குறுந்தொகை - 99. முல்லை - தலைவன் கூற்று
(பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினாவிய தோழிக்கு, “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.)
உள்ளினென் அல்லனோ யானே உள்ளி நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை இறைத்துணச் சென்றற் றாஅங்கு |
5 |
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே. | |
- அவ்வையார். |
உயர்ந்த மரத்தினது கிளையைத் தொட்டுப் பெருகும் மிக்க வெள்ளம் பிறகு கையால் இறைத்துண்ணும் அளவு சிறுகிச் சென்று அற்றது போல வெள்ளத்தைப் போன்ற அவ்வளவு பெரிய காம நோய் இங்கே யான் வருதலால் முடிவடையும்படி யான் ஆழ்ந்து எண்ணினேனல்லேனோ? அங்ஙனம் எண்ணி மீட்டும் மீட்டும் மிகநினைவு கூர்ந்தேனல் லேனோ? அங்ஙனம் நினைவு கூர்ந்து என் நினைவு நிறைவேறுதற்கு மாறாக இருக்கும் உலகத்தியல்பை எண்ணி மயங்கினேன் அல்லேனோ?
முடிபு: காமம் கடைக்கொள யான் உள்ளினென் அல்லெனோ? நினைத்தனென் அல்லெனோ? மருண்டனென் அல்லெனோ?
கருத்து: யான் எப்பொழுதும் உங்களை நினைத்திருந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 99. முல்லை - தலைவன் கூற்று, யான், இலக்கியங்கள், தலைவன், முல்லை, அல்லெனோ, அல்லனோ, குறுந்தொகை, கூற்று, அங்ஙனம், எண்ணி, நினைவு, மீட்டும், காமம், உள்ளினென், எப்பொழுதும், எட்டுத்தொகை, நினைத்தனென், மருண்டனென், சங்க