முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நூல்
நல்லோர் விரிச்சி கேட்டல்
நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல, பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு, கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி |
5 |
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை, |
முல்லைத்திணைக்கு உரிய முதற்பொருளாகிய கார்காலப் பெரும்பொழுதும், மாலைக்காலச் சிறுபொழுதும் முல்லைப்பாட்டின் தொடக்கமாக அமைந்துள்ளது. திருமால் அகன்ற உலகை வளைத்துக்கொண்டுள்ளான். சுழலும் திகிரிச் சக்கரத்தையும், சங்கையும் கைகளில் ஏந்திக்கொண்டுள்ளான். (வள்ளல் மாபலி) வார்த்த நீரை வாங்கிக்கொண்டு நிமிர்ந்தான் (விசுவரூபம்). அந்தத் தோற்றம் போல, கடல்நீரைப் பருகி எழுந்த மழைமேகம் பெருமழை பொழிந்தது (கார்காலம்). மழை பொழிந்த மாலை நேரம்.
அருங் கடி மூதூர் மருங்கில் போகி, யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு, நாழி கொண்ட, நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, |
10 |
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப |
கட்டுக்காவல் மிக்க பழமையான ஊர். அந்த ஊருக்கு வெளிப்புறம் பெருமுது பெண்டிர் (35 அகவை தாண்டிய மகளிர்) சென்றனர். நாழியில் கொண்டு சென்ற நெல்லையும், வண்டுகள் மொய்க்க மலரும் புத்தம்புது முல்லைப் பூவையும் தூவினர். விரிச்சிக்காகக் காத்திருந்தனர். (விரிச்சி என்பது பிறர் வாயிலிருந்து விரியும் பேச்சுக் குரல்)
தலைவியைத் தேற்றுதல்
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, |
15 |
இன்னே வருகுவர், தாயர் என்போள் நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால், |
ஆய்மகள் பச்சைக் கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றிலே தொடுத்து வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக்கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தை அந்த ஆய்மகள் தன் கக்கத்திலே அணைத்துக்கொண்டு அதனைத் தேற்றும் சொற்களைப் பேசினாள். “கையில் வளைகோல் வைத்திருக்கும் கோவலர் பின்னிருந்து ஓட்டிக்கொண்டு வர உன் தாயர் (தாய்ப்பசு) இன்னே (இப்பொழுதே) வந்துவிடுவர்” என்றாள். [இந்த நல்ல சொற்கள் விரிச்சி கேட்டுக்கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே அவர்கள் கேட்ட வரிச்சி]
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து வருதல், தலைவர், வாய்வது; நீ நின் |
20 |
பருவரல் எவ்வம் களை, மாயோய்! என, காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து, பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப |
“இது நல்லவர் வாயிலிருந்து வந்த ‘புள்’ சகுனம். பகைவரைப் போர்முனையில் வென்ற தலைவர் தாம் மேற்கொண்ட வினை முடிந்து அவ்வர்கள் தந்த திறையுடன் வருவது உறுதி. மாயோய்! (மாயோன் எனபதன் பெண்பாற் பெயர். முல்லைநிலப் பெயர். பசுமையான மாந்தளிரின் மாமை நிறம் கொண்டவள்) உன் கவலையைப் போக்கிக்கொள்” என்று விருச்சியைக் கேட்கும்படி பெண்கள் தலைவனைப் பிரிந்திருந்த மாயோளுக்குக் காட்டினர். அச் சொற்களைக் கேட்ட பின்னரும் மாயோளின் பூப்போன்ற கண்களிலிருந்து அவள் புலம்பும் முத்துக்ககள் உதிர்ர்ந்தன.
பாசறையின் இயல்பு
கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில், சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, |
25 |
வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட இடு முள் புரிசை ஏமுற வளைஇ, படு நீர்ப் புணரியின் பரந்த பாடி |
பகைப்புலம் சென்ற தலைவன் பாடிவீட்டில் இருந்தான். அது காட்டாறு பாயும் முல்லைநிலத்தில் இருந்தது. மணம் கமழும் பிடவம் பூச்செடிகள் அழிக்கப்பட்டு அந்தப் பாடிவீடு அமைக்கப்பட்டிருந்தது. வேட்டையாடும் விலங்குகள் அதில் நுழையாவண்ணம் முள்வேலிச் சுற்றுமதில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்தது. காட்டாறு கடல்போல் அகன்றதாய் அதனைச் சுற்றிலும் ஓடும்படிச் செய்யப்பட்டிருந்தது.
யானைப் பாகரது செயல்
உவலைக் கூரை ஒழுகிய தெருவில், கவலை முற்றம் காவல் நின்ற |
30 |
தேம் படு கவுள சிறு கண் யானை ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த, வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து, அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென, கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, |
35 |
கல்லா இளைஞர், கவளம் கைப்ப |
பாடிவீட்டுத் தெருக்களில் உவலைக்கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானைக்குக் கரும்பையும் கதிர்ரோடு கூடிய நெல்லந்தாளையும் தழைகளையும் உணவாகத் தந்தனர். அவற்றை அந்த யானை தன் கைகளால் வாங்கி உண்ணாமல் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டது. அதனை உண்ணும்படி, வடமொழிச் சொற்களைச் சொல்லி, கையில் கவைமுள் அங்குசம் வைத்திருந்த இளைஞர்கள் பயிற்றுவித்துக்கொண்டிருந்தனர்.
வீரர்கள் தங்கும் படைவீடுகள்
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றி கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை |
40 |
பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து, வாங்கு வில் அரணம் அரணம் ஆக, |
தலைவனுக்குப் பாதுகாப்பு அரணம் அமைக்கப்பட்டிருந்தது. கல்லில் துவைத்துக் கட்டும் ஆடையை நோன்பிருக்கும் பார்ப்பான் முக்கோல் நடுவில் வைத்திருப்பது போல வில்லும் அம்பறாத் தூணியும் வைக்கப்பட்டிருந்தன. வேல்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்திருந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு, அந்த, இலக்கியங்கள், விரிச்சி, அமைக்கப்பட்டிருந்தது, முல்லைப்பாட்டு, சிறு, பத்துப்பாட்டு, அரணம், யானை, ஆய்மகள், நல்ல, வினை, தலைவர், கேட்ட, காட்டாறு, வில், வாங்கு, பார்ப்பான், தாயர், காட்டவும், பெயர், மாயோய், வாயிலிருந்து, பருகி, கொண்டு, வளைஇ, நல்லோர், சங்க, முல்லைப், எழுந்த, பொழிந்த, கன்றின், கோவலர், சென்ற, பெண்டிர், மாலை, கொண்ட, இன்னே