அர்த்தமுள்ள இந்துமதம் - சேவையில் நிம்மதி
நாட்டுக்காகவே தங்களை நேர்ந்து கொண்டுவிட்ட ஞானிகளும், தலைவர்களும், இந்தப் பரத கண்டத்தில் ஏராளமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
சுயநலமும் இங்கேதான் அதிகம்; பொது நலமும் இங்கே தான் அதிகம்.
ஆதி சங்கரர், ராமானுஜர், மகாவீரர், புத்தர் ஆகிய சமய ஞானிகள்; காந்திஜி போன்ற தேசத்தலைவர்கள்; இவர்களெல்லாம் சேவைக்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
அந்த வரிசையில், நம் கண் முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள்; பிஞ்சுப் பருவத்திலேயே தன்னை ஒழுக்கச் சேவைக்கு ஒப்படைத்துக் கொண்டவர்.
கொடிய நாத்திகன் கூட நாக்கிலே பல்லைப் போட்டு, அவர்கள் மீது ஒரு குற்றத்தைச் சுமத்த முடியாது.
ஒரே நாளில் கோடி ரூபாய் வேண்டுமென்றாலும், `செக்’கிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, அதை அவரையே நிரப்பிக் கொள்ளச் சொல்லக் கூடியவர்கள் இந்த நாட்டில் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.
ஆனால், மறந்தும் கூட அவர் செல்வத்தை நினைத்து அறியாதவர்.
எந்தக் காரியத்துக்கும் பிறரை அண்டி அறியாதவர்.
தன்னுடைய உயர்ந்த ஸ்தானத்தை ஒருவகைக் `கறை’யும் இல்லாமல் காப்பாற்றியவர்.
இந்து சமயத்துக்கும் மனித குலத்துக்கும் அவர் ஆற்றியுள்ள சேவைகள் கணக்கிலடங்காதவை.
அண்மையில் தேனம்பாக்கம் குடிசையில், ஒன்பதரை மணிக்கு நான் அவரைச் சந்தித்தேன்.
இந்த நாட்டின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்திக்குக் கிடைக்காத ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இந்திரா காந்தி ஒரு மணி நேரம் காத்துக் கொண்டிருந்தும் கூட அவரோடு ஒரு வார்த்தை பேச முடியவில்லை.
ஆனால், நான் வந்திருப்பதாக ஜன்னல் வழியாகச் செய்தி சொல்லப்பட்டதும், தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்கள் அரிக்கேன் விளக்கை ஏற்றிக் கொண்டு எழுந்து வந்து விட்டார்கள்.
என்னை அழைத்துச் சென்றவர்கள், காஞ்சிபுரம் சங்கரபக்த ஜனசபாவைச் சேர்ந்த திரு.வைத்தியும், வைத்தாவும் ஆவார்கள்.
ஸ்ரீ பெரியவர்கள், தான் தங்கியிருக்கும் குடிலின் நிலைப்படியிலேயே ஒரு பாயைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள்.
என்னோடு நாற்பத்தைந்து நிமிஷம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
குலசேகர ஆழ்வாரைப் பற்றியும், கொங்கு நாட்டைப் பற்றியும், மலையாள மொழியைப் பற்றியும் விவாதித்தார்கள்.
`எனக்கு ஆரோக்கியம் வேண்டும்’ என்று யாசித்தேன்.
`நல்ல சேவை செய்யிறே. நல்லா இருப்பே!’ என்று ஆசீர்வதித்தார்கள்.
`வர்றவா! எல்லாம் உன்னைப் பத்தித்தான் சொல்றா!’ என்றார்கள்.
அந்த முக்கால் மணி நேரத்தில், ஆண்டவனுடனேயே பேசிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
சேவை, சேவை; சேவையைத் தவிரத் தனது தேவை என்றே ஒன்றை அறியாத ஒரு மகாத்மாவின் முன்னால் நான் கைகட்டி மெய்மறந்து நின்றேன்.
இரவு வெகு நேரம் ஆகியும் கூட எனக்காக அவர்கள் எழுந்து வந்ததும், என்னிடம் மனம் விட்டுப் பேசியதுமே எனக்குக் கிடைத்த புது ஆரோக்கியமாகத் தோன்றியது.
அவர்களுடைய நிம்மதி நமக்கெல்லாம் இருந்தால் போதாதா?
நீண்ட காலத் தன்னலத் துறப்பும், சேவையுமே அவருக்கு நிம்மதியைத் தந்து, சமயத்து மக்களுக்கும் நிம்மதியைத் தந்திருக்கின்றன.
அவரைப் போல நாம் ஆக முடியாது.
விஞ்ஞானத்தின் நாகரிக வசதிகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் மண்ணெண்ணெய் விளக்கும், தன் கை விசிறியுமாய் அவர் வாழ்கிறார்.
சீடர்களைக் கூப்பிட்டுக் கை கால் பிடிக்கச் சொல்லும் பழக்கம் கூட அவருக்குக் கிடையாது.
காம, குரோத, லோப, மத, மாச்சரியங்கள் அனைத்தையும் துறந்தவர்.
சில பிராமண நண்பர்கள் அரசியலில் தேர்தலுக்கு நிற்பார்கள். ஸ்ரீ பெரியவர்களிடம் உள்ள ஈடுபாட்டின் காரணமாக அவரிடம் சென்று ஒரு ஸ்ரீ முகம் கேட்பார்கள். யாரையும் அவர் ஆதரிக்க மறுத்து விடுவார்.
அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளாத ஒரே பீடம், காஞ்சி காமகோடி பீடம்தான்.
அவர் லெளகீகத்தில் ஈடுபட்டவர் அல்ல என்றாலும், லெளகீகவாதிகள் எப்படி வாழ்வது என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
விலங்கு இருந்தால் தானே கால் வலிக்கும்; பணம் இருந்தால் தானே தூக்கம் கெடும்.
அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, பொதுச் சேவை.
முடிந்தால் பத்துப் பேருக்கு உதவு; இல்லையென்றால் தெருவிலே போகும் போது, கண்ணாடித் துண்டு கிடந்தால் அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போ.
சாலையில் காரில் அடிபட்டு ஒரு நாய் கிடந்தால் அதை எடுத்து அடக்கம் செய்.
அநாதைப் பிணத்துக்குத் தோள் கொடுத்துச் சுடுகாட்டுக்குத் தூக்கி கொண்டு போ.
ஆபத்தில் சிக்கிச் கொண்ட யோக்கியனுக்குக் கைகொடு.
சேவை செய்யும் போது பலனை எதிர்பார்க்காதே.
உயர்ந்த இடம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு சேவை செய்யாதே.
தண்ணீரில் வாழுகின்ற மீன் அதை விட உயர்ந்த பாலிலே வாழும்படி கெஞ்சினாலும் வாழாது. வாழ முடியாது.
நம்முடைய உள்ளங்கையிலே எவ்வளவு சாதம் அடங்குமோ அதன் பேர்தான் கவளம்.
`இது நமது கடமை’ என்று ஒரு சேவையைச் செய்.
ஊருக்குச் செய்ய முடியாவிட்டாலும் உன் குடும்பத்துக்குச் செய். அதன் பெயரும் சுய தர்மம்தான்.
பொதுச் சேவை என்ற பெயரில் அரசியலில் ஈடுபடுவதனால் நாட்டுக்கு அதனால் பயன் இருந்தாலொழிய, எந்தத் தலைவனையும் நம்பி இறங்காதே.
வில்லங்கங்கள் இல்லாத சேவையில் ஒரு நிம்மதி இருக்கிறது.
மிக முக்கியமான சேவை, தாய்க்கு மகன் செய்யும் சேவையாகும்.
வங்காளத்து இந்துக்கள், காலையிலேயே தாயை வணங்குகிறார்கள். ஒரு தட்டிலே தன் தாயின் சுத்தமான காலை வைத்து, அதைக் கங்கா தீர்த்தத்தால் கழுவி, அந்தத் தண்ணீரையே குடிக்கிறார்கள்.
பெரும்பாலான வங்காள குடும்பங்களில், மாமியார் மருமகள் சண்டை பார்க்க முடியாது.
சுவாமி விவேகானந்தர் சொன்னார்:
`மனைவி என்ற இடத்தில் இந்தியப் பெண்மணி வகிக்கும் நிலை என்ன?’ என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
`அமெரிக்கக் குடும்பத்தில் அன்னைக்கு அளிக்கப்படும் நிலை யாதோ?
ஈன்றெடுத்துப் புகழுக்கெல்லாம் பாத்திரமான அன்னையின் நிலை என்ன?
ஒன்பது மாதங்கள் எனக்குத் தன் உயிரைத் தரக்கூடிய அவள் எங்கே?
நான் எவ்வளவு தீயோனானாலும், எவ்வளவு இழிந்தவனானாலும் தன் அன்பு என்றும் மாறாத தாயின் நிலை எது?
ஒரு சிறிது யான் அவளைத் தவறாக நடத்தியதும், உடனே மண முறிவு வேண்டி நீதிமன்றம் செல்லும் மனைவியோடு ஒப்பிடுங்கால், அத்தாய் எங்கே?
ஓ! அமெரிக்க மங்கையரே! அவள் எங்கே? எங்கே?
நான் அவளை உங்கள் நாட்டில் காணவில்லை!
நாங்கள் இறக்கினும், எங்கள் மனைவியரும் மக்களும் அவளுடைய இடத்தை அடைய வேண்டுமென்று விழைய மாட்டோம்.
எங்கள் தாய்! அவளுக்கு முன்னால் நாங்கள் இறப்பதாயின், அவள் மடியில் மீண்டும் தலை வைத்தே இறக்க ஆசைப்படுவோம்! அவள் எங்கே?
பெண் என்பது வெறும் உடலோடு மட்டும் உறவுபடுத்தக் கூடிய ஒரு பெயர்தானா?
ஆ! ஊன் ஊனோடு ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் போன்ற லட்சியங்களை எல்லாம் கண்டு இந்தியா நெஞ்சு நடுங்குகிறது.
இல்லை! இல்லை! மங்கையே, மெய்யோடு தொடர்புடைய எதனோடும் உன்னைத் தொடர்பு படுத்துதல் கூடாது.
என்றென்றைக்கும் அப்பெயர் புனிதமாக்கப்பட்டு விட்டது.
காமம் என்பதே என்றும் அணுகாத, தீய நினைவுகள் என்றும் நெருங்காத ஒரு பெயர்தான் தாய்.
அதுதான் இந்தியாவின் இலட்சியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - சேவையில் நிம்மதி, சேவை, புத்தகங்கள், அவர், நிம்மதி, நான், எங்கே, அவள், முடியாது, ஸ்ரீ, நிலை, சேவையில் , செய், எவ்வளவு, உயர்ந்த, பெரியவர்கள், பற்றியும், இந்துமதம், இருந்தால், அர்த்தமுள்ள, முன்னால், என்றும், அவரிடம், பொதுச், கொள்ள, வேண்டும், கற்றுக், தானே, என்ன, எங்கள், தாய், இல்லை, நாங்கள், அரசியலில், கிடந்தால், செய்யும், தாயின், போது, எல்லாம், போட்டு, நாட்டில், அறியாதவர், இந்திரா, அந்த, தான், சிறந்த, தங்களை, அதிகம், எனக்குக், நேரம், தோன்றியது, விட்டுப், நிம்மதியைத், நாம், எனக்குத், பேசிக், கொண்டு, எழுந்து, விட்டார்கள், கால்