திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

வல்வருங் காணாய் வயங்கி முருக்கெல்லாம் செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல பவளக் கொழுந்தின்மேல் பொற்றாலி பாஅய்த் திகழக்கான் றிட்டன தேர்ந்து! |
66 |
நங் காதலர் விரைந்து வருவர்: விளங்கி முருக்குக்களெல்லாம், செல்வமுடையார் புதல்வர்க்குப் பொற்கொல்லர் ஐம்படைத்தாலி செய்தாற்போல, மிக்க பவளக் கொழுந்தின் அடியிலே பொற்றாலியைப் பதித்து வைத்தாற்போல் விளங்கக் கான்றன; ஆதலாற் றேர்ந்து பாராய்.
வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய்! தோன்றார் பொறுக்கஎன் றால்பொறுக்க லாமோ? - ஒறுப்பபோல் பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம் என்னுள் உறுநோய் பெரிது! |
67 |
மிக்க பொருட் பொருட்டுச் சென்றார், விளங்கிழையாய்! வந்து தோன்றுகின்றிலர்; இப் பருவத்தின் கண் நீ என்னை ஆற்று என்றால் எனக்கு ஆற்றலாமோ? என்னை ஒறுப்பனபோலப் பொன்னின் உள்ளுற வைத்த பவளம் போன்ற, பொருத்திய முருக்கம் பூக்கள்; ஆதலால் என்னுள்ளத்துற்ற நோய்பெரிது.
சென்றக்கால் செல்லும்வாய் என்னோ? இருஞ்சுரத்து நின்றக்கால் நீடி ஒளிவிடா - நின்ற இழைக்கமர்ந்த ஏஏர் இளமுலையாள் ஈடில் குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு! |
68 |
பொருளின் பொருட்டு நாமிவளை நீங்கிப் போயக்காற் போம்வகை யெங்ஙனேயோ? நெஞ்சே! மன்னிய அணிகட்குத் தக்க அழகையுடைய இளமுலையாளுடைய ஒப்பில்லாத குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்புக்கள் நம் முன்னே வந்து நீடி யொளிவிட்டு இருஞ்சுரத்திடையே தோன்றிநின்றக்கால்.
அத்தம் நெடிய அழற்கதிரோன் செம்பாகம் அத்தமறைந் தான்இவ் அணியிழையோடு - ஒத்த தகையினால் எம்சீறூர்த் தங்கினிராய் நாளை வகையினிராய்ச் சேறல் வனப்பு. |
69 |
வழிகளும் நெடிய; அத்த மலையின் கண்ணே அழற் கதிரோனுஞ் செம்பாகம் மறைந்தான்; இவ்வணியிழையோடு நீரும் எம்மோ டொத்த தகையினால் எஞ்சீறூரிலே இன்று தங்கினீராய் நாளைஎங்களினீங்கிப் போதலழகு.
நின்நோக்கம் கொண்டமான் தண்குரவ நீழல்காண் பொன்நோக்கம் கொண்டபூங் கோங்கம்காண் - பொன் நோக்கம் கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்! வண்டல் அயர்மணல்மேல் வந்து! |
70 |
நின்னுடைய நோக்கின் றன்மையைக் கொண்ட மான்களைப் பாராய்; குளிர்ந்த குரவ நீழலைப் பாராய்; பொன்னினது காட்சியைக் கொண்ட பூங்கோங்குகளைப் பாராய்; பொன்னினது காட்சியைக் கொண்ட சுணங் கணிந்த மென்முலையையுடைய கொம்பன்னாய்! மணன்மேல் வந்து விளையாட்டை விரும்பாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, பாராய், கொண்ட, இலக்கியங்கள், வந்து, பதினெண், நூற்றைம்பது, நோக்கின், கீழ்க்கணக்கு, திணைமாலை, செம்பாகம், தகையினால், கொம்பன்னாய், காட்சியைக், பொன்னினது, நெடிய, நீடி, மிக்க, பவளக், சென்றார், என்னை, சங்க, குழைக்கமர்ந்த