வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 115
“ஆனால் அந்தத் துக்கம் உண்டாகாமல் தடுப்பது உன் கையிலிருக்கிறது.”
“என்னிடமில்லை. உன் கையில்தான் இருக்கிறது.”
“எப்படி?”
“நீ நிரந்தரமாக என் தந்தையார் வீட்டில் தங்கி விடச் சம்மதிப்பாயா?”
அந்த அழகிய உதடுகளிலிருந்து இந்தக் கடினமான வார்த்தைகள் வெளிவந்து விடக்கூடும் என்ற பயம் சுதாஸுக்கு எத்தனையோ தடவை ஏற்பட்டதுண்டு. இன்று திடீரெனப் பேரிடி போல் அச்சொற்கள் அவன் காதுகளைத் துளைத்துக் கொண்டு இதயத்தைப் போய்த் தாக்கின. அவனுடைய இதயம் கொஞ்ச நேரத்தில் பொசுங்கி விடும் போல் தோன்றிற்று. தனது மன வேதனையை அபாலா தெரிந்து கொள்வதை அவன் விரும்பவில்லை. தன்னைச் சமாளித்துக் கொண்டு,
“அபாலா! நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்.......”
“எனக்கு அது தெரியும். என்னுடைய நிலைமையும் உனக்கு நன்றாகத் தெரியும். நான் நிரந்தரமாக உன்னுடையவளாகவே ஆகிவிட விரும்புகிறேன். என்னுடைய தந்தையும் இதில் சந்தோஷப்படுவார். ஆனால் சுதாஸ்! நீ பாஞ்சாலத்தை மறந்துவிட வேண்டும்.”
பாஞ்சாலத்தை மறந்து விடுவது பெரிய விஷயமல்ல. ஆனால், என்னுடைய கிழத்தாய், தந்தையர் அங்கு இருக்கின்றனர். என்னைத்தவிர. என் தாய்க்கு வேறு பிள்ளைகளில்லை. அவள் இறப்பதற்கு முன் அவளை ஒரு முறை நிச்சயம் சந்திப்பதாக உறுதிமொழி கொடுத்திருக்கிறேன்.
“உன்னுடைய தாய்க்குக் கொடுத்த உறுதியை நான் உடைக்க
விரும்பவில்லை. சுதாஸ்! நான் உன்னைக் காதலிக்கிறேன். காதலிப்பேன். நீ இங்கிருந்து சென்ற பின்பும் உன்னைக் காதலிப்பேன். மரணம் வரை உன் வழி பார்த்து உனக்காகக் கண்ணீர் விடுவேன். ஆனால் நாம் இருவரும் நமது வாக்குறுதிகளை மீறக் கூடாது. நீ உன் தாயாரிடமும் நான் என் மனத்திடமும்.”
“அபாலா! உன் மனத்திற்கே என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறாய்?”
“மக்கள் வாழும் பிரதேசத்திலிருந்து மாக்கள் வாழும் பிரதேசத்திற்குப் போக மாட்டேன் என்று.”
“பாஞ்சாலப் பிரதேசம் மாக்கள் வாழும் இடமா?”
“ஆம்; மனிதத் தன்மைக்கு மதிப்பில்லாத இடம்; பெண்களுக்கு உரிமை இல்லாத இடம்.”
“நான் உன் அபிப்ராயத்தை ஏற்றுக் கொள்கிறேன், அபாலா.”
அபாலா மகிழ்ச்சியோடு அவனைத் தழுவி முத்தமிட்டாள். கண்ணீர் வழிந்தோடிய கன்னங்கள் ஒன்றோடொன்று உரசின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 115, புத்தகங்கள், நான், அபாலா, பக்கம், என்னுடைய, வாழும், வால்காவிலிருந்து, கங்கை, சுதாஸ், உன்னைக், பாஞ்சாலத்தை, இடம், கண்ணீர், காதலிப்பேன், மாக்கள், விரும்பவில்லை, போல், நிரந்தரமாக, சிறந்த, அவன், கொண்டு, காதலிக்கிறேன், “அபாலா, தெரியும்