அர்த்தமுள்ள இந்துமதம் - பெண்களை பெருமைப்படுத்துவோம்
`பெண் குழந்தை’ என்று பதில் வருகிறது.
பாட்டி அலுத்துக் கொள்கிறாள்.
அத்தனைக்கும் அவளும் ஒரு பெண்தானே!
என் தாயாருக்கு முதற்குழந்தை பெண்ணாகப் பிறந்தது.
மருமகளுக்குக் குழந்தை பிறந்தால், மாமியார் வந்து மருந்து இடித்துக் கொடுப்பது எங்கள் குல வழக்கம்.
`பெண் குழந்தையா பெற்றிருக்கிறாள்?’ என்று எங்கள் பாட்டி அலுப்போடு வந்தார்களாம்.
இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.
பாட்டியிடம் போய்ச் சொன்னார்களாம்.
`இவளுக்கு வேறு வேலை இல்லையா…?’ என்று பாட்டி அலுத்துக் கொண்டார்களாம். ஆனாலும் வந்து மருந்து கொடுத்தார்களாம்.
மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.
என் பாட்டியோ, `அவளையே மருந்து இடித்துக் குடிக்கச் சொல்!’ என்று சொல்லி விட்டார்களாம்.
பிறகு, அவர்களைக் கெஞ்சிக் கெஞ்சி அழைத்து வந்தார்களாம்.
நாலாவது குழந்தை வயிற்றில் இருந்த போது என் தாயார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தார்களாம்.
ஆண்டவன் லீலையைப் பாருங்கள்; அதுவும் பெண்ணாகவே பிறந்தது.
கடைசிவரை என் பாட்டி அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லையாம்.
`மலையரசி அம்மன் புண்ணியத்தில் ஐந்தாவதாக என் மூத்த சகோதரர் பிறந்தார்’ என்று என் தாயார் சொல்வார்கள்.
எந்தப் பெண்ணுமே தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.
பெண் குழந்தை பிறந்தால் பெற்ற தாயே சலித்துக் கொள்கிறாள்.
`பெண்ணென்று பூமிதனில்
பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்!’
-என்றான் பாரதி.
பெண் பிறப்பு என்ன அப்படிப் பாவப்பட்ட பிறப்பா?
தாய் என்கிறோம்; சக்தி என்கிறோம்; ஆனால், குழந்தை மட்டும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறோம்.
என்னைப் பொறுத்தவரையில் பெண் பிறந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கார் விபத்தில் சிக்கி நான் பாண்டிச்சேரி `ஜிப்மர்’ மருத்துவமனையில் இருந்த போது, என்னைப் பார்த்துப் பார்த்து அழுதவை, பெண் குழந்தைகளே!
ஆண் பிள்ளையோ மனைவி வந்து விட்டால், அப்பனை வீட்டை விட்டுக் கூடத் துரத்தி விடுவான்.
பெண் குழந்தையின் பாசமும், பரிவும் ஆண் குழந்தைக்கு வராது.
ஒரு வயதுப் பெண் குழந்தைக்குக்கூட தாய், தகப்பன் மீதிருக்கிற பாசம் தெய்வீகமாக இருக்கும்.
அதிலும், இந்தியப் பெண்மை என்பதே மங்கலமானது.
அதன் இரத்தம், இரக்கம், கருணை, பாசங்களாலே உருவானது.
மேல் நாட்டுப் பெண்மைக்கும் இந்தியப் பெண்மைக்கும் உள்ள பேதம் இதுதான்.
மேல் நாட்டுப் பெண்மை ஒரு இடத்திலும் ஒட்டு, உறவு, பாசம் என்பதை வளர்த்துக் கொள்வதில்லை.
அது தண்ணீரில் விட்ட எண்ணெயைப் போல் தனித்தே நிற்கிறது.
இந்தியாவில்தான் இது சங்கிலி போட்டுப் பின்னப்படுகிறது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
என் சின்ன வயதில் எங்கள் சமூகத்தில் பெண்கள் குறைவு. அதனால், ஒரு பெண்ணை ஒரு வாலிபன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
நான் வளர வளரக் கவனித்து வந்தேன்.
என் முதல் சகோதரி திருமணத்தின் போது பெண்ணின் விலை, மிக அதிகம்.
இரண்டாவது சகோதரிக்குத் திருமணம் நடந்த போது, அது குறைந்தது.
மூன்றாவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மேலும் குறைந்தது.
நான்காவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மிக மிகக் குறைந்து விட்டது.
ஐந்தாவது திருமணம் வந்த போது மாப்பிள்ளைக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டி வந்தது.
ஆறாவது திருமணத்தில் அது இன்னும் அதிகமாயிற்று.
இப்போது பெண்ணைப் பெறுகிறவர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள்.
நான் ஐந்து பெண்களுக்குத் திருமணம் செய்தேன்.
என் அண்ணனும், தேவரும் கைகொடுத்தார்கள்.
இப்பொழுது அதே திருமணங்களைச் செய்வதென்றால் என்னால் முடியாது.
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல், பெண் பிறந்து விட்டால் தாய் தகப்பனின் தலை சுழல்கிறது. அந்தப் பொருளாதார நோக்கத்தில் பெண் பிறப்பு வெறுக்கப்படுகிறது.
ஆண் குழந்தை அடி மடையனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
தாய்மையின் கம்பீரத்தை, `சக்தி’ வடிவமாகக் காணும் இந்திய நாடு, பெண்ணை வெறுக்க நேர்வது எவ்வளவு துரதிருஷ்டம்?
வரதட்சணை முறையைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள். ஆனால், அந்தக் கொடுமை இன்னும் நீடித்துக் கொண்டேதானிருக்கிறது.
பெண்மையின் எதிர்காலம் முழுவதுமே பணத்தில் அடங்கிக் கிடக்கிறது. அதன் மேன்மை உணரப்படவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பெண்களை பெருமைப்படுத்துவோம், பெண், போது, குழந்தை, புத்தகங்கள், பெண்ணாகப், பிறந்தது, நான், பாட்டி, தாய், திருமணம், மருந்து, திருமணத்தின், பெண்களை, விட்டால், எங்கள், வந்து, இந்துமதம், அர்த்தமுள்ள, பிறந்தால், பெருமைப்படுத்துவோம், நாட்டுப், எவ்வளவோ, மேல், பெண்மை, பெண்மைக்கும், இந்தியப், சகோதரியின், குறைந்தது, விலை, பாசம், கொடுக்க, பணம், போல், பெண்ணை, இன்னும், தாயார், இடித்துக், வந்தார்களாம், இரண்டாவது, கொள்கிறாள், அலுத்துக், சிறந்த, `பெண், குழந்தையும், மூன்றாவது, பிறப்பு, என்கிறோம், பிறந்து, அந்தக், வயிற்றில், இருந்த, என்னைப்