நெடுநல்வாடை - பத்துப்பாட்டு

கட்டிலின்மேல் அமைந்த படுக்கை
மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப் |
125 |
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத் தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான் வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்த |
130 |
மெல்லிதின் விரிந்த சேக்க மேம்படத் |
சன்னலில் முத்துச் சரங்கள் தொங்கின. மெல்லிய நூல்களில் கோக்கப்பட்டவை அந்த முத்துச் சரங்கள். படுக்கைக் கட்டிலின் தகட்டுத் தளத்தில் புலி உருவப் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அது புதையும்படி பல்வகை மயிர்களைத் திணித்து உருவாக்கப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மெத்தையின் துணியில் வயமான் (சிங்கம்) வேட்டையாடுவது போலவும், முல்லைப்பூ பூத்திருப்பது போலவும் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. - இப்படிப்பட்ட மெத்தை மேல் அரசி இருந்தாள்.
படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி இணையணை மேம்படப் பாயணை யிட்டுக் காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை |
135 |
மெத்தையின் மேல் மற்றொரு மெத்தை. மேல்மெத்தையில் அன்னத்தின் தூவிகள் திணிக்கப்பட்டிருந்தன. ஆண் பெண் அன்னங்கள் உறவு கொண்டபோது உதிர்ந்த இறகுத் தூவிகள் அவை. அதன் மேல் துணி விரிப்பு. அது கஞ்சி போட்டுச் செய்த சலவை-மடிப்பு விரித்த துணி.
ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப் பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து நன்னுதல் உலறிய சின்மெல் லோதி நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண் வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் |
140 |
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச் செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப் பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல் |
145 |
அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு புனையா ஓவியங் கடுப்பப் புனைவில் |
அரசியின் முலைமேல் முத்தாரம். அதன் மேல் பின்புறத் தலைப்பின்னலை முன்புறமாக வளைத்துப் போட்டிருந்தாள். அவளது தலைவன் அப்போது அங்கு இல்லை. சில முடிகள் அவள் நெற்றியில் பறந்துகொண்டிருந்தன. குழைகளைக் கழற்றி வைத்துவிட்டதால் வெறுங்காது துளையுடன் காணப்பட்டது. பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது. முன்கையில் சங்கு-வளையலும், காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன. வாளைமீன் வாய் போல் பிளந்திருக்கும் மோதிரத்தை விரல்களில் அணிந்திருந்தாள். சிவப்பு நிறத்தில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இடையிலே உடுத்தியிருந்த அழகிய ஆடை அழுக்குப் பிடித்திருந்தது. மொத்தத்தில் அவள் புனையா ஒவியம் (sketch) போலக் காணப்பட்டாள்.
சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்
தளிரேர் மேனித் தாய சுணங்கின் அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் |
150 |
மெல்லியல் மகளிர் நல்லடி வருட நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல் செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன்துணை யோரென |
155 |
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து |
பணிப்பெண்கள் அவளது காலடிகளைத் தடவிக்கொடுத்தனர். அந்தப் பணிப்பெண்கள் தளிர் போன்ற மேனி, அதில் சுணங்கு-மடிப்பின் அழகு, மூங்கிலை வென்ற தோள், பருவத்தில் தோன்றும் முலையில் கச்சு என்னும் வம்பு முடிச்சுக் கட்டுத்துணி, மெல்லிய இடை ஆகியவற்றைக் கொண்டு கட்டழகுடன் காணப்பட்டனர். அவர்களுடன் ஆங்காங்கே நரைமுடி தோன்றும் கூந்தலை உடைய செவிலியர், செந்நெறி இது என முகத்தால் கூறும் செவிலியர் “உன் துணைவர் இப்பொழுதே வந்துவிடுவார்” என்று அவளுக்கு விருப்பமான சொற்களைப் பேசினர். இவற்றைக் கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கலங்கினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுநல்வாடை - பத்துப்பாட்டு, மேல், இலக்கியங்கள், செவிலியர், பத்துப்பாட்டு, மெத்தை, நெடுநல்வாடை, துணி, தூவிகள், புனையா, அவள், தோன்றும், பணிப்பெண்கள், காணப்பட்டது, விரித்த, அவளது, மெத்தையின், முத்துச், வயமான், கொண்ட, சங்க, சரங்கள், மெல்லிய, போலவும், செய்யப்பட்டிருந்தன, வேலைப்பாடுகள், அரசி