குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நூல்
தோழி அறத்தொடு நிற்றல்
அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுத லொலிமென் கூந்தலென் றோழி மேனி விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ யகலு ளாங்க ணறியுநர் வினாயும் பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும் |
5 |
வேறுபல் லுருவிற் கடவுட் பேணி நறையும் விரயு மோச்சியு மலவுற் றெய்யா மையலை நீயும் வருந்துதி |
என் தோழியாகிய தலைவி ஒளிதிகழ் முகம் கொண்டவள். தழைத்த கூந்தலை உடையவள். அவளது மேனியில் இருந்ததால் பெருமை பெற்றிருந்த அணிகலன்கள் இப்போது அவளை நெகிழச் செய்து கொண்டிருக்கின்றன. இது சாகடிக்காமல் சாகடித்துக் கொண்டிருக்கும் கொடிய நோய். இதற்கு என்ன காரணம் என்று தெருவில் உள்ளவர்களை யெல்லாம் கேட்கிறாய். அவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? பல்வேறு உருவங்களில் காட்சி தரும் முருகக் கடவுள்தான் காரணம் என்று தெருவில் உள்ளவர்கள் சொல்லக் கேட்டு முருகனைத் தணிவிக்க அவனுக்கு விழா எடுக்கின்றாய். இனிக்கும் பொருள்களும், மணக்கும் பொருள்களும் படைக்கின்றாய் வேலனைக் கொண்டு இவளை ஓச்சுக்கின்றாய். அதனால் இவள் துன்புறுகிறாள். நீயும் துன்புறுகிறாய். இவளது துன்பத்தைத் தாங்க முடியாமல் நீ பித்தேறி மயங்குகிறாய்.
நற்கவின் தொலையவு நறுந்தோ ணெகிழவும் புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு |
10 |
முட்கரந் துறையு முய்யா வரும்படர் செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் |
இவளது நல்லழகு தொலைந்துபோய் விட்டது. இனிக்கும் தோள்கள் இளைத்து விட்டன. ‘புள்’ என்பது பிறர் அறிந்து கொள்ளக்கூடிய குறிப்புகள். இவளது நிலையைப் பிறர் உணர்ந்து கொண்டனர். அன்றியும் தனிமையே இவளை வருத்துகிறது. அதனால் இவளுக்கு உட்சுரம். இந்த உட்காய்ச்சலோடு இவள் உயிர் வாழ்கிறாள். இவளுக்கு உய்தி தராத பெருந்துன்பம் இது. இவளால் அதனை வெளிப்படுத்த முடியவில்லை. நான் அவளை வற்புறுத்திக் கேட்டேன். அவள் என்னிடம் சொன்னாள் தலைவி தோழியிடம் சொன்னாள்.
தலைவியின் அன்பு மிகுதி
முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ் சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் |
15 |
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர் |
முத்து, மணி, பொன் போன்றவற்றாலான அணிகலன்களை இழக்கலாம். தேடி ஈட்டினால் அவை மீண்டும் வந்து சேர்ந்துவிடும். சான்றாண்மை ஒழுக்கம், பிறர் வியக்கத்தக்க பெருமை, நல்லியல்பு ஆகியவை, குன்றிப்போனால் அவற்றை மீண்டும் தூக்கிப் புகழ்நிலையில் நிறுத்துதல் யாராலும் முடியாத பண்புகள். குற்றமற்ற மெய்யறிவுடைய ஐயர்க்கும் அது எளிதன்று என்று தொன்னெறி உணர்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால் …
மாதரு மடனு மோராங்குத் தணப்ப நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி |
20 |
யிருவே மாய்ந்த மன்ற லிதுவென நாமறி வுறாலிற் பழியு முண்டோ |
தலைவி சொல்கிறாள்- ஆசையும், அறியாமையும் என்னிடம் ஓராங்கு காட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றன. என் தந்தை தேர்ப்படைத் தலைவன். அவனது கட்டுக் காவலை மீறி என்னவனும், நானுமாக மயங்கிய நிலையில் எங்களுக்குள் நிகழ்ந்த உடல் சார்ந்த உறவு இதுதான். இதைத் தாய்மாரிடம் சொல்லிவிட்டால் பழியும் உண்டோ – என்று தலைவி தன் தோழியிடம் சொன்னாள். அவள் சொன்னாள் என்று இப்போது தோழி தாயரிடம் கூறுகிறாள்.
பாடலில் வரும் ‘ஓராங்கு தணப்ப’ என்பதன் விளக்கக் கண்ணோட்டம். ‘ஓராங்கு’ என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. தரையில் கட்டம் போடுவர். ஐந்து பேர் விளையாடும் ஆட்டம் இந்த ஓராங்கு. நான்கு மூலைகளிலும் நான்கு பேர். ஏதோ ஒரு உத்தியைக் கையாண்டு பட்டவர் ஒருவரைக் கண்டறிவர். பட்டவர் கட்டத்திற்கு நடுவில் வந்துவிடுவார். காலியாக உள்ள மூலைக்குப் பிறர் ஓடுவர். இரண்டு பேர் ஒரே மூலையில் நிற்கக்கூடாது. அடுத்த மூலையை அடைவதற்கு முன் பட்டவர் ஓடுபவரைத் தொடவேண்டும். தொடப்பட்டவர் பட்டவர் ஆகி ஆட்டம் தொடரும். காலியாக உள்ள இடத்தை நிரப்புவதே ஓராங்கு ஆட்டம். பெண்மைத்தன்மையும் அறியாமையும் ஓருமுகமாக நின்று எங்களிடமிருந்து விலகிவிட்டன. அதனால் வெளியிடத்துக்கு நாங்கள் சென்றோம். மன்றலாகிய உடல் சார்ந்த உறவு நிகழ்ந்துவிட்டது.
வாற்றின் வாரா ராயினு மாற்ற வேனையுல கத்து மியைவதா னமக்கென மானமர் நோக்கங் கலக்கிக் கையற் |
25 |
றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு |
ஊர் அறிய நடக்கும் திருமணம் அறமணம். இங்கு நடந்தது மறைமணம். இந்தப் புறவுலகத்துக்கு இது பொருந்தாவிட்டாலும் அந்த அகவுலகத்துக்கு பொருந்தும். வானோர் வாழ்த்துவர். தோழி தொடர்கிறாள். இப்படி அவள் (தலைவி) சொல்லும்போது மான் விரும்பும் அவளது மயக்கப் பார்வை கலங்கி விட்டது. வேறு வழி தெரியாமல் கையைப் பிணைந்துகொண்டாள். தாங்க முடியாத துன்பத்தோடு தேம்பித் தேம்பிச் சொன்னாள்.
மணம் நிகழ்ந்தமையைத் தோழி அறிவித்தல
மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல விருபே ரச்சமோ டியானு மாற்றலேன் |
இரு பெரு வேந்தர்கள் தங்களுக்குள் இருந்த கருத்து மாறுபாட்டினால் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க நினைத்த சான்றோர் போர்க்களத்துக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறும்போது எத்தகைய அச்சத்துடன் இருப்பாரோ அத்தகைய அச்சத்துடன் இருந்துகொண்டு என் உள்ளம் தாங்கிக்கொள்ள முடியாத உண்மையை உங்களிடம் (தாயரிடம்) சொல்கிறேன். – என்கிறாள் தோழி.
கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும | 30 |
வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா தெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினை நிகழ்ந்த வண்ண நீநனி யுணரச் செப்ப லான்றிசிற் சினவா தீமோ |
உயர்ந்த பண்பு, ஒத்த குடிப்பிறப்பு, ஒத்த செல்வவளம், ஒத்த குலப்பிறப்பு, உதவும் துணைப்பாங்கு முதலானவற்றை யெல்லாம் பொருத்திப் பார்த்து மணமக்களைக் கூட்டுவிப்பது அக்கால வழக்கம். இவற்றில் எதையும் எண்ணிப் பார்க்காமல் நாங்களாகவே துணிந்து எங்களுடைய பாதுகாப்புக்காக மறைவில் மணம் செய்து கொண்டோம். அந்த மணம் எப்படி நிகழ்ந்தது என்பதை நீ நன்றாக உணருமாறு சொல்கிறேன். தாயே! பொறுத்தருள்க. எங்கள் மேல் சினம் கொள்ளாமல் கேட்டருள்க.
தினைப்புனம் காத்த வகை
நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை | 35 |
முத்தார் மருப்பி னிறங்குகை கடுப்பத் துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குர னற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பி யெற்பட வருதிய ரென நீ விடுத்தலிற் |
யானை விளைந்த மூங்கில் நெல்லைக் கசக்கித் தின்னும். அதன் முத்துப் போன்ற கொம்புகளுக்குக் கீழே அதன் கை தொங்கும். அந்தக் கையைப் போல தினை விளைந்திருந்தது. உவமை நலம்- விளைந்திருக்கும் தினைக்கதிர் யானையின் கைபோல் வளைந்திருக்கும். விளைந்த கதிருக்கு மேல் இரண்டு தினையிலைத் தோகைகள் நிமிர்ந்திருப்பது யானையின் தந்தங்கள் போல் இருக்கும். துதிக்கையிலுள்ள மடிப்புவளைவுகள் போல தினைக்கதிர் திட்டுத் திட்டாகக் காணப்படும். தினைக்கதிர்களை உண்ண வரும் பறவைகளை ஓட்டிக் கொண்டிருந்துவிட்டுப் பகல்பொழுது கழிந்த பின் வீடு திரும்புக – என்று சொல்லி எங்களை நீ அனுப்பி வைத்தாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு, சொன்னாள், தோழி, தலைவி, இலக்கியங்கள், குறிஞ்சிப்பாட்டு, அதனால், பிறர், பட்டவர், இவளது, ஒத்த, பேர், மணம், ஆட்டம், ஓராங்கு, முடியாத, அவள், பத்துப்பாட்டு, நான்கு, தமிழ், காலியாக, உள்ள, நீயும், தாயரிடம், வரும், ஒன்று, அவளது, இரண்டு, கையைப், யானை, விளைந்த, தினைக்கதிர், யானையின், மேல், சொல்கிறேன், உடல் சார்ந்த உறவு, சங்க, அச்சத்துடன், அந்த, நிகழ்ந்த, இவள், என்ன, தாங்க, விட்டது, காரணம், இவளை, யெல்லாம், காட்சி, இனிக்கும், பொருள்களும், என்பது, கொண்டிருக்கின்றன, மீண்டும், இப்போது, அறியாமையும், பெருமை, தோழியிடம், அவளை, இவளுக்கு, செய்து, என்னிடம், தெருவில்