பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு

முல்லை நிலக் கோவலரின் குழலிசை
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை |
170 |
யுறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன் மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக் கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட பல்பூ மிடைந்த படலைக் கண்ணி யொன்றம ருடுக்கைக் கூழா ரிடையன் |
175 |
இடையன் தன் காலில் செருப்பு அணிந்திருந்தான். தோளில் கனக்கும் பால் கறந்த பானை இருபுறமும் தொங்கும் காவடித் தண்டைத் தாங்கிப் பிடித்தும், வாக்க வரும் விலங்கை வீழ்த்த வைத்திலுந்த மழுவை ஊன்றிப் பிடித்தும் அவனது வலிமை மிக்க கைகள் காப்புக் காய்த்துப் போயிருந்தன. இரண்டு பக்கமும் பால்குட உறி தொங்கும் காவடித் தண்டைச் சுமந்து சுமந்து அவன் தோளிலும் காப்புக் காய்த்திருந்தது. தலைமயிர் அவனது தோளில் சுருண்டு விழுந்தது. கறந்த பாலின் ஈரத்தை அவன் தன் ஓரி மயிரில் தடவிக் கொண்டான். மரக் கிளைகளிலும் கொடிகளிலும் பூக்கும் பலவகைப் பூக்களை ஒன்றை அடுத்து ஒன்றாக மாற்றி மாற்றித் தொடுத்த படலைக் கண்ணியை அவன் தலையில் அணிந்திருந்தான். மாற்று ஆடை இல்லாமையால் ஒரே ஆடையை விரும்பி உடுத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளவன். என்றாலும் வயிறாரக் கூழ் குடிப்பான்.
கன்றமர் நிரையொடு கானத் தல்கி யந்நு ணவிர்புகை கமழக் கைம்முயன்று ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச் செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலி னின்றீம் பாலை முனையிற் குமிழின் |
180 |
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின் வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப் பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும் புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத் |
இடையனின் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அது சலித்துவட்டால் பொந்துள்ள குமிழ மரத்தில் யாழ் செய்துகொண்டு இசைப்பான். கன்றுக் குட்டிகள் விரும்பி உடன்மேயும் ஆனிரைகளோடு அவன் கானத்து மேய்ச்சல் காட்டில் ஓய்வாகத் தங்குவான். அப்போது தனக்கு வேண்டிய புல்லாங்குழலைத் தானே செய்து கொள்வான். ஞெலிகோலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தீயில் காய்ந்து கனப்புடன் இருக்கும் ஞெகிழியால் மிகுந்த வலிமையோடு மூங்கிலில் அழுத்தித் துளையிட்டது அந்தக் குழல். துளை போடுவதற்காக அவன் கையால் முயன்று அழுத்தும் போது அம்நுண் அவிர்புகை கமழும். புல்லாங்குழலில் அவன் பாலைப் பண்ணை இனிமையாகப் பாடுவான். அதில் சலிப்பு தோன்றினால் [முனையின்] யாழிசை மீட்டுவான். யாழும் அவனே செய்து கொண்டதுதான். குமிழ மரத்தின் கொம்பை வளைத்து மரல் என்று சொல்லப்படும் பெருங்குரும்பையின் நாரை முறுக்கி நரம்பாக்கிக் கட்டி வில்யாழ் செய்துகொள்வான். அதில் விரல்களால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவான். அதன் ஓசை பல்கால் பறவை என்று சொல்லப்படும் வண்டின் குரல் போல இனிமையாக இருக்கும். இந்தப் புல்வெளியைக் கடந்து சென்றால் சிற்றூர் வரும்.
முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன
தெழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற் | 185 |
பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற் களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க் குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற் பருவ வானத்துப் பாமழை கடுப்பக் |
190 |
கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர் |
இந்தச் சிற்றூர் எழுந்தோங்கிய முள்மரக் காடுகளை ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும். வரைப்பு எனப்படும் ஊரின் எல்லைப் பகுதிகளில் மாட்டுத் தொழுவங்கள் இருக்கும். அடுத்து தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்கள் பெண் யானைக் கூட்டம் போல் காணப்படும் அது குதிர்முற்றம் முற்றத்தின் உட்பகுதியில் பந்தல். அதற்கு யானையின் கால்களைப் போலப் பந்தர்க்கால்கள். இவை முடிச்சுமரக் கால்கள். (திரிமரம்) பந்தலில் சாட்டு உருளைகள் மாட்டப்பட்டிருக்கும். (கதிர் சுமக்க உதவும் இந்தக் கூடைகளை இக்கால உழவர் சாட்டுக்கூடை என்று வழங்குகின்றனர்) அங்குக் கலப்பையும் சார்த்தப்பட்டிருக்கும். அங்கே கொட்டில் (சமையல்கூடம்) பகுதியில் சமைக்கும் புகை வரும். அதனால் அதன் சுவர் பறைந்து போயிருக்கும். (அழுக்குப் படிந்து காணப்படும்) வீடுகள் வானில் பரவிக் கிடக்கும் மழை மேகங்கள் போல் காணப்படும். வீடுகள் கருவை என்னும் மருக்கட்டான் புல்லால் வேயப்பட்டிருக்கும். அது அழகிய குடில்கள் கொண்ட சிற்றூர்.
நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப் புகரிணர் வேங்கை வீகண் டன்ன வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற் |
195 |
றின்சுவை மூரற் பெறுவிர் ஞாங்கர்க் |
சமாத்து வடித்த தினைச்சோற்றில் அவரைக்காயைச் சேர்த்துச் செய்த வான்புழுக்கு (வெஜிடபிள் பிரியாணி) அச் சிற்றூரில் விருந்தாகக் கிடைக்கும். பயின்று பயின்று, சுவைத்துச் சுவைத்து இனிமையாக உண்ணும் அளவுக்குப் பெறலாம். சமைத்து வடித்த வரகஞ் சோற்றின் குறள்கள் (குறுநைகள்) அவிழ்ந்து மலர்ந்திருப்பதானது பூளாப் பூக்கள் போலத் தூய வெண்மையுடன் காணப்படும்.
மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்
குடிநிறை வல்சிச் செஞ்சா லுழவர் நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப் பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சி லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித |
200 |
தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை யரிபுகு பொழுதி னிரியல் போகி வண்ணக் கடம்பி னறுமல ரன்ன வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற் கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும் |
205 |
வன்புல மிறந்த பின்றை மென்றோன் |
விருந்து உண்டபின் உழுத துடவை நிலங்களையும், உழாத வன் புலங்களையும் கடந்து செல்ல வேண்டும். ( கலப்பை உழுது செல்லும் பள்ளத்தை இக்காலத்தில் படைச்சால் என்பர். நன்செய் நிலத்தில் அவை உழும்போதே மறைந்துவிடும். புன்செய் நிலத்தில் அவை கரை கரையாகத் தெரியும். இது புன்செய் நிலத்தில் செஞ்சால் என்று குறிப்பிடப்படுகிறது. ) செஞ்சால் உழவர்களின் வீட்டில் சேமிப்பாகக் குடும்பத்தை நிறைவு செய்யும் வகையில் செந்நெல் போன்ற தானியங்கள் நிறைந்திருந்தன. என்றாலும் அவன் துடவையைத் துகள் ( துளர் ) படும்படி உழுகிறான். பழக்கப்பட்ட காளைகளை நுகத்தில் பூட்டி உழுகிறான். அவனது நாஞ்சில் கலப்பையானது துதிக்கையோடு கூடிய பெண்யானையின் தலை போன்றது. உடுப்புமுகம் என்பது உடும்பு போன்ற முகம். அது கலப்பையின் நாவுப் பகுதி. அதில் இரும்பாலான கொழுவும் சேர்ந்திருக்கும். நாவும் கொழுவும் மண்ணுக்குள் மூழ்கிப்போகும் அளவுக்கு உழவன் ஆழமாக உழுதான். புன்செய் உழவு - படைசாலில் விதைகள் போடப்பட்டன. ( அடுத்து வரும் உழவுக்காலின் போது விதை தானே ஊன்றப்பட்டு விடும். ) இப்படி உழப்பட்ட நிலங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். அடுத்து வன்புலத்தைக் கடக்க வேண்டும். அங்கே குறும்பூழ்ப் பறவைகள் (காடை) மேயும். அவற்றின் குஞ்சுகள் நல்ல வண்ணமுள்ள கடப்பம்பூ போன்ற மயிர்களைக் கொண்டவை. வழிப்போக்கர்களைக் கண்டதும் அவை தம் குஞ்சுகளை அழைத்துக்கொண்டு சென்று தம் கட்சியில் (கூட்டில்) பதுங்கிக் கொள்ளும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, அவன், வரும், இலக்கியங்கள், அடுத்து, காணப்படும், அவனது, தானே, சிற்றூர், பொரும்பாணாற்றுப்படை, இருக்கும், அதில், பத்துப்பாட்டு, நிலத்தில், புன்செய், வேண்டும், கருவை, கலப்பை, உழுது, கடந்து, சொல்லப்படும், இனிமையாக, வீடுகள், செல்ல, செஞ்சால், உழுகிறான், கொழுவும், துடவை, பயின்று, அங்கே, பாடுவான், வடித்த, போல், இசைப்பான், தொங்கும், காவடித், பிடித்தும், காப்புக், கறந்த, தோளில், சங்க, முல்லை, படலைக், அணிந்திருந்தான், சுமந்து, விரும்பி, குழல், செய்துகொண்டு, குமிழ, செய்து, போகி, பறவை, உடுத்திக், கொள்ளும், என்றாலும், போது