ஏன், அலங்கரிக்கப்பட்டிருந்தது, சிறந்த, சூடு