நற்றிணை - 148. பாலை

வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும், 'நீ அவண் வருதல் ஆற்றாய்' எனத் தாம் தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே, நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை, செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, |
5 |
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது, கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து, செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் |
10 |
அருஞ் சுரம் இறப்ப என்ப; வருந்தேன்- தோழி!- வாய்க்க, அவர் செலவே! |
தோழீ ! நின்னுடைய நிறத்தின் மென்மையைப் பார்த்தும் மெல்லிய இனிய சொல்லால் "யாம் சென்று வினைமுடிக்கும் சுரத்தின்கண் நீ வருவதற்கு ஆற்றாய்" எனப் பலபடக் கூறியும்; தாம் தொடங்கிப் பொருளீட்டும் முயற்சியை மேற்கொண்டு அதனிற் பொருந்தியொழுகுபவர்; இற்றை நாளால் நெடிய பொய்கையின்கண்ணே பொருந்திய நீரில்லாத நீண்ட வழியிலே; சிவந்த அடியினையுடைய மரா மரத்தின்அழகிய பக்கத்திலே பொருந்தி வளைந்த வில்லையுடைய வீரர் மிக்கிருக்கின்ற நிலைமையைநோக்கியும் அச்சங்கொள்ளாது; மலைமுழையிலே கிடந்த பெரிய உகிரையுடைய பெண்புலியின் இனிய குட்டிகளை ஈன்றதனாலாகிய நோயும் பசியும் தீரும்படியாக; சினமிகுத்துச் சிவந்த கண்ணையுடைய கொல்லவல்ல பெரிய புலியேற்றை; ஓங்கிய கொம்பினையுடைய களிற்றியானையின் புள்ளி யமைந்த முகத்திலே சென்று பாயாநிற்கும் செல்லுதற்கரிய சுரத்தின்கண்ணே செல்லாநிற்பர்; அவர் செல்லுவதனை அறிந்த யான் சிறிதும் வருந்துவேனல்லேன், நீயும் அவ்வண்ணம் வருந்தாதே கொள்; அவர் செல்லுங் காரியம் அவர்க்குக் கைகூடுவதாக!
பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது. - கள்ளம்பாளனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 148. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, அவர், இனிய, தோழி, பெரிய, சிவந்த, சென்று, தாம், சங்க, எட்டுத்தொகை, கூறியும், ஆற்றாய், செங், பொருந்தி