அர்த்தமுள்ள இந்துமதம் - மாலைக்குள் பாம்பு
இந்த உலகத்தை மறந்து, இதில் ஏற்படும் பற்று, பாசம், இன்பம், துன்பம் அனைத்தையுமே மறந்து இறைவனிடம் லயிப்பது எப்படி? அந்த ஞானத்தைப் பெறுவது எப்படி?
அழகான பெண் கண்ணெதிரே தோன்றினாலும் அதில் அவள் தெரியக்கூடாது; இறைவனே தெரிய வேண்டும்.
கோடிக்கணக்கான ரூபாய்கள் கண் எதிரே கொட்டிக் கிடந்தாலும், அதிலே செல்வம் தெரியக்கூடாது; தெய்வமே தெரிய வேண்டும்.
உலகத்திலேயே உயர்ந்தது என்று கருதப்படுகிற பதவியே உனக்குக் கிடைத்தாலும், அந்தப் பதவியின் சுகம் உனக்குத் தெரியக்கூடாது; பரம்பொருளே தெரிய வேண்டும்.
உற்றார் உறவினர்கள் செத்துக்கிடக்கும்போது கூட அங்கே ஒரு சடலம் சாய்ந்து கிடப்பது உனக்குத் தெரியக் கூடாது; தர்மதேவன் பள்ளி கொண்டிருப்பது தெரிய வேண்டும்.
`இன்பங்களில் அவன்; துன்பங்களில் அவன்; பிறப்பில் அவன்; இறப்பில் அவன்.’
`அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாக’ அவனே உன் கண்ணுக்குத் தெரிய வேண்டும்.
இது எப்படிச் சாத்தியமாகும்?
அழகான மான்குட்டி இறந்து போனால், உள்ளே இருக்கும் மாமிசப் பிண்டத்தை வெளியே தூக்கி எறிந்து விட்டு அதைப் பாடம் பண்ணி வைத்துவிட வேண்டும்.
கல்லின்மீது மழை விழுந்தாலென்ன, வெயில் விழுந்தாலென்ன?
சிலையின் மீது தண்ணீரை ஊற்றினாலென்ன, வெந்நீரை ஊற்றினாலென்ன?
சலனங்களுக்கு ஆட்படாத சமநிலை அதுவே.
அந்தச் சமநிலையில் இறைவனைக் காணமுடியும்.
மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவது எது என்று கண்ணனிடம் அர்ஜுனன் கேட்டான்.
அதன் பெயரே `ஆசை’ என்றான் கண்ணன்.
பகவத் கீதை இதைக் கூறுகிறது.
காம குரோத மத மாச்சரியங்கள் ஒன்றா, இரண்டா?
எதுவும் பூர்த்தியடைவதில்லை.
`இத்தோடு போதும்’ என்று எதையும் விடமுடிவதில்லை.
நினைவுகள் பின்னிப் பின்னி இழுக்கின்றன.
மனித வீணையில் விநாடிக்கு விநாடி சுதிபேதம்.
ஆயிரக்கணக்கான சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஆண்டவனிடத்தில் ஐக்கியமாவதற்கு இந்துமதம் வழி காட்டுகிறது.
அதிலே ஒரு சுகம் இருக்கிறது; பயமற்ற நிலை இருக்கிறது.
வாழ்ந்துக்கொண்டே சாவது லெளகீகமாகி விட்டால், செத்தவன் போல் வாழ்வதுதான் ஞானமாகி விடுகிறது.
தாமரை இலைத் தண்ணீரை இந்து மதம் உதாரணம் காட்டுகிறது.
அதையும் தாண்டித் தத்தளிக்காத தண்ணீராக வாழ்வதற்கும் வழி சொல்கிறது.
ஒரு கட்டம் வரையில் இனிப்பை ருசி பார்த்த பிறகு அதுவே கசப்பாகி விடுகிறது.
கசப்பை உணரத் தொடங்கும் போது, வாழ்க்கை வெறுப்பாகி விடுகிறது.
வெறுப்பே வளர்ந்து வளர்ந்து, இதயம் நெருப்பாகி விடுகிறது.
இந்த வளர்ச்சிக்கு ஆசைதான் காரணமாகி விடுகிறது.
பிரபஞ்ச உணர்ச்சிகளில் இருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொண்டு, சாவைக் கண்டு அழாமலும், பிறப்பைக் கண்டு மகிழாமலும், ஞான யோக நிர்விகல்ப சமாதி அடைவதில் ஒரு சுகம் இருக்கிறது.
`இந்தப் பூமியில் வாழ்ந்துகொண்டே இந்தப் பூமியின் நிகழ்ச்சிகளுக்கு ஆட்படாமல் இருப்பது எப்படி?’ என்று கேட்பீர்கள்.அதைத்தான் சொல்ல வருகிறேன்.
சில நாட்களுக்கு முன் பாதி முடிந்த தெலுங்குப் படம் ஒன்றைப் பார்த்தேன். அதன் பெயர் சீதா கல்யாணம்.
திரையில் சீதை காட்சியளித்தாளோ இல்லையோ, என் நினைவு கம்ப ராமாயணத்திற்குத் தாவி விட்டது.
பிறகு படத்தில் என்ன காட்சிகள் வந்தன என்பது எனக்கு நினைவில்லை.
கண்கள் திரையையே பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் இதயமோ, கம்ப ராமாயணத்தின் மிதிலைக் காட்சிப் படலத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.
மீண்டும் அதை இழுத்து வந்து, படத்திலே நிறுத்துவது, எனக்குச் சிரமமாகத்தான் இருந்தது.
அங்கே ஒரு நிகழ்ச்சியில் லயித்த மனம், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளைக் கண்டும், காணாமல் இருந்து விட்டது.
லயித்து நிற்பது, ஒருவகைச் சித்தப் பிரமையே.
இறைவனிடத்தில் லயித்து நின்றுவிட்டால், பிரபஞ்சத்தின் சகல நிகழ்ச்சிகளில் இருந்தும் நாம் விடுபட்டு விடுகிறோம்.
காஞ்சிப் பெரியவர்களின் கருத்துகளைத் திரட்டித் `தெய்வத்தின் குரல்’ என்றொரு புத்தகத்தை 900 பக்கங்களில் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அதிலுள்ள பெரியவர்களின் கருத்து ஒன்றை, முழுமையாக இங்கே தந்தால், உங்களுக்கு விவரம் புரியும்.
எந்த வரியையும் விலக்க முடியாதபடி அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.
`கண்ணனும் சொன்னான், கம்பனும் சொன்னான்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - மாலைக்குள் பாம்பு, வேண்டும், தெரிய, விடுகிறது, புத்தகங்கள், இருக்கிறது, அவன், இந்துமதம், இருந்து, மாலைக்குள், சுகம், தெரியக்கூடாது, அர்த்தமுள்ள, எப்படி, பாம்பு, வளர்ந்து, பிறகு, காட்டுகிறது, அந்தக், கண்டு, என்பது, விடுபட்டு, கம்ப, லயித்து, விட்டது, பெரியவர்களின், அங்கே, மறந்து, பெயர், இந்தப், சிறந்த, அழகான, அதிலே, ஊற்றினாலென்ன, தண்ணீரை, விழுந்தாலென்ன, உனக்குத், அதுவே