அர்த்தமுள்ள இந்துமதம் - இசையும் கலையும்
இன்ப ராகங்கள் நம்பிக்கையை உண்டாக்குகின்றன.
வீட்டிலே தகராறு, நிம்மதி இல்லை என்றால் கலை நிகழ்ச்சியில் போய் உட்காருங்கள்.
நமது இசையில், பக்தி ரஸத்தோடு காம ரஸமும் அதிகம் கலந்திருப்பதற்குக் காரணம் இதுதான்.
ஞானத்தைப் போலவே காமமும் ஒரு நிலை யோகம். சிற்றின்ப ரஸம் ஒரு வகையான நம்பிக்கையை ஊட்டுகிறது.
கண்ணனைப் பற்றிப் பாடிய ஆண்டாளும், காதல் உணர்வுகளையே ஒரு வகை ஞானமாக வெளியிட்டாள்; அல்லது ஞானத்தை காதல் வழியே காட்டினாள்.
`கட்டியணைத்தேன்; முத்தம் கொடுத்தேன்’ என்றெல்லாம் பாடப்படும் காதல் பாடல்கள், நிம்மதியற்ற லெளகீகனுக்கு ஒரு நிம்மதி ஏற்படுத்தவே ஏற்பட்டன.
முழுக்க ஞான மார்க்கத்தை உபதேசிக்கும் ஞானிகள், தாங்கள் இருக்கும் உயர்ந்த நிலை கருதி இதை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்படுவது நியாயமே!
ஆனால், உலக வாழ்க்கையில் உள்ளவனின் நிம்மதிக்கு வேறு வகையான வழிகளையும் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்து மதம் ஒப்புக் கொண்டுள்ள சில உண்மைகளை, பச்சையாகவும், பகிரங்கமாகவும் சொல்லிக் குடும்பஸ்தனுக்கு அமைதியைத் தருவது நல்லது என்று கருதுகிறேன்.
காமம் அல்லது காதல் என்பது மத விரோதமானது அல்ல என்பதால்தானே கம்பனுக்குப் பிறகு அருணகிரி நாதராயினும், ஆண்டாளாயினும் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்களாயினும், அனைவருமே அதைப் பக்தியோடு கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
இன்ப உணர்வின் போது பல பிரச்சினைகள் மறக்கப்படுகின்றன.
அதை இசையிலே கேட்கும் போது கேள்விச் சுகமே கூடப் போதுமானதாக இருக்கிறது.
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து அனுபவிப்பதை விட இசைக் காமத்தில் ஆன்மாவுக்கு ஒரு லயம் இருக்கிறது.
சுகமான சங்கீதம், சுகமான பாடல் நெஞ்சுக்கு நிம்மதி.
நம்முடைய இசையின் தாத்பரியத்தைக் காஞ்சிப் பெரியவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்கள்.
இசையின் மூலமாகவே ஈஸ்வர அனுபவத்தைப் பெற முடியும் என்பது அவர்களது வாதம்.
அவர்களது பொன்மொழிகள் அப்படியே இங்கே தரப்படுகின்றன:
கல்வித் தெய்வமான சரஸ்வதி, கையிலே வீணை வைத்திருப்பது எல்லாருக்கும் தெரியும். பரமேசுவரனின் பத்தினியான சாக்ஷாத் பராசக்தி கையிலே வீணை வைத்திருப்பதாகக் காளிதாஸர் `நவரத்னமாலா’ ஸ்தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற ஸப்த சுரங்களின் மாதுரியத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.
ஸரிகம பதநி ரதாம் தாம்
வீணா ஸங்கராந்த காந்தஹெஸ் தாந் தாம்!
அப்படிச் சங்கீதத்தில் மூழ்கியுள்ள `சிவகாந்தா’ (சிவனின் பத்தினி) சாந்தமாகவும் (அமைதியாகவும்), ம்ருதுனஸ்வாந்தா வாகவும் (மென்மையான திருவுள்ளம் படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாசர். அவளை நமஸ்கரிக்கின்றேன் என்கிறார்.
சாந்தாம் ம்ருதன ஸ்வாந்தம்
குசபரதாந்தாம் நமாமி சிவகாந்தம்!
அவர் சுலோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்தஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல ஸங்கீத அனுபவத்தினால் தான் அவளுடைய உள்ளம் மிருதுளமாக புஷ்பத்தைப் போல மென்மையாக, கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.
சாக்ஷாத் பராசக்தியை இப்படிச் சங்கீத மூர்த்தியாக பாவிக்கும் போது அவளுக்குச் சியாமளா என்று பெயர். ஸங்கீதத்தில் தோய்ந்து ஆனந்தமாகவும், சாந்தமயமாகவும் குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளாவைத் தியானித்தால் அவள் பக்தர் களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக் கொண்டேயிருக்கும். தெய்வீகமான ஸங்கீதம் ததும்பும் சந்நிதியில், சாந்தமும் ஆனந்தமும் கைகூடும். இந்த ஸ்லோகத்திலிருந்து ஸங்கீதமானது ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம், கருணை, அன்பு ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று தெரிகிறது.
வேத அத்தியாயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற ஈசுவரானுபவத்தைத் தெய்வீகமான ஸங்கீதத்தின் மூலமும், நல்ல ராக, தாள, ஞானத்தின் மூலமும் சுலபமாகவும், செளக்கியமாகவும் பெற்று விடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் எனப்படும், ஸ்மிருதியைத் தந்திருக்கும் யக்ஞவல்கிய மஹரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.
`அப்ரயத்னேஷ்’… கடுமையான முயற்சி இல்லாமலே- ஸங்கீதத்தில் மோக்ஷமார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார். நம் மனத்தைத் தெய்வீகமான ஸங்கீதத்தில் ஊற வைத்து, அதிலேயே கரைந்து போகச் செய்தால் கஷ்டமில்லாமல் ஈசுவரனை அனுபவிக்கலாம். நாம் பாடி, அனுபவிக்கும் போதே இந்த ஸங்கீதத்தைக் கேட்கிறவர்களுக்கும் இதே அனுபவத்தைத் தந்து விடலாம். வேறு எந்தச் சாதனையிலும் பிறத்தியாருக்கும் இப்படிச் சமமான அனுபவ ஆனந்தம் தர முடியாது. ஸங்கீதம் என்ற மார்க்கத்தின் மூலம், தங்கள் இதயங்களைப் பரமேசுவரனிடம் சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள், ஸங்கீதமே சாக்ஷத் காரத்தைத் தரும் என்பதற்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள்.
அம்பாள் தான் பிரம்மத்தின் சக்தி, நாதம் ஈசுவரன் அல்லது, பிரம்மா. அம்பாள் ஸங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள் என்றால், பிரம்மாவும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும். அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, ஸங்கீதத்தின் மூலம் அவளை உபாஸிப்பவர்களது ஆன்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.
நமது தொண்டை என்கிற மாமிச வாத்தியத்தில் காற்றைப் புரட்டுகிறோம். தவிர ஸங்கீத வாத்தியங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றிலும் இந்தப் புரட்டல் மாத்திரம் பொது. தவில், மிருதங்கம், கஞ்சிரா போன்ற சர்ம வாத்தியங்களில் தோலில் புரட்டுகிறார்கள். வீணை, பிடில், தம்புரா போன்ற நரம்பு வாத்தியங்களில் தந்தியில் புரட்டுகிறார்கள். இந்த வாத்தியங்களில் புரட்டுகளுக்கு நடுவே இழைந்து வரும் `அனுரணனம்’ என்ற இழைப்பு ஒலி நயமான இன்பம் தருகிறது. ஒரு தரம் மீட்டினால் உண்டாகும் ஒலி இழுத்துக் கொண்டே நிற்கிறது. முதல் மீட்டில் உண்டான ஒலி நீடித்து, இரண்டாவது மீட்டில் எழும்பும் ஒலியோடு தழுவி நிற்கிறது. இதுவே `அனுரணனம்.’
புல்லாங்குழல், நாயனம் போன்ற துவாரமுள்ள தந்திர வாத்தியங்களில், காற்றைப் புரட்டுகிறார்கள். ஹார்மோனியமும் ஒரு விதத்தில் வாத்தியந்தான். அதில் வாய்க்குப் பதில் துருத்தி இருக்கிறது. புல்லாங்குழலிலும், நாயனத்திலும் துவாரங்களை விரலால் மாற்றி மாற்றி அடைத்துத் திறக்கிறார்கள் என்றால், ஹார்மோனியத்தில் பில்லைகளை மாற்றி மாற்றி அழுத்தி எடுக்கிறார்கள். தத்துவம் ஒன்று தான்.
சப்தத்தைப் புரட்டுவதோடு அங்கங்களையும் புரட்டி விட்டால் நாட்டியக் கலை உண்டாகிறது. சங்கீதத்தை காதால் கேட்டு, அர்த்த ஆனந்தமும், ஸ்வர ஆனந்தமும் பெறுகிறோம். நாட்டியத்தில் இவற்றோடு கண்ணால் பார்த்து `அங்காசர்ய’ ஆனந்தமும் (அங்கங்களை முறைப்படி அசைப்பதால், புரட்டுவதால் ஏற்படும் இன்பமும்) பெறுகிறோம்.
நவரஸ உணர்ச்சிகளை விளக்குகிற அங்க அசைவான அபிநயம் மட்டுமல்லாமல், நவரஸமில்லாத வெறும் அங்க சரிய (அங்கப் புரட்டு) மட்டுமே ஆனந்தம் தருவது உண்டு என்பதால் தான், நிருத்தம் என்ற கலை ஏற்பட்டிருக்கிறது. ஈசுவரனுக்குச் செய்கிற அறுபத்து நாலு உபசாரங்களில், சங்கீதத்தோடு கூட நிருத்தமும் உபசாரமாகச் சொல்லப்படுகிறது. கீர்த்தனத்தில் சப்தம், அர்த்தம், லயம் யாவும் சேர்ந்து இன்பம் தருகின்றன. சுரம் பாடும்போது, சப்தமும், லயமும் மட்டும் இன்பம் தருகின்றன. ராக ஆலாபனத்தில் வெறும் சப்தம் மாத்திரம் ஆனந்தம் தருகிறது அல்லவா? நிருத்தத்தில் வெறும் அங்கசரியை மட்டும் லயத்தோடு சேர்த்து ஆனந்தம் தருகிறது.
இந்தக் கலைகள் யாவும் காந்தர்வ வேதம் எனப்படும்.
காந்தர்வர்கள் உற்சாகப் பிறவிகள்; அவர்கள் எப்பொழுதும் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருப்பார்கள்.
மனதுக்கு உற்சாகம் தரும் கலைகளுக்கு இதனாலேயே, காந்தர்வ வேதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - இசையும் கலையும், ஆனந்தம், புத்தகங்கள், ஸங்கீதத்தில், அம்பாள், ஆனந்தமும், வாத்தியங்களில், மாற்றி, காதல், தான், இசையும் , இந்துமதம், வெறும், என்கிறார், வீணை, தருகிறது, அர்த்தமுள்ள, புரட்டுகிறார்கள், இன்பம், போது, இருக்கிறது, நிம்மதி, தெய்வீகமான, கலையும், வேறு, அல்லது, என்றால், ஸங்கீதத்தின், சொல்லியிருக்கிறார், மூலமும், விடலாம், எனப்படும், தரும், காற்றைப், மூலம், நிற்கிறது, தருகின்றன, யாவும், மட்டும், காந்தர்வ, கொண்டும், வேதம், சப்தம், ஏற்பட்டிருக்கிறது, மீட்டில், இன்ப, சிறந்த, பெறுகிறோம், அங்க, மாத்திரம், பெயர், உண்டு, கேட்டு, லயம், சுகமான, அவர்களது, இசையின், என்பது, தருவது, நிலை, நமது, யோகம், வகையான, இருக்கிறார்கள், கையிலே, சாக்ஷாத், இப்படிச், உள்ளம், கருணையைப், மிருதுவான, கருணை, ஸங்கீத, அவர், நம்பிக்கையை, பாடுகிறார், தாம், வீணா, அவளை, ஸங்கீதம்