பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நூல்
பொருநனை விளித்தல்
அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது வேறுபுல முன்னிய விரகறி பொருந |
புதுப்புது வருவாய் வளம் பொலிந்தோங்கும் பேரூரில் விழா நடந்து முடிந்த மறுநாள் சோறு கிடைக்காமல், விழாவில் பங்கு கொண்ட கலைஞர்கள் விழா நடைபெறும் வேறு ஊரை நாடிச் செல்வது வழக்கம். இந்தப் பாட்டில் ஆற்றுப்படுத்தப்படும் பொருநன் அப்படிச் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் ஆற்றுப்படுத்தும் புலவர் கூறுகிறார். பொருந கேள்
பாலையாழின் அமைப்பு
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் விளக்கழ லுருவின் விசியுறு பச்சை. |
5 |
எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற் றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப் பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவா ழலவன் கண்கண் டன்ன துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி.. |
10 |
எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப் பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின். |
15 |
ஆய்தினை யரிசி யவைய லன்ன வேய்வை போகிய விரலுளர் நரம்பின் கேள்வி போகிய நீள்விசித் தொடையல் மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி. |
20 |
பந்தல், பச்சை, வயிறு, போர்வை, ஆணி, வறுவாய், திவவு, வேய்வை, நரம்பு, தொடையல் முதலான உறுப்புகளுடன் யாழ் எவ்வாறு கவர்ச்சியாக அமைந்திருந்தது என்பது முதலில் கூறப்படுகிறது. பந்தல் – பிளவுபட்ட குளம்பு போல் இருந்தது. பச்சை – எரியும் விளக்கின் சுடர் போல் இருந்தது. வயிறு – நிறைமாதத் தாயின் வயிறு போல் இருந்தது. போர்வை – யாழின் வயிற்றில் போர்த்தப்பட்டிருந்தது. அது சூலுற்ற திருமகளின் வயிற்றில் மென்மயிர் ஒழுகியது போன்ற பொன்னிற வெல்வெட்டுத் துணியாலான போர்வை.. ஆணி – வலையிலுள்ள நண்டுக்கண் போல் இருந்தது. அது அடிக்கப்பட்ட துளைவாயை மூடி தூர்த்துக் கிடந்தது. வறுவாய் – எட்டாம் நாள் தோன்றும் குறைவட்ட நிலாவைப் போல் இருந்தது. திவவு – பாம்பில் படுத்திருக்கும் மாயோன் கைவளையல் போல் இருந்தது. வேய்வை – இது நரம்பில் உளரும்போது விரலில் அணியும் கவசம். அது தினையரிசி அவியல் போன்றது. நரம்பை நெருடும் நுனியை உடையது. தொடையல் – நரம்பானது யாழில் தொடுக்கப்பட்டிருக்கும் பகுதி. இதன் இடத்தைப் பொறுத்துத்தான் யாழின் கேள்வியிசை பிறக்கும். மொத்தத்தில் யாழானது பூப்பு மணம் கமழும் பெண்ணை நீராட்டி அணங்கு (அழகு) செய்து வைத்திருப்பது போல் பொலிவுற்றிருந்தது.
ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை |
யாழை மீட்டிப் பாடுதல்
வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும் சீருடை நன்மொழி நீரொடு சிதறி |
வழியில் செல்லும்போது பொருநன் இத்தகைய யாழை மீட்டிப் பாடிக்கொண்டு செல்வான். அப்போது பாலைப்பண் பாடுவது வழக்கம். வழியில் ஆறலை கள்வர் படைகொண்டு தாக்குவதிலிருந்து விடுபடுவதற்காகத் தான் பொருநன் அதாவது பறைக்கலைஞன் எனக் காட்டிக் கொள்ளும் வகையில் இவ்வாறு யாழில் பாலைப்பண் பாடிக்கொண்டு பொருநர் கூட்டம் செல்லும் எனப் பாடல் தெரிவிக்கிறது) இதனால் ஆறலைக் கள்வர் அருள் காட்டுவர். வழிப்பறி செய்வதிலிருந்து மாறுபடுவர். இன்னலின்றிப் பொருநர் பெயர்ந்து செல்ல விட்டுவிடுவர். மேலும் இவர்களது பாலைப்பண் கள்வர்களையும் மருவச் செய்யும். இதனால் பொருநர்க்கு உதவும் நண்பராகிவிடுவர். வாரியும், வடித்தும், உந்தியும், உறழ்ந்தும் யாழிசை கூட்டுதல் மரபு. அத்துடன் ஈர நன்மொழிகளை (அன்பு கலந்த சொற்களை) நீர்மை கலந்து பண் கூட்டி வாயால் பாடிக்கொண்டும் செல்வர்
பாடினியின் கேசாதிபாத வருணனை
அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் | 25 |
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண் இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப் பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல் மயிர்குறை கருவி மாண்கடை யன்ன பூங்குழை ஊசற் பொறைசால் காதின் |
30 |
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின் ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற் கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர் அணங்கென உருத்த சுணங்கணி யாகத் |
35 |
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ் உண்டென வுணரா உயவும் நடுவின் வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல் இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் |
40 |
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற் பரற்பகை யுழந்த நோயொடு சிவணி மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள் |
45 |
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற் பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி |
பொருநன் என்பவன் யாழை மீட்டிக்கொண்டும், பாடும் பாடலின் கருத்து புலப்படுமாறு நடித்துக் கொண்டும், யாழின் பண்ணிசைத் தாளத்திற்கேற்பக் காலடித் தாளம் போட்டுக்கொண்டும் ஆடுபவன் எனபதைப் பாடலால் உணர முடிகிறது, அன்றியும் பறை முழக்கும் கூட்டத்தவனாகவும் காணப்படுகிறான். பாடினி பொருநனின் மனைவி. அவளும் அவனோடு சேர்ந்து ஆடுவாள். இங்குள்ள பாடலடிகள் வழிநடை மேற்கொண்டிருந்த பாடினியின் பொலிவைப் புலப்படுத்துகின்றன.
அவள் கூந்தல் ஆற்றுமணல் படிவுபோல் நெளிநெளியாக இருந்தது நெற்றி பிறைபோல் இருந்தது. புருவம் கொல்லும் வில்லைப்போல் வளைந்திருந்தது எனினும் கடைக்கண்ணில் மழைபோல் உதவும் கொழுமை இருந்தது. வாய் இலவம் பூவின் இதழ்போல் சிவந்திருந்தது. அதிலிருந்து இனிய சொற்கள் மலர்ந்தன. வெண்பற்கள் முத்துக் கோத்தாற்போல் இருந்தன. பல்வரிசை பழிக்க முடியாதவாறு ஒழுங்காக இருந்தது. காதுக்குப் பாரமாகக் குழை ஊசலாடிக் கொண்டிருந்தது. குழை மயிர் வெட்டும் கத்தரிக்கோல் போலக் காதில் தொங்கியது. அவளது நாணம் காண்போரை அழித்துக் கொண்டிருந்தது. அதற்காகவோ, அதனாலோ அவளது கழுத்து ( எருத்து ) குனிந்திருந்தது. பருத்த தோள் வளைந்தாடும் மூங்கிலைப் போல் இருந்தது. முன்கையில் பொசுங்கு மயிர்கள் முடங்கிக் கிடந்தன. மென்மையான விரல்கள் மலையில் மலர்ந்த காந்தள் மலர் போன்றவை. விரலில் ஒளிரும் நகம் கிளியின் வாயைப் போல் குழிவளைவு கொண்டது. கிளியின் வாயைப் போல் சிவந்தும் இருந்தது. நெஞ்சிலே பொன்னிறப் பொலிவு (சுணங்கு) இருந்தது. (இலை தைக்க உதவும் சோளத் தட்டையின் ஈர்க்கை நாம் அறிவோம்) ஈர்க்கும் இடை நுழைய முடியாதபடி மார்பகங்கள் இணைந்திருந்தன. அவை எடுப்பான மார்பகங்கள். வயிற்றிலிருந்து கொப்பூழ் தண்ணீர் சுழலும் சுழிபோல் இருந்தது. அசைந்தாடும் இடை உண்டோ என்று எண்ணும்படி இருந்தது. அல்குல் துணியின் மேல் வைரமணிக் கோவை (காழ்) இருந்தது. (இந்தக் காழ் இரண்டு கால்களின் தொடைகளுக்கு இடையே ஆடைக்கு மேல் தொங்கும்) யானைக்கு இரண்டு துதிக்கை இருப்பதுபோல் கால் தொடைகள் (குறங்கு) காலில் பொருந்தி ஒழுகும் மயிர். (ஒப்பு நோக்குக – கையில் அரிமயிர்) இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப்போல் மென்மையான காலடிகள். அரக்கை உருக்கி வைத்திருப்பது போன்று பொடிசுடும் செந்நிலத்தில் அவள் ஒதுங்கி ஒதுங்கி நடந்து செல்கிறாள். அப்போது பருக்கைக் கற்கள் தன்னை மிதிக்கிறாளே என்று அவளுக்குப் பகையாகிக் காலில் உருத்துகின்றன. அந்தத் துன்பத்தோடு சேர்ந்து அவளது காலடியில் நீர்க்கொப்புளங்கள் போட்டுவிடுகின்றன. அவை கானல் நீரின் பழங்கள் போல் உள்ளன. அதனால் அவளுக்காக அவர்களின் குழு நண்பகல், அந்தி வேளைகளில் நடந்து செல்வதில்லை. காலை வேளைகளில் பெண்மயில் போல் ஆடாமலும், அலுங்காமலும் பதனமாக நடந்து சென்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு, போல், நடந்து, பொருநன், இலக்கியங்கள், வயிறு, யாழின், போர்வை, கள்வர், பொருநராற்றுப்படை, அவளது, உதவும், பாலைப்பண், வேய்வை, யாழை, பச்சை, பத்துப்பாட்டு, யன்ன, சேர்ந்து, அவள், குழை, பாடினி, பெருந்தகு, பாடினியின், சங்க, கூந்தல், காந்தள், அல்குல், கொண்டிருந்தது, மென்மையான, இரண்டு, காலில், ஒதுங்கி, வேளைகளில், காழ், மேல், இதனால், கிளியின், வாயைப், மார்பகங்கள், மயிர், விழா, திவவு, தொடையல், வயிற்றில், விரலில், வறுவாய், ரொழுகிய, தன்ன, போகிய, பந்தல், அமைவரு, யாழில், வைத்திருப்பது, வழியில், பாடிக்கொண்டு, அப்போது, முன்கை, வடித்தும், வாரியும், ஆறலை, செல்ல, வழக்கம், மீட்டிப், பொருநர்