பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;- வாய்ப்பத் தான் வாடியக் கண்ணும், பெருங் குதிரை, யாப்புள், வேறு ஆகிவிடும். |
376 |
சிறந்த குதிரை பொருந்தத் தான் வாடிய காலத்தும் போருக்குரியவற்றை வைத்துக் கட்டவே வேறு குதிரை போன்று ஆண்மை கொண்டு நிற்கும். (அது போல) வறியோரை அழைத்துக் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லை யாயினும் தம்மையடைந்து ஒரு பொருளை வேண்டினார்க்கு ஒரு பொருளைக் கொடுத்து அச் செயலில் அடிப்பட்டு வந்தவர்களே பிறருடையதுன்பத்தை நீக்க வல்லார்.
கருத்து: வறுமை யுற்றவிடத்தும்ஈகையின் நீங்காதே.
அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தாரை, கொண்டார், படுத்து, 'ஏழையாம்!' என்று போகினும் போக!- அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்!-யாவர்க்கேயானும் கொடுத்து, ஏழை ஆயினார் இல். |
377 |
நெருங்கி வளர்ந்திருக்கின்ற இருள் போன்ற ஐந்து பகுதியாகிய கூந்தலையுடையாய் தம்மை யடைந்து ஒரு பொருளை வேண்டினவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்தவர்களை இரவலர் தாழ்வுபடுத்தி ஏழை யென்று சொல்லப் போகினும் போக எத்தகுதியை உடையவரே யாயினும் பிறர்க்குக் கொடுத்து வறுமையுற்றார் ஒருவருமிலர்.
கருத்து:ஏழைகளுக்குக் கொடுப்பதனால் பொருள்குறைந்து வறுமையுடையராதல் இல்லை.
'இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்' என்று எண்ணி, கரப்பவர் கண்டறியார்கொல்லோ?-பரப்பில் துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!- இறைத்தோறும் ஊறும் கிணறு. |
378 |
கடலிடத்தில் துறையின்கண் தோணிகள் நின்று அசைந்துகொண்டிருக்கும்அசைகின்ற நீரையுடைய கடல் நாடனே! தன்னை யடைந்து ஒரு பொருளை வேண்டுவார்க்கு கொடுப்பதால் தமது செல்வம் குறையும் என்று நினைத்து இல்லையென்று சொல்லித் தமது பொருளை மறைப்பவர்கள் இறைக்குந்தோறும் நீர் ஊறுங்கிணற்றை பார்த்தறியாராயினார் போலும்.
கருத்து: கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளரும்.
'இரவலர் தம் வரிசை' என்பார், மடவார் கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர் சீர வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;- நீர் வரையவாம் நீர் மலர். |
379 |
இரப்போர் நிலைக்குத் தக்க அளவினதாகக் கொடுப்பதே கொடை என்று சொல்லுகின்றவர்கள் மூடர்களே யாவார்கள் நீர்ப்பூ நீரின் அளவினதாயிருக்கும் கையிலுள்ளதை மறையாதவர்களாகிக் கைவண்மையையுடைய அரசர்கள் செய்யும் கொடைச் செயலும் மற்றும் சிறந்த எல்லாச் சிறப்புக்களும் தம் சீரினளவினதாயிருக்கும் ஆதலான்.
கருத்து: கொடுப்போன் தன்னிலை நோக்கி ஈக என்றது இது.
தொடுத்த பெரும் புலவன், சொற் குறை தீர, 'அடுத்தர' என்றாற்கு, 'வாழியரோ!' என்றான்; தொடுத்து, 'இன்னர்' என்னலோ வேண்டா;-கொடுப்பவர் தாம் அறிவார், தம் சீர் அளவு. |
380 |
செல்கெழுகுட்டுவனுடைய புகழைச் செய்யுளாகப் பாடிய பெரிய புலவனாகிய கௌதமன் துறக்கத்தை யானும் என் சுற்றமும் அடையுமாறு செய்வாயாக என்று சொல்ல அங்ஙனம் சொல்லிய அப் புலவற்கு அவர் சொல்லியகுறை தீரும் பொருட்டு வேள்வி செய்து துறக்கத்தின்கண் நீடு வாழ்வாயாக வென்று கூறினான்.(ஆகையால்) ஒரு பொருளை வேண்டுவார் முறையாக இத் தன்மையை உடையார் என்று புகழ்ந்து கூறுதல் வேண்டாவாம் கொடுக்கின்றவர்கள் தம் நிலையின் அளவையறிந்துசெய்வார்கள்.
கருத்து: கொடையாளிகள் தொடுத்துக் கூறுதலை எதிர் நோக்காது தம் நிலைமைக்கேற்பக் கொடுப்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, பொருளை, கருத்து, இலக்கியங்கள், பழமொழி, கொடுத்து, ஒன்று, குதிரை, பதினெண், நானூறு, கீழ்க்கணக்கு, நீர், நின்று, அடுத்து, போகினும், இரவலர், யடைந்து, தமது, இல்லை, தான், சங்க, வேறு, சிறந்த, யாயினும், பொருளைக்