நற்றிணை - 169. முல்லை

'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! வருவம்' என்னும் பருவரல் தீர, படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
5 |
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் வன் கை இடையன் எல்லிப் பரீஇ, வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை மறுகுடன் கமழும் மாலை, சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. |
10 |
நெஞ்சமே! வினைவயிற் பிரிந்து செல்லும்பொழுது என்று வருவீர்கொலாமென வருந்தி வினவிய தலைவியை நெருங்கி 'நல்ல நுதலையுடையாய்! யாம் சென்று கருதியதை முடித்தனமாயின் அன்றே வருகின்றோம்.' என்று கூறியவுடன் உண்டாகிய அவளுடைய துன்பமெல்லாந் தீரும்படி இன்று நாம் வருகின்ற வருகையை; பரல்மிக்க பாலை நிலத்தின்கண் வளர்ந்தோங்கிய சிச்சிலிப் பறவைபோன்ற தலையையுடைய கள்ளியின் மேலே படர்ந்த தழைந்த முல்லையின் நறுமலரை; ஆடுகின்ற தலையையுடைய யாட்டின் தொகுதியை மேய்க்கச் செலுத்துகின்ற வலிய கையையுடைய இடையன்; இரவிலே கொய்து வெளிய பனங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த அசைகின்ற நறிய மாலையின் நறுமணம் தெருவில் ஒருங்கு கமழாநிற்கும்; இன்று மாலையம் பொழுதிலே சிறிய குடிகளையுடைய பாக்கத்தின்கண் உள்ள எமது பெரிய மாளிகையிடத்து; நெடிய சுவரின்கணிருக்கின்ற பல்லி அறிகுறியாக அடித்துத் தெரிவிக்குங் கொல்லோ?
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 169. முல்லை, முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, இன்று, தலையையுடைய, இடையன், பல்லி, சங்க, எட்டுத்தொகை