திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
அறிகுஅரிது யார்க்கும் அரவ நீர்ச் சேர்ப்ப! நெறிதிரிவார் இன்மையால் இல்லை - முறிதிரிந்த கண்டலந்தண் டில்லை கலந்து கழிசூழ்ந்த மிண்டலந்தண் தாழை இணைந்து. |
61 |
யார்க்கும் அறிதலரிது; ஓசையையுடைய நீர்ச் சேர்ப்பனே! எங்குந் திரிவா ரில்லாமல் வழியில்லை; தளிர் சுருண்டிருந்த கண்டலும், அழகிய தண் டில்லைகளும். தம்முண் மிடைந்து கழியைச் சூழ்ந்த மிண்டன் மரங்களும்,தாழைகளும் இடைப்பட்டு.
வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில் நல்லார் விழவகத்தும் நாம்காணேம் - நல்லாய்! உவர்கத்து ஒரோஉதவிச் சேர்ப்பன்ஒப் பாரைச் சுவர்கத்து உளராயின் சூழ். |
62 |
வில்லுழவர் காரணமாகத் தொடங்கிய விழவகத்தும், நல்லாராகிய வனிதையர் காரணமாகத் தொடங்கிய விழவகத்தும் எல்லா மாந்தருந் திரள் வராதலால், நாங்கள் அங்குக் கண்டறியேம்; எமக்கு ஓரு தவி பண்டொருநாட் செய்த சேர்ப்பனோ டொப்பாரை: மற்றவனே இவட்குத் தக்கான்; அவனைப் போலும் ஆடவர் சுவர்க்கத் துளராயின்ஆராய்வாய்.
3. பாலை
நிலம் : குறிஞ்சியும் முல்லையும் திரிந்த மணல்வெளி.
ஒழுக்கம் : பிரிதலும் பிரிதல் நிமத்தமும்.
எரிநிற நீள்பிண்டி இணரினம் எல்லாம் வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள் பொன்னணிந்த கோங்கம் புணர் முலையாய்! பூந்தொடித்தோள் என்னணிந்த ஈடில் பசப்பு? |
63 |
எரிநிறத்தையுடையன அசோக்கின் பூங்கொத்தினமெல்லாம்; வரிநிறத்தையுடைய வண்டுகள் இளியென்னும் பண்ணைப்பாட விரும்பப்படுகின்ற நீண்ட மிக்க பொன் போன்ற மலர்களை யணிந்தன, கோங்கமெல்லாம்; ஆதலாற் பொருந்திய முலையினை யுடையாய்! நின்னுடைய பூந்தொடித் தோள்கள் யாதின் பொருட்டு அணிந்தன தமக்குத் தகுதியில்லாத பசப்பினை?
பேணாய் இதன்திறத்து என்றாலும் பேணாதே நாணாய நல்வளையாய் நாணிண்மை - காணாய் எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்கு ஈடில் பொரிசிதறி விட்டன்ன புன்கு. |
64 |
'நீ உறுகின்ற துன்பத்தைப் பாதுகாவாய்,' என்று யான் சொன்னாலும் பாதுகாவாதே நாணத்தகும் ஆற்றாமை செய்த நல்வளையாய்! நீயும் முன்பு நாணின்மை செய்தா யென்பதனை இனி யறிந்து கொள்ளாய்; எரியைச் சிதறிவிட்டாற் போலவிருந்த. ஈர்முருக்குக்கள்;கனமில்லாத பொரி சிதறிவிட்டாற் போலப் பூத்தன, புன்குகள்; ஆதலான் அவர் சொல்லிய பருவம் இதுகாண்.
தான்தாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப ஈன்றாய்நீ பாவை இருங் குரவே! - ஈன்றாள் மொழிகாட்டாய் ஆயினும் முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் ஈதென்று வந்து. |
65 |
கோங்கந்தான் தாயாகத் தாழ்ந்து முலை கொடுத்து வளர்ப்ப நீ பாவையினை யீன்ற இத்துணையே யாதலான், இருங்குரவே! யானீன்றாள் நினக்குச் சொல்லிய சொல்லை யெனக்குச் சொல்லா யாயினும் முள்ளெயிற்றாள் போயின வழியையாயினும் சொல்லிக்காட்டாய் வந்து இதுஎன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், விழவகத்தும், திணைமாலை, கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, பதினெண், சிதறிவிட்டாற், நல்வளையாய், விட்டன்ன, முள்ளெயிற்றாள், வந்து, ஈடில், சொல்லிய, காரணமாகத், யார்க்கும், சங்க, நீர்ச், தொடங்கிய, செய்த, கோங்கம்