அர்த்தமுள்ள இந்துமதம் - இசையும் கலையும்
தாலாட்டுப் பாடினால் தூக்கம் வருகிறது; சோக கீதம் பாடினால் அழுகை வருகிறது; காமரஸப் பாட்டில் உணர்ச்சி வெறி ஏறுகிறது; கடவுள் பக்திப் பாடலில் நெஞ்சம் நெகிழ்கிறது.
நமது கடவுள் வடிவங்கள் அனைத்துக்குமே, `இசை’ ஆதார வடிவமாக நிற்கிறது.
வீணை இல்லாத கலைமகளா?
மத்தளம் இல்லாத நந்தியா?
புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணனா?
நாட்டியம் ஆடாத நடராஜனா?
விஞ்ஞானத்தில் ஒரு உண்மை உண்டு.
சில வகையான அலைகள் உடம்பை ஆட்டிப் படைக்கின்றன.
நான்கு வேதங்களையும் ஓதும்போது, நான்கு வகையாக ஓதுகிறார்கள்.
அந்த ஒலி அலைகள் வானவெளியையும், சுவாசிக்கின்ற காற்றையும் சுத்தப்படுத்துகின்றன.
`ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தைக் கூட்டாக உச்சரிக்கும் போது, அந்த ஒலி இயற்கையில் எதிரொலிக்கிறது.
அவரைக் கொடிக்கு சங்கு ஊதினால் அது நன்றாகக் காய்க்கிறது.
இடைவிடாத கோயில் மணியோசையில் காற்றே சங்கீத மயமாகி விடுகிறது.
வீணை, வயலின், சிதார் போன்ற நரம்புக் கருவிகளில் பிறக்கும் இசை காது நரம்புகளைச் சுகப்படுத்தி, இதயத்தை மென்மையாக்குகிறது.
பூபாளம் பாடிக்கொண்டே பொழுது விடிகிறது.
ஆனந்த பைரவி பாடிக்கொண்டே உலகம் இயங்குகிறது.
நீலாம்பரி பாடிக்கொண்டே தூங்கப்போகிறது.
மல்லாரி ராகம் வாசித்தால் சுவாமியின் ரதம் கிளம்புகிறது.
அமிர்தவருஷிணி பாடினால் மழை பொழிகிறது.
புன்னாகவராளி பாடினால் பாம்பு கூடப் படம் எடுத்து ஆடுகிறது.
அறிவற்ற ஜந்துகளையும், அசையாப் பொருள்களையும் கூட இசை தன் வசப்படுத்திக் கொள்கிறது.
அந்த இசையின் மூலமும், நாட்டியத்தின் மூலமும் இயற்கையாகவே ஒரு நிம்மதியை மனிதன் பெற முடியும்.
ஆனால் இசை, சுதி சுத்தமாக இருக்க வேண்டும்.
நாட்டியம் ஆடும் பெண், பார்ப்பதற்கு லட்சணமாக இருக்க வேண்டும்.
பதம் பாடுகிறவர்கள் புரியும்படி பாட வேண்டும்.
பக்க வாத்தியங்கள் சுகமான இசை எழுப்ப வேண்டும். கோரமான வர்ண விளக்குகளால் கண்ணைக் கெடுக்கக் கூடாது.
நாட்டியம் ஆடுபவர்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு, இளம் வெள்ளை முதலிய ஆடைகளையே அணிந்திருக்க வேண்டும்.
இசையும் நாட்டியமும் ஒன்றை விட்டு ஒன்றைப்பிரிக்க முடியாதபடி இருந்தால், அதைப் பார்ப்பவனையும் கேட்பவனையும் அதைவிட்டுப் பிரிக்க முடியாது.
அந்த லயத்தின் பெயரே சுகம்; அந்தச் சுகத்தில் கிடைப்பதே நிம்மதி.
எனக்கு பிடித்த ராகங்கள் ஆனந்தபைரவி, சுபபந்து வராளி, மோகனம், சாருகேசி, சகானா, காம்போதி, சங்கராபரணம் ஆகியன.
மற்றும் சில ராகங்களும் உண்டு.
திருமண வீட்டில் தாலி கட்டும் போது வாசிக்கப்படுவது, ஆனந்த பைரவி. அந்த நேரத்திற்கு அது எவ்வளவு பொருத்தமான ராகம்!
அந்த ராகம் காதில் விழும்போதே, கவலைகள் மறந்து விடுகின்றன.
மேல் நாட்டு இசை என்ற பெயரில், டபரா டம்ளர்களைப் போட்டு அடித்து, உயிரை வாங்குகிறார்கள் இப்போது?
வாத்தியங்களிலும் அமங்கல வாத்தியங்கள் உண்டு. அவை தாரை, தம்பட்டை, கொம்பு முதலியன.
அவை வெறியை எழுப்புகின்றன.
போர் வீரனையும், யானைகளையும் கிளப்பி விடவே அந்நாளில் அவை பயன்படுத்தப்பட்டன.
ஊதுவத்தி வாசனையில் கூட மங்கலம், அமங்கலம் என்ற இரண்டு வகை உண்டு.
ஒரு வகையான ஊதுவத்தி இறந்து போனவர்களின் சடலத்தின் அருகே வைக்கப்படுவது. மற்றொன்று சுப காரியங்களுக்குப்
பயன்படுத்தப்படுவது.அதுபோலவே வாத்தியங்களிலும் அமங்கலம் உண்டு.
கச்சேரியில், அமங்கல ராகங்களைப் பாகவதர்கள் பாடாமல் இருப்பது நல்லது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - இசையும் கலையும், அந்த, புத்தகங்கள், வேண்டும், உண்டு, பாடினால், இல்லாத, நாட்டியம், இசையும் , ராகம், பாடிக்கொண்டே, கலையும், அர்த்தமுள்ள, இந்துமதம், மூலமும், இருக்க, வாத்தியங்களிலும், அமங்கலம், ஊதுவத்தி, அமங்கல, வாத்தியங்கள், அலைகள், கடவுள், வருகிறது, சிறந்த, வீணை, வகையான, ஆனந்த, போது, நான்கு, பைரவி