அர்த்தமுள்ள இந்துமதம் - மாலைக்குள் பாம்பு
ஆத்மா தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால், அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால் அதெப்படி என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரிப் பல தினுசாக குழப்பிக் குழப்பிப் பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.
`நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடம் இருக்கின்றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார் (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் சமயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர் தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால், எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால், அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே, இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.
ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால்தான் அவற்றுக்கு உருவமும் உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல; இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர். இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்கிறார்.
பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும். உள்ளேயிருந்து ஈசுவரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான் (ஈச்வர ஸர்வ பூதானாம் ஹ்ருதே தேசே அர்ஜீனதிஷ்டத பிராம்யன் ஸர்வ பூதானி யந்த்ராரு டானி மாயயா) என்கிறார்.
இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான், அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். `எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடம் உள்ளன’ என்று கூறுபவரே, `என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை. நானும் ஒரு பொருளிலும் இல்லை’ என்கிறார் (நச மத் ஸ்தானி ந சாஹம்தேஷீ அவஸ்தீத;)
இங்கே ஆத்மா எல்லாவற்றையும் கடந்தது என்ற தத்துவம் பேசப்படுகிறது.
`இது என்ன குழப்புகிறாயே’ என்றால் எல்லோருக்கும் விளங்குவதில்லை (ந அகம் ப்ரசாக ஸர்வஸ்ய;) அதுதான் `என் யோக மாயா’ (யோக மாயா ஸமாவ்ருத;) என்று ஒரு போடு போடுகிறார்.
`இது என்ன உபதேசம் வேண்டிக் கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!’ என்று தோன்றுகிறதா?
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம்.
`நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருந்தால், `ஆயிரம் பேர் இருந்தால் ஆயிரம் பேருக்கும் விளங்கமாட்டான்’ என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி `நான் எல்லாருக்கும் விளங்க மாட்டேன்’ என்றால் `ஆயிரம் பேரில் 999 பேருக்கு விளங்காமலிருந்தாலும் இருக்கலாம். ஒருவனுக்காவது விளங்குவேன்’ என்றுதான் பொருள். பகவான் `எல்லோருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்’ என்றாரேயன்றி `ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்’ என்று சொல்லவில்லை.
அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.
அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். `நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன், ஒரு பொருளும் என்னிடம் இல்லை’ என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு; எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்து விட்டு, `ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.
மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு இல்லையென்று தெரிந்து விடுகிறது. ஆனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரும்மம்தான்.
`இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன அர்த்தம்?
`மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது’ என்பது எப்படியோ, அப்படித்தான்.
இரண்டும் உண்மைதானே?
பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு, மாலையைத் தனக்குள் `விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி `இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது. மாலை தான் ஆதாரமாகத் தெரிகிறது.
மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம் என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன் தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈசுவரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத போது, அது ஈஸ்வரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம் தானே!
அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால், ஆத்மானந்தம் புரிகிற போது இது எதுவுமே இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று `என்னிடத்திலும் பொருள்கள் இல்லை’, `நானும் பொருள்களிடத்திலில்லை’ என்று கூறி விட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமோ?
கம்பர், சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர்என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!
`அலங்கல்’ என்றால் மாலை. `அரவு’ என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு மாலையில் தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம். இது போலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப் போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ அவர்தான் ராமச்சந்திர மூர்த்தி என்றார்.
பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - மாலைக்குள் பாம்பு, பாம்பு, என்றால், எல்லாப், பகவான், புத்தகங்கள், மாலை, இருக்கிறேன், மாலைக்குள், பிரபஞ்சம், மாட்டேன்&, விளங்க, என்ன, `நான், இவர், ஆதாரம், ஸ்ரீ, தான், தெளிவு, ஆத்மா, ஈசுவரன், தோன்றும், ஆதாரமாக, அர்த்தமுள்ள, இந்துமதம், `இது, கீதையில், இல்லை&, சொல்கிறார், பொருட்களும், என்னிடம், கிருஷ்ண, பொருட்களிலும், அல்லது, இருப்பதும், பொய்ம்மை, மாலைதான், பாம்பாக, அலங்கலில், மாலையைப், இருப்பதாகவோ, போது, எதுவுமே, இருந்ததாகவோ, எவனோ, பிரபஞ்சத்துக்கு, கம்பர், ஒன்று, ஸர்வ, இவருக்கு, குழப்பம், என்பதால், இருக்கிறார், பச்யதி, சிறந்த, அந்தச், எல்லாவற்றுக்கும், இல்லை, ஈசுவரனே, எல்லாவற்றையும், ஸர்வஸ்ய, கிடக்கிறது, பொருளிலும், பொருளும், என்கிறார், நான், `ஆயிரம்