மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ | 700 |
ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற் சுடர்பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்ன தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து |
705 |
மயிலோ ரன்ன சாயல் மாவின் தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து ஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற் றொண்குழை புணரிய வண்டாழ் காதிற் கடவுட் கயத்தமன்ற சுடரிதழ்த் தாமரைத் |
710 |
தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத் தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித் |
காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல்
திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்து |
நெடுஞ்செழியன் மகளிரைத் தழுவிக்கொண்டு அவர்களது கூந்தல் மெத்தையில் துயின்றான். அவனை எழுப்பினர். இனிமையாக எழுந்தான். புத்துணர்வு பெற்று எழுந்தான். (திருந்துயில் = புத்துணர்வு) வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கையில் செந்தீ போன்று அசோக மலர் மலரும் காட்டில் இளவெயில் பட்டு எழுவது போல் எழுந்தான். அவன் தழுவிய மகளிர் பொன்னை வளைத்து எந்தக் குறைபாடும் இல்லாமல் செய்யப்பட்ட அணிகலன்களோடு விளங்கினர். நிலத்துக்கே விளக்கு வைத்தாற்போல மேன்மையுடன் விளங்கினர். அவர்களின் தோற்றம் மயிலைப் போன்றது. மேனி மாந்தளிர் போன்றது. தளிரில் தெரியும் ஈர்க்கு நரம்புகள்போல் திதலை என்னும் வரிக்கோடுகள் மேனியை அழகுபடுத்தின. பற்கள் கூர்மையாகத் திகழ்ந்தன. ஒளிரும் குழைகளால் காதுகள் வளைந்து தாழ்ந்திருந்தன. அவர்கள் கோயில் குளத்தில் மலர்ந்துகொண்டிருக்கும் தாமரை போன்ற முகம் கொண்டவர்கள். தோளில் வளையல் அணிந்திருந்தனர்.
திண்கா ழார நீவிக் கதிர்விடு | 715 |
மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின் வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப எருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற் பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம் வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் |
720 |
சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம் உடையணி பொலியக் குறைவின்று கவைஇ வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகியன் றன்ன உருவினை யாகி |
திண்காழ் ஆரம் என்பது திண்மையான வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டை. ஒண்காழ் ஆரம் என்பது நீரில் ஒளி வயிரம் பாய்ந்த முத்து. செழியன் மார்பில் சந்தனம் பூசியிருந்தான். முத்துமாலை அணிந்திருந்தான். தேனுக்காக வண்டுகள் மொய்க்கும் பலவகைப் பூக்களாலான மாலை அணிந்திருந்தான். ‘வலிமிகு தடக்கை’ என்பது புயம். புயத்தில் தொடி அணிந்திருந்தான். அது பொன்னால் செய்யப்பட்டது. அந்தப் புய-வளையலுக்கு விளக்கின் உருவம் முகப்புத் தோற்றமாகச் செய்யப்பட்டிருந்தது. அந்த விளக்கு-முகத்தில் பதிக்கப்பட்ட கல் சுடரொளி வீசியது. ‘கலிங்கம்’ என்பது தைக்கப்பட்ட ஆடை. அவன் அணிந்திருந்த கலிங்கம் சோற்றுக் கஞ்சி போடப்பட்டு நீரைப்போல் அலையலையாக மடிப்பு செய்யப்பபட்டிருந்தது. இவற்றை அணிந்திருக்கும் அவன் முருகன்போல் காணப்பட்டான். வல்லவன் செய்த முருகன் சிலை ஒப்பனை செய்யப்பட்டது போல் காணப்பட்டான்.
வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து | 725 |
ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர் வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த |
மறவர் என்போர் படைவீரர். செழியனின் படைவீரர்களுக்குப் போர் என்றால் கொள்ளை ஆசை. பகைவர் தாக்கும்போது அவர்கள் ஆற்றில் வரும் வெள்ளத்தைக் கல்லடுக்கிக் கட்டப்பட்ட கலிங்கு அணை தடுத்து நிறுத்துவது போலத் தடுத்துத் திரும்பி ஓடும்படி செய்தவர்கள். ‘வாள்வலம்’ என்பது வாளால் போர்புரியும் திறமை. ‘தாள்வலம்’ என்பது ஊக்கத்துடன் செயலாற்றும் திறமை. இரண்டும் கொண்ட இத்தகைய மறவர் செழியனின் வாள்வலத்தையும் தாள்வலத்தையும் வாழ்த்தினர்.
சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின் மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின் கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் |
730 |
நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின் கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் ஓவில கறங்க எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண் பெருநல் யானை போர்க்களத் தொழிய |
735 |
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக் காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப் பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து |
740 |
வானத் தன்ன வளநகர் பொற்ப நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின் உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் |
745 |
பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும் யாவரும் வருக ஏனோருந் தம்மென |
அம்பு ஏந்திய மார்பினர்- கோட்டை வெற்றியில் புண் பட்ட செல்வர் தன் யானை வீழ்ந்த பின்னரும் தாக்கி வென்ற குரிசிலர் பேருதவி புரிந்த ஊக்கத்தார் யானை கவர்ந்துவந்த பெருஞ்செய் ஆடவர் மற்றும் பிறர் ஆகியோருக்கெல்லாம் அவைக்கு வந்ததும் முதல் பணியாக விருது வழங்கிச் சிறப்பு செய்தான். யாவரும் வருக. அழைக்கப்படாத ஏனோரும் வருக. யான் அழைக்காவிட்டாலும் தாமே வருக. – என்று வரவேற்றுச் சிறப்புச் செய்தான். மறவர்- பகைவரின் வில்லைக் கவர்ந்து, அவர்கள் முன்பு எய்த அம்புகளை மார்பிலே தாங்கி ‘மா’ என்னும் வெற்றித் திருமகளைத் தோளிலே சுமந்துகொண்டிருப்பவர்கள். எயில் உழந்த செல்வர் ‘இட்டுவாய்’ என்பது கிட்டம் ஆகும்படி சுட்ட செங்கல். அகழியானது, மேட்டு நிலத்தில் கல்லை உடைத்தும், பள்ள நிலங்களில் கிட்டமாக்கிய செங்கலை இட்டும் அமைக்கப் பட்டிருந்தது. அகழியை அடுத்து மதில். அகழியைத் தாண்டி மதிலில் ஏறும்போது துன்புற்ற வீரர் செல்வர். போர்முரசு - ‘கொல் ஏறு’ என்றது சிங்கத்தை. சிங்கத்தின் தோலை உரித்துச் சீவிப் பதப்படுத்தாமல் அப்படியே போர்த்திச் செய்யப்பட்டது. விழுமிய வீழ்ந்த குரிசிலர் - போர்முரசு முழங்கும்போது, பகைவரின் படைக்கு நடுவில் சென்று போரிடுகையில் தான் ஏறிவந்த யானை போரில் சாய்ந்தபோதும் அஞ்சாமல் போராடி விழுமிய வெற்றியைத் தேடித் தந்த அரச பரம்பரையைச் சேர்ந்த குரிசிலர். பொலம்பூந் தும்பை - பிறரது நாட்டை வெல்லச் செல்வோர் தும்பைப் பூ மாலையைத் தலையில் சூடிக்கொண்டு செல்வர். வெற்றிக்குப் பின் அரசன் அவர்களுக்குப் பொன்னால் செய்த தும்பைப்பூவை அணிவிப்பான். முறை கருதுபு சூட்டி - பொற்பூ அணிவிக்கும்போது விருது பெறுவோர் யார் என்று பார்க்காமல் போர்ச்சாதனையைத் தரவரிசை செய்து விருது வழங்குவான். உயர்ந்த உதவி ஊக்கலர் - இந்த உயர்ந்த பணியைச் செய்க என்று பிறருக்கு ஊக்கம் தந்துகொண்டு இருக்காமல், தாமே அதனை உதவியாகக் கருதிச் செய்து முடிப்பவர். நிறம் சிதை கவயம் - (ய=ச போலி) கவசத்தைத் துளைத்து நெஞ்சைச் சிதைத்த காயம். கணையலை - அலைபோல் வந்துகொண்டே இருக்கும் அம்பு அலை. காழ்மண்டு எஃகம் - ஆணி போடப்பட்ட கேடயம். பிரிபிணை அரிந்த நிறம் - பிரிந்து பிணைந்திருக்கும் எலும்புகள் அரிந்து காயம் பட்ட மார்பு. வளநகர் - வானம்போல் பரந்துகிடக்கும் அரண்மனை. இதனைப் பொலியச் செய்தவர் மார்பில் போர்த்தழும்பு பட்ட மறவர். ஊன்சாய் மார்பு - மார்புக் கூடு வலிமை மிக்க குறடு போல் கோக்கப்பட்டது. இதில் காயம் பட்டு ஊன்தசை தொங்கும் மார்பு. பெருஞ்செய் ஆடவர் - செய் என்றால் வயல். பெருஞ்செய் என்றால் போர்க்களம். போர்க்களத்து ஆடவர் படைவீரர்கள். இவர்கள் ஓங்கி உயர்ந்த யானைக் கணத்தைப் போர்க்களத்திலிருந்து கவர்ந்து வந்தவர்கள். சந்தனம் பூசிய மார்பில் பூமாலை அணிந்தவர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, என்பது, தம்மின், மறவர், உயர்ந்த, யானை, இலக்கியங்கள், செல்வர், வருக, பத்துப்பாட்டு, காயம், மார்பு, மதுரைக்காஞ்சி, அணிந்திருந்தான், செய்யப்பட்டது, விழுமிய, வீழ்ந்த, ஆடவர், குரிசிலர், பட்ட, மார்பில், விருது, பெருஞ்செய், என்றால், அவன், போல், எழுந்தான், மார்பின், பட்டு, அம்பு, வண்டுகள், புத்துணர்வு, யாவரும், யானைக், மன்னன், உதவி, செந்தீ, நிறம், பொலிந்த, பகைவரின், கவர்ந்து, போர்முரசு, தாமே, செய்தான், மகளிர், ஊன்சாய், ரன்ன, செய்து, பிரிபிணை, பொன்னால், விரவுப்பூந், காணப்பட்டான், செய்த, தெரியற், சந்தனம், சங்க, வயிரம், பாய்ந்த, கலிங்கம், செழியனின், என்னும், விளக்கு, விளங்கினர், தும்பை, ஆரம், தன்ன, போன்றது, திறமை, வீரர், வில்லைக், வளநகர்