பட்டினப்பாலை - பத்துப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நூல்
காவிரியின் சிறப்பு
வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா |
5 |
மலைத்தலைய கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும் |
மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்து வயலில் பொன்போல் விளைச்சல் பெருகும். எனவே அது பொய்யாக் காவிரி. ஒளி விளங்கும் சூரியன் ஒரு வெண்மீன். திங்களைப் போல் காலம் மாறாமல், காலக் கணியாய் விளங்குவதால் அது வசையில்லாத புகழினை ஊடையது. வானம்பாடி ‘வ்வான் வ்வான் ‘ என்று குரல் தந்து தன்னையே பாடிக்கொள்ளும். ‘தளி’ என்பது மேகத்திலுள்ள நீர். வானம்பாடி நீராக உண்ணுவது இந்தத் தளிநீரை மட்டுமே. சூரியன் திசைமாறித் தென்முகமாகச் சென்றாலும், வானம்பாடி நீரின்றித் தேம்பினாலும், காவிரியில் புனல் பாய்ந்து பொன் கொழிப்பது தவறுவதில்லையாம். காவிரித் தாய்க்குத் தலை. தலைக்காவிரி தோன்றும் குடகுமலை.
சோழ நாட்டின் சிறப்பு
விளைவறா வியன்கழனிக் கார்க்கரும்பின் கமழாலைத் தீத்தெறுவிற் கவின்வாடி |
10 |
நீர்ச்செறுவி னீணெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கட் |
கழனியில் கரும்பும் வயலில் ஆம்பலும் பூக்கும். காவிரியாற்றுக் கழனிகளில் என்றும் விளைச்சல் இருந்துகொண்டேயிருக்கும். கழனிகளில் விளைந்த கரும்பை ஆலையில் சாறு பிழிந்து வெல்லமாக்குவதற்காகக் காய்ச்சிய புகையின் சூடு பட்டு நீர் வயல்களிலிருந்த நெய்தல் பூக்கள் சாம்பிவிடுமாம். சாம்புதல் = சூடுபட்டு வாடுதல்
காய்ச்செந்நெற் கதிரருந்து மோட்டெருமை முழுக்குழவி கூட்டுநிழல் துயில்வதியும் |
15 |
கோட்டெங்கிற் குலைவாழைக் காய்க்கமுகிற் கமழ்மஞ்சள் இனமாவின் இணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளையிஞ்சி |
விளையாடிய எருமைக் கன்றுக்குட்டி கதிர் முற்றிய நெல் வயலில் இறங்கிக் காலால் கதிர்களைத் துவட்டி விட்டு நெல்லைப் பாதுகாத்து வைத்திருக்கும் நெற்கூட்டின் நிழலில் படுத்திருக்கும். ஊரைச் சூழ்ந்துள்ள வயல் முற்றங்களில் தென்னை, வாழை பாக்குமரம் மஞ்சள், மா, பனை, சேம்பு, இஞ்சி முதலான பணப்பயிர்கள் விளைந்திருக்கும்.
அனகர் வியன்முற்றத்துச் | 20 |
சுடர்நுதல் மடநோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் |
25 |
காயும் உணவுப்பொருள்களைக் கவர்ந்து உண்ணும் கோழிகளை, காதில் அணிந்திருக்கும் பொன்னணிகளைக் கழற்றி எறிந்து மகளிர் ஓட்டுவர். அவை குழந்தைகள் உருட்டும் நடைவண்டிகளைத் தடுக்கும் செல்வச் சீமாட்டியர் சுடரும் நெற்றியும், எதையும் பொருட்படுத்தாத கள்ளம் கபடமற்ற மடமை நோக்கமும் கொண்டவர்கள். காதிலே மதிப்புமிக்க குழைகளையும், கழுத்திலே பொருத்தமான இழைகளையும் அணிந்திருப்பர். முற்றத்தில் உணவு தானியங்களை அந்த மகளிர் காயவைத்துக் கொண்டிருப்பர். கோழிகள் அவற்றைக் கவர்ந்து உண்ணும். அந்தக் கோழிகளை அவர்கள் தம் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளைக் கழற்றி எறிந்து ஓட்டுவர். அவர்களுடைய பிள்ளைகள் மூன்று சக்கர வண்டியை அவ்விடங்களில் உருட்டிக்கொண்டு செல்லும்போது அந்தக் குழைகள் தடுக்கும். தடையையோ, குழையின் மதிப்பையோ பொருட்படுத்தாமல் பிள்ளைகள் தம் தேர் வண்டியை உருட்டிச் செல்வர். முக்கால் சிறுதேர் = நடைவண்டி உணங்கு உணா = காய வைத்திருக்கும் உணவுப் பண்டம் புரவியின் உருட்டும் = குதிரைபோல் இழுத்துச் செல்வர்
விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு |
விலங்கு-பகை அல்லது மக்களை மக்கள் தாக்கும் பகை இல்லாதது சோழநாடு. சோழ நாட்டில் பயிர்களை உண்ணும் விலங்குபகை உண்டு. உட்பகை, வேற்றுநாட்டுப் பகை போன்ற எந்தப் பகையும் இல்லை. கொழுத்துக் கிடக்கும் செல்வக் குடிகள் பலவாகப் பெருகியிருந்தன. இவர்கள் வாழும் செழுமையான சிற்றூர்கள் பலவற்றைக் கொண்டது சோழநாடு.
நகரச் சிறப்பு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்லாய்ப் பஃறி |
30 |
பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும் |
காவிரிப்பூம்பட்டினத்தில் நிலவாணிகம் - உப்பேற்றிக்கொண்டு ஆற்றின் வழியே சென்ற பஃறி மிதவை பண்டமாற்றாக விற்பனை செய்த நெல்லோடு மீண்டது. ஆற்றோரங்களில் குதிரைகளைக் கட்டும் முளைக்கம்பத்தில் அந்தப் பஃறிகள் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடாமல் இருப்பதற்காகக் கட்டப்பட்டிருந்தன.
கழிசூழ் படப்பைக் கலியாணர்ப் பொழிற் புறவிற் பூந்தண்டலை மழைநீங்கிய மாவிசும்பின் மதிசேர்ந்த மகவெண்மீன் |
35 |
உருகெழுதிறல் உயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கை இருகாமத் திணையேரிப் |
காதலர் குளம் - சிவன் கோயிலுக்கு எதிரில் ஆணும் பெண்ணும் தம் காமம் நிறைவேற மூழ்கி எழும் இரட்டை ஏறி இருக்கும். உப்பங்கழி, உழுநிலம், பொழில், புறவு, பூஞ்சோலை ஆகியவற்றைக் கொண்டது புகார் நகரம். மகர வெண்மீனைக் கொடியில் கொண்டவன் காமவேள். மழைமேகம் இல்லாத வானத்தில் மக(ர) வெண்மீன் தெரியும். காமவேள் கோட்டம், நிலாக்கோட்டம், குமர கோட்டம் ஆகிய கோயில்கள் மணக்கும் பூக்கள் கொண்ட அந்தச் சோலைப் பகுதியில் இருந்தன. காமவேள் கோட்டத்தில் இரண்டு குளங்கள் இருந்தன. ஒன்று ஆண் குளிக்கும் குளம். மற்றொன்று பெண் குளிக்கும் குளம். இதில் குளித்தால் பிரிந்திருக்கும் கணவன் மனைவியாகிய இருவர் காமமும் இணையுமாம். இடைக் குறிப்பு - அமரர் தருக்கோட்டம் 1 கற்பகமரக் கோயில், வெள்யானைக் கோட்டம் 2 இந்திரன்-யானைக் கோயில், புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் 3 நாக-தெய்வங்கள் இருக்கும் கோயில், உச்சிக்கிழான் கோட்டம் 4 சூரியன் கோயில், ஊர்க்கோட்டம் 5 குலதெய்வக் கோயில், வேல் கோட்டம் 6 வேல் கோயில், வச்சிரக் கோட்டம் 7 இந்திரனின் வச்சிரப்படைப் கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம் 8 ஊரின் புறத்தே ஊரை அணைத்துக் காக்கும் எல்லைத்தெய்வக் கோயில், நிக்கந்தக் கோட்டம் 9 அய்யனார் கோயில் \ (கந்தன் = துணைவன் \ காதன்மை கந்தா – திருக்குறள்) (நிக்கந்தன் = பற்று அற்றவன்) அருகன் கோயில், புத்தன் கோயிலுமாம், நிலாக் கோட்டம் 10, ஆகிய கோயில்கள் புகார் நகரத்தில் இருந்தன. மற்றும், கடலொடு காவிரி தலையலைக்கும் முன்றில், மடலவிழ் நெய்தலங்கானல் தடம் உள, சோமகுண்டம் 1 நிலாக்குளம், சூரியகுண்டம் 2, துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார், கணவரோடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார், (சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதை).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - பத்துப்பாட்டு, கோட்டம், கோயில், பட்டினப்பாலை, காமவேள், இலக்கியங்கள், மகளிர், வானம்பாடி, பத்துப்பாட்டு, சூரியன், உண்ணும், நீர், சிறப்பு, இருந்தன, வயலில், புரவியின், குளம், கொண்டது, விலங்குபகை, வண்டியை, செல்வர், பஃறி, சோழநாடு, பிள்ளைகள், குளிக்கும், வேல், கோயில்கள், ஆகிய, புகார், இருக்கும், கழற்றி, வெண்மீன், கழனிகளில், பூக்கள், காவிரி, விளைச்சல், சங்க, காவிரியில், வைத்திருக்கும், சிறுதேர், ஓட்டுவர், உருட்டும், தடுக்கும், எறிந்து, அணிந்திருக்கும், கவர்ந்து, கோழிகளை, அந்தக்