முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு

தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்
இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து, | 80 |
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு, நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும், மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும், ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து, பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, |
85 |
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து, முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் |
பாசறையில் இருக்கும் தலைவன் பிரிவால் தலைவிக்கு உறக்கம் வரவில்லை. கவலை மேலிடுகிறது. நெஞ்சை அவனிடம் செலுத்திப் புலம்பும் நீண்ட நினைவோடு தன்னைத் தானே தெற்றிக்கொள்கிறாள். கழன்றோடும் வளையல்களைத் திருத்திக்கொள்கிறாள். என்றாலும் ஆசை விடவில்லை. ‘ஒய்’ எனப் பெருமூச்சு விடுகிறாள். அம்பு பாய்ந்த மயில் போல நடுங்குகிறாள். அணிகலன்கள் கழன்று விழுகின்றன. அருகில் பாவை-விளக்கு ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. இவள் இருக்கும் எழுநிலை மாடத்தின் (ஏழடுக்கு மாளிகையின்) வளைந்த பகுதி ஒன்றில் அருவி கொட்டும் ஓசையைக் கேட்டு நினைவை மாற்ற முயன்றுகொண்டிருக்கிறாள்.
அஞ்செவி நிறைய ஆலின வென்று, பிறர் |
அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, | 90 |
விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு, வயிரும் வளையும் ஆர்ப்ப, அயிர |
அருவி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்த தலைவியின் காதுகள் நிறையும்படி அரசனின் வெற்றி முழக்க ஒலி கேட்கிறது. பகைவரின் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்களின் படையையும் தன் படையுடன் செர்த்துக்கொண்டு, வெற்றிக்கொடியை உயர்த்தியவண்ணம் மீள்வோர் சங்கும், கொம்பும் முழங்கும் ஒலி கேட்கிறது.
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்
செறி இலைக் காயா அஞ்சனம் மலர, முறி இணர்க் கொன்றை நன் பொன் கால, கோடல் குவி முகை அங்கை அவிழ, |
95 |
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப, கானம் நந்திய செந் நிலப் பெரு வழி, வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின், திரி மருப்பு இரலையொடு மட மான் உகள, எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில், |
100 |
காயா அஞ்ச நிறத்தில் (கருநீலம்) பூத்தது. கொன்றை பொன் நிறத்தில் பூத்தது. கோடல் பூ கைவிரல்கள் போல் விரிந்து பூத்தது. தோன்றிப் பூ குருதி நிறத்தில் சிவப்பாகப் பூத்தது. இப்படிப் பூத்திலுக்கும் முல்லை நிலத்தின் வரகுக் கொல்லையில் மான்கள் துள்ளி விளையாடின.
அரசனது தேரின் வருகை
முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய, துனை பரி துரக்கும் செலவினர் வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே. |
வள்ளிக் கிழங்கு முதிர்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனின் தேர்க்குதிரைகளை தேரோட்டி விரைவாகச் செலுத்துக்கொண்டிருந்தான்.
முல்லைப் பாட்டு முற்றிற்று
இந்நூலின் இறுதியில் இரண்டு தனிப்பாடல்கள் உள்ளன. அவை ‘பத்துப்பாட்டு’ என்னும் தலைப்பிட்டுப் பத்து நூல்களைத் தொகுத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டவை. இந்தப் பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. அவை இந்தப் பாட்டுக்கு அமைந்த ஒருவகை விளக்கம்போல் காணப்படுகின்றன.
தனிப் பாடல்கள்
வண்டு அடைந்த கண்ணி வளர் ஆய்ச்சி வால் நெடுங் கண் சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல் கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து, குன்று எடுத்து நின்ற நிலை? |
1 |
கன்றைக் குணிலாக்கிக்கொண்டு எறிந்து விளாங்கனியை உதிர்த்தும், குன்றைக் குடையாக்கிப் பிடித்தும் நின்ற மாயவனே! ஆய்ச்சி விரிச்சி கேட்டுக்கொண்டு நின்றாளே, அவள் கெட்ட விரிச்சிச்சொல் நிறைவேறப்போவது என்றோ? நீயே அறிவாய்.
புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர் துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள் அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம், கடல் முகந்து வந்தன்று, கார்! |
2 |
பகைவர் படையை வென்று அவர் படையையும் தன் படையுடன் சேர்த்துக்கொண்டு, தன் தேரில் பூட்டிய பொன்னணிக் குதிரையைத் தூண்டி ஓட்டிக்கொண்டு மீண்டு வருவதற்கு முன்பு கார்காலம் வந்துவிட்டது.
*-*-*-*-*
தேடல் தொடர்பான தகவல்கள்:
முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், பூத்தது, அருவி, நிறத்தில், முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு, காய், குருதி, தேர், மான், அடைந்த, நின்ற, அவர், எடுத்து, ஆய்ச்சி, பாடல்கள், கோடல், இந்தப், காயா, ஓசையைக், வென்று, இருக்கும், நிலை, சங்க, பாவை, மீண்டு, அரசனின், முல்லை, கொன்றை, படையுடன், படையையும், கேட்கிறது, பொன்