நற்றிணை - 366. பாலை
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள் மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி |
5 |
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் |
10 |
வட புல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி, இவ் உலகத்தானே! |
நெஞ்சமே! பாம்பு படமெடுத் தெழுந்தாற் போன்ற பலவாகக் கலந்த எண்மணிக் கோவையாகிய மேகலையணிந்த, நடத்தலால் ஒதுங்குதல் அமைந்த நுண்ணிய துகிலினுள்ளால் வந்து தோன்றி விளங்குகின்ற திருந்திய இழையணிந்த அல்குலையும்; பெரிய தோளையுமுடைய இளமடந்தையின்; நீலமணி போன்ற கூந்தலை மாசுநீங்கத் தூய்மை செய்து விளக்கி; குளிர் காற்றால் மலருகின்ற முல்லையின் குறுகிய காம்பையுடைய மலர்களை இளைய பெண் வண்டுடனே ஆண் வண்டுஞ் சூழுமாறு முடித்திருக்கின்ற; மிகப் பலவாகிய மெல்லிய அக் கூந்தலைணையிலே கிடந்து துயிலுவதனை யொழியவிட்டு; கரும்பின் வேல் போல்கின்ற வெளியமுகை பிரியும்படி தீண்டி; அறிவுமிக்க தூக்கணங் குருவி தான் முயன்று செய்த கூட்டினை மூங்கில் தன் அடித்தண்டும் அசையுமாறு மோதுகின்ற; வடதிசைக்குரிய வாடைக்காற்று வீசுங்கூதிர்ப் பருவத்திலே பிரிபவர்; இவ்வுலகத்திலே அறியாமை மிக்குடையராவார்,
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 366. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, தீண்டி, முயன்று, வேல், வந்து, எட்டுத்தொகை, சங்க, கரும்பின்