நற்றிணை - 131. நெய்தல்

ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும், உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ- உயர் மணற் சேர்ப்ப! திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, |
5 |
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும், நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன், கள் கமழ், பொறையாறு அன்ன என் நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே? |
உயர்ந்த மணற் பரப்பினையுடைய நெய்தனிலத் தலைவனே!; திரைத்தல் முதிர்ந்த அரயையுடையவாய வளைந்த அடி மரத்தையுடைய தாழையினது சுறாமீன் கொம்பு போன்ற இருபுறமும் முள்ளையுடைய இலை முறிந்து சாயும்படி; இறாமீனை இரையாகத் தின்ற நாரையின் கூட்டம் தங்குதல் கொள்ள வீற்றிருக்கும்; கள்ளுணவையுண்டலான் மகிழ்ந்திருத்தலையுடைய நல்ல தேரையுடைய பெரிய னென்பானது; கள்ளின் மணங் கமழும் 'பொறையாறு' என்னும் ஊர் போன்ற என்னுடைய நல்ல தோள்கள்; நெகிழும்படி நீயிர் எம்மை மறப்பதற்கு யாம் நும்மையின்றி; வேறு விளையாட்டு அயர்தற்குத் தொழிலையும் நும்மையின்றி வேறு பிரிந்து சென்று தங்கி இருப்பதற்குச் சோலையையும் நும்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும் நும்பால் ஊடுதலையுமுடையமோ?; அங்ஙனமாயின் நீயிர் மறந்திருப்பீர், இல்லையே; ஆதலின் நீயிர் மறவாமையால் நுமது உள்ளத்தே உள்ளேமன்றோ? அதனால் இவள் தோள் நெகிழ்ந்து வேறுபட்டில; அவ் வேறுபடாமையை யான் ஆற்றினேன் என்பது மிகையன்றோ?;
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 131. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, நீயிர், நல்ல, நும்மையின்றி, வேறு, தோள், அன்ன, எட்டுத்தொகை, சங்க, மணற், பொறையாறு