நற்றிணை - 147. குறிஞ்சி

யாங்கு ஆகுவமோ- 'அணி நுதற் குறுமகள்! தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல் செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி, அன்னை ஆனாள் கழற, முன் நின்று, |
5 |
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை அறியலும் அறியேன்; காண்டலும் இலனே; வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து, சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, |
10 |
தலை இறைஞ்சினளே அன்னை; செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே? |
தோழீ! அன்னையானவள் என்னை நோக்கி "அழகிய நெற்றியையுடைய இளமகளே! இடமகன்ற மலைச் சாரலின்கணுள்ள சிறிய தினையின் பெரிய கதிரை; சிவந்த வாயையுடைய பசிய கிளி கொய்துகொண்டு போகின்ற அளவும் நீ அதனைக் காவாது ஆங்குநின்று எவ்விடத்திற்குச் சென்றனை"? என்று கூறி; அமையாளாகிப் பலபடியாக வினாவுதலும் நீ அச்சமுற்று, அவள்முன் நின்று 'மூங்கிற் பிளவாற் செய்த கிளிகடி கருவியாகிய தட்டையையுடைய யான் அருவி யொலிக்கும் பெரிய மலைநாடனைக் காதாலே கேட்டறிதலுஞ் செய்திலேன்; கண்ணாலே காண்டலுஞ் செய்திலேன்; மலர்ந்த பூக்களைப் பறித்து அவனோடு சுனையிலே பாய்ந்து ஆடியதுஞ் செய்திலேன் என்று; நினைவில்லாது பொய்யுஞ் சொல்லாயாய் ஐயோ! உண்மையை யுரைத்துவிட்டனையே!; அதனைக் கேட்டு அன்னை சினத்தோடு வெள்கித் தலையிறைஞ்சி நின்றனள் கண்டாய்!; ஆதலின் நீ தினைப்புனத்தின் கண்ணே செல்லுதலைப் போக்கிக்கொண்டனை மன்!; இவ்வளவு அறியாமையையுடைய நீ இனி எங்ஙனம் குடிமை பூண்டொழுகவல்லாய் என்று எவரும் இரங்கத் தக்கனையாயினை; அவளது முனிவினுள்ளே படிதலால் இனி யாம் எவ்வண்ணம் உய்யவல்லேமோ?
சிறைப்புறமாகத்தோழி சொல்லியது. - கொள்ளம்பக்கனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 147. குறிஞ்சி, இலக்கியங்கள், அன்னை, குறிஞ்சி, செய்திலேன், நற்றிணை, பாய்ந்து, பெரிய, அதனைக், அருவி, கேட்டு, கூறி, எட்டுத்தொகை, சங்க, கிளி, சென்றனை, நின்று